வேலூரிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது சேண்பாக்கம். 1677ம் வருடம், துக்கோஜி என்ற மராட்டிய மந்திரியின் கனவில் தோன்றிய கணபதி, தன்னுடைய பதினொரு மூர்த்தங்கள் அத்தலத்தில் புதைந்திருப்பதாகவும் அவற்றைக் கொண்டு கோயில் கட்டுமாறும் அறிவுறுத்தினார். உடனே துக்கோஜி அங்கே அழகான சிறிய கோயிலை அமைத்தார். கோயிலில், பாலவிநாயகர், நடன விநாயகர், ஓங்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்தி&புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து, ஓம் எனும் பிரணவ வடிவத்தில் இருக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளும். விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தைச் சொல்லும் ஞான மூர்த்திகள் அவை. ஏனெனில் அந்த விநாயகர்கள், எந்த உருவமுமற்று வெறும் கோளங்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் உற்றுப்பார்த்தால், விநாயகர் நிழலாய் மறைந்திருப்பது புலப்படும். இதுதான் சேண்பாக்கத்தின் சிறப்பம்சம். ஆறாவதாக உள்ள செல்வ விநாயகர் தினமும் அபிஷேகம் பெறுகிறார்.
ஆழத்துப் பிள்ளையார்
திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தினுள், ஆழத்துப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். 18 அடி ஆழத்தில் உள்ளதால் இந்த விசித்திரப் பெயர்! ஷோடச கணபதிகளை (16 வித பிள்ளையார் உருவங்கள்) நினைவுபடுத்தும் விதமாக பதினாறு படிகள் உள்ளன. நுண்ணியதாக, அணுவுக்குள் அணுவாக அமைந்து எல்லாவற்றிற்கும் ஆதார சக்தியாக வெகு ஆழத்தில் அமைந்து இவர் ஆட்சிபுரிகிறார் என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது. எல்லோராலும் அறியப்பட்ட ‘திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்....’ என்று தொடங்கி, ‘பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்’ என்று முடியும் பதிகம் இத்தல ஆழத்துப் பிள்ளையாரைப் பற்றியதுதான். விநாயகருக்கான அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.
பிரளயம் காத்தவர்
கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்திலிருந்து தற்போதைய திருப்புறம்பியம் தலத்தைக் காக்க தந்தையின் ஆணைப்படி விநாயகப் பெருமான் ஓம்காரத்தினை பிரயோகித்து ஏழு கடல்களின் சக்தியையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். பிரளயம் காத்தார். பிரளயம் காத்த பிள்ளையாரானார். இவரது திருமேனி கிளிஞ்சல், சங்கு, கடல்நுரை, நத்தான்கூடு போன்ற கடல் பொருட்களால் ஆனது. சந்தனநிற சுயம்புவான இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். ஆச்சரியம் என்னவென்றால் அவ்வளவு தேனையும் விநாயகப் பெருமான் தன் திருமேனி மூலம் உறிஞ்சிக் கொள்வார்! தேனபிஷேகத்தின்போது செம்பவள மேனியனாக ஜொலிப்பார். அதனாலேயே இவரை தேன் உறிஞ்சும் பிள்ளையார் என்றும் அழைக்கிறார்கள். இந்த அபிஷேகக் காட்சியை காண்போர் கோரும் வரங்கள், அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் ஈடேறி விடுகின்றன. பிரளயத்திற்கு புறம்பாக, பிரளயத்தை மீறியதால் இத்தலத்தை திருப்புறம்பியம் என்றழைத்தனர். கும்பகோணத்திற்கு வடமேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.
அச்சு முறித்து ஆட்கொண்டவர்
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்களை அழிக்க, ஈசன் தேரில் சென்றார். உடன் அவருடைய படையினர். தன் துணை இல்லாமல் யாருக்கும் எந்த காரியமும் சித்தியாகாது என்பதை உணர்த்த விரும்பிய ஆனைமுகன், தன் நீள் கரங்களால் தேரின் அச்சை நறுக்கென்று ஒடித்தார். ஈசன் உட்பட அனைவரும் தவறு செய்து விட்டோமே என தவித்தனர். கைகூப்பி தம் தவறை மன்னிக்கச் சொல்லி அவர்கள் வேண்டிக் கொண்டபோது, அந்தக் கருணை நாயகன், ஒரு பெருஞ் சக்தியை அவர்களுக்குள் ஓடவிட்டார். இப்போது தேர் சீராகி இன்னும் அதீத பலத்தோடு புறப்பட்டது. தேரின் வேகத்திற்கும் மேலாக விநாயகனின் அருள் உடன் வந்தது. திரிபுரம் இறங்கி அசுரப் பெருங்கூட்டத்தைப் பார்த்தார் ஈசன். அவரது கோபக்கனலின் மத்தியில் விநாயகன் தோன்ற, அதைக் கண்ட அசுரர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அந்தக் கனல் திரிபுரத்தை எரித்தது. ஈசன் திரிபுராந்தகனாய் திகழ்ந்தார். அச்சு முறிந்து இரு பாகமானதால் இத்தலம் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றாகியது. இந்த விநாயகர், ஆட்சீஸ்வரர் கோயிலுக்குச் சற்று வெளியே ‘அச்சுமுறி விநாயகர்’ எனும் திரு நாமத்தோடு அருள் பாலிக்கிறார். நம் வாழ்வெனும் தேரை எந்தத் தடங்கலும் இன்றி அழகாக ஓடச்செய்கிறார். அச்சிறுப்பாக்கம், திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே உள்ளது.
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.