தும்பிக்கையான் துணையிருப்பார்!

வடகேரளம், காசர்கோட்டில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள மத்தூரில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமத் அனந்தீஸ்வர ஸித்தி கணபதி! மதுவாகினி ஆற்றங்கரையில், அழகிய நுட்பத்துடன் கட்டப்பட்ட பிரமாண்ட ஆலயம் இது. மூலவர், சிவனார்; அவரின் திருநாமம்- ஸ்ரீமத் அனந்தீஸ்வரர். ஆனால், இங்கே முக்கியத்துவம் அவரின் திருமகன் ஸ்ரீமகா கணபதிக்குத்தான்! பன்னெடுங் காலத்துக்கு முன்பு, இந்தக் கோயிலை அமைக்கும்போது, ஸ்ரீவிநாயகர் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய மறந்துவிட்டனராம். அப்போது, அங்கேயுள்ள பாறை ஒன்றில் ஸ்ரீவிநாய கரின் திருவுருவம் தோன்றியதாக (அந்தத் திருவுருவை கோயில் அர்ச்சகரின் மகன் வரைந்ததாகவும் சொல்வர்) தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு. அன்று முதல், இந்த ஆலயத் தின் பிரதான நாயகன், ஸ்ரீகணபதிதான்! ஸ்கந்த புராணம் மற்றும் பிரம்ம புராணத் தில், மத்தூர் கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். மதாரு எனும் பெண்மணி, அரிவாளால் புற்களை வெட்டிக்கொண்டிருந்தாள். அப்போது, பூமியில் அரிவாள் பட்ட இடத்தில் இருந்து குபுக்கென்று ரத்தம் பீறிட்டதாம். அதைக் கண்டு அதிர்ந்த மதாரு, ஓடோடிச் சென்று மன்னரிடம் தெரிவிக்க... 'உன் அரிவாளை கிழக்குத் திசையில் வீசி விடு’ என்றார் மன்னர். அவளும் அப்படியே செய்தாள். அந்த அரிவாள், மிகவும் தொலைவில் இருந்த மதுவாகினி நதிக்கரையில் விழுந்ததாம். மன்னரும் மந்திரிகளும் பொதுமக்களும் திரண்டு சென்று, அரிவாள் விழுந்த இடத்தைப் பார்த்தனர். அங்கே, புலியும் பசுவும் மிகுந்த நேசத்துடன் சேர்ந்து நிற்பதைக் கண்டு வியந்தனர். பிறகு, ரத்தம் வந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, அங்கிருந்து வெளிப்பட்டதுதான், மூலவரின் சிவலிங்கத் திருமேனி. பிறகு, அரிவாள் விழுந்த இடத்தில் அழகிய ஆலயத்தை அமைத்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டார் மன்னர். அந்தப் பகுதி, மதாருவின் பெயரால் அழைக்கப்பட்டு, பிறகு மத்தூர் என மருவிப்போனதாம்! 1784-ஆம் வருடம், திப்பு சுல்தான் இந்தக் கோயிலுக்கு வந்து, ஆபரணங்களை அபகரிக்க முயன்றான். ஸ்ரீமகா கணபதியின் சந்நிதிச் சுவரை தனது வாளால் தாக்கிய அதே நொடியில், அவனுக்குள் ஏதோவொரு மாற்றம்... சட்டென்று கோயிலை விட்டுக் கிளம்பிச் சென்று விட்டான். அவனுடைய வாள் பட்டுப் பள்ளமாகிப் போன சந்நிதிச் சுவரை இன்றைக்கும் காணலாம்! இங்கே, ஸ்ரீமகா கணபதிக்கு, 'மூடப்ப சேவை’ எனும் வைபவம் சிறப்புற நடைபெறும். ஸ்ரீமகா கணபதியை, நெய் மற்றும் அரிசியால் தயாரிக்கப்பட்ட அப்பங்களால் அலங்கரித்து, பிரமாண்ட மான கணபதியின் திருவிக்கிரகத்தை முழுவதுமாக மூடிவிடுவார்கள்! இந்த வைபவம் சுமார் 160 வருடங் களுக்கு முன்பு நடத்தப்பட்டது. பிறகு, 1962 மற்றும் 1992-ஆம் வருடங்களில், ஏப்ரல் மாதத்தில் இந்தத் திருவிழா நடைபெற்றது. கேரள மக்கள், நிலம்- வீடு, வண்டி- வாகனங்கள் என எது வாங்கினாலும், வீடுகளில் கல்யாணம், காதுகுத்து என எந்தச் சுபகாரியம் செய்தாலும், மத்தூர் ஸ்ரீமகா கணபதியைத் தரிசித்துவிட்டுத்தான் காரி யத்தில் இறங்குகின்றனர். சுப காரியங்களுக்குப் பக்கத் துணையாக இருந்து, பக்தர்களை வாழ வைக்கும் ஸ்ரீமகா கணபதியைத் தரிசியுங்கள்; மகிழ்ச்சியும் சுபிட்சமும் கூடும்!

Comments