அந்த விநாயகரை சிவன் கோயில்களில் கன்னி மூலையில் பிரதிஷ்டை செய்து அழகு பார்ப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் பல பெயர்களில் இவர் எழுந்தருளியுள்ளார். பொதுவாக, இவர் துணைவியின்றிதான் காட்சியளிப்பார். ஆசியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரத்துடன் உச்சிஷ்ட கணபதியாக சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே இவர் கோயில் கொண்டுள்ளார்.
விநாயகரை வணங்கி பரமானந்தம் அடைந்தவர்களில் மணிக்கிரீவனும் ஒருவன். இவன் குபேரனின் மகன். முன்னொரு காலத்தில் சாவர்ணன் என்ற மன்னன் அரசாண்டு வந்தான். அப்போது இந்த மணிக்கிரீவனும் அங்கு வாழ்ந்து வந்தான். இவன் எல்லா தர்மங்களும் அறிந்தவன். நீதிமான், சிவபக்தன். விநாயகப் பெருமானிடமும் சுப்ரமணியருடனும் சகோதர பாவனையில் பக்தி புரிவான். ஒரு நந்தவனத்தை கண்டான். அங்கே கந்தர்வ ராஜாவான சித்ரசேனன் என்பவனின் மகள், சித்ரலேகாவை பார்த்தான். அவள் பேரழகியாக விளங்கினாள்.
அவள் மணிக்கிரீவனின் ஒரு பார்வையிலேயே அவனிடம் மயங்கினாள். அதோடு அவனிடம், ‘‘நீங்கள் கட்டாயம் ஏற்றுகொள்ள வேண்டும்’’ என்றும் தெரிவித்தாள். அதைக் கேட்ட மணிக்கிரீவன், “அம்மா, உன் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் உன் தந்தையாரின் அனுமதி இல்லாமல் நான் உன்னை ஏற்றுகொள்ள மாட்டேன்’’ என்றான். அதைக் கேட்ட சித்ரலேகா, “என் தந்தையாரின் அனுமதி பெற்று வரும்வரை நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு மணிக்கீரிவன் சம்மதித்தான். உடனே தன் தந்தையிடம் வந்து விருப்பத்தை தெரிவித்தாள். அதற்குச் சற்றும் மறுப்பு தெரிவிக்காத கந்தர்வராஜன் தன் உறவினர்களையும் அழைத்து வந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மணிக்கிரீவனுக்கு மகளை மணமுடித்து வைத்தான்.
தம்பதியர் வாழ்க்கை இனிதே நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் மற்றொரு கந்தவர்னின் மகளாகிய லீலாவதி, தற்செயலாக மணிக்கிரீவனை சந்தித்தாள். உடனே அவன் அழகில் மயங்கினாள். அதுமட்டுமல்லாமல் மணிக்கிரீவனிடம், “என்னையும் உன் மனைவியாக ஏற்று கொள்ளவேண்டும்’’ என்றாள். மணிக்கிரீவன் மறுத்தான். உடனே லீலாவதிக்கு கோபம் வந்தது. “என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க உன் அழகுதானே காரணம்! எனவே உன் அழகு அழியட்டும்’’ என்று சபித்து விட்டாள். உடனேயே அவன் அழகு மங்கியது. அதிர்ச்சியடைந்த அவன், “ஆணவம் பிடித்த உன் அழகும் அழியட்டும்’’ என்று லீலாவதியை சபித்தான். அவளும் அழகிழந்தாள்.
மனம் நொந்துபோன மணிக்கிரீவன், விநாயகரை தியானித்தான். தனக்கு சாப விமோசனம் கிடைக்குமா என்று மானசீகமாக வேண்டிக் கொண்டான்.
மணிக்கிரீவனின் பக்திக்குக் கட்டுப்பட்ட விநாயகப் பெருமான் அங்கு வந்தார். “வருத்தப்படாதே. தட்சிண பாரதத்தில் என் தாய், தாமிரபரணி என்னும் மகா நதியாக ஓடுகிறாள். அங்கு ஸ்நானம் செய். அங்குள்ள காலபைரவரை பூஜித்தால் உன் சாபம் தீரும். பழைய வடிவம் பெறுவாய்’’ என்றார். “உன்னை அடைய வேண்டும் என்று நினைத்த லீலாவதிக்கும் அந்த சமயத்தில் சாபவிமோசனம் கிடைக்கும். சித்ரலேகாவுடன் லீலாவதியையும் மணந்து கொண்டு, மூவரும் குபேரபட்டினத்தில் வாழ்வீர்கள்’’ என்று கூறினார். தனது தும்பிக்கையால் மூவரையும் தூக்கி, தாமிரபரணியில் சேர்த்தார்.
தாமிரபரணியில் ஸ்நானம் செய்த உடனேயே கால பைரவரும் விநாயகப் பெருமானும் மூவருக்கும் காட்சி தந்தார்கள். அவர்களுடைய சாபம் நீங்கியது. விநாயகப் பெருமானின் உத்தரவின்படி மணிக்கிரீவன் லீலாவதியை திருமணம் செய்து கொண்டான். அந்த மூன்று பேரையும் விநாயகப்பெருமான் குபேர பட்டிணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சாப விமோசனம் நடந்த இடம் தான் மணி மூர்த்திஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. மணிக்கிரீவனுக்கு விமோசனம் கொடுத்த மூர்த்தி உறையும் தலம்.
தாமிரபரணியில் மூவரும் மூழ்கிய இடத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. அவை: பைரவ தீர்த்தம் , மணிக்கிரீவ தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம். இந்த கோயிலுக்கு, பல தோற்றங்களில் பிள்ளையார்கள் சிற்பமாகக் காட்சி தரும் ஐந்து அடுக்கு ராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் கோட்டை சுவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இடித்து நொறுக்கப்பட்டு, அந்த கற்கள், பாலம் மற்றும் அணைகள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே சுற்றுச் சுவர் அதற்கு சாட்சியாக உடைந்த நிலையிலேயே உள்ளது.
கோயிலுக்குள் மூலவராக உச்சிஷ்ட கணபதி அருள்கிறார். உச்சிஷ்ட கணபதி விநாயகப் பெருமானின் பதினாறு முக்கிய வடிவங்களில் ஒன்றாகும். நீல சரஸ்வதி சமேதராக அவர் எழுந்தருளியிருப்பார். உச்சிஷ்ட என்றால் எச்சில் என்பது பொருள். நாம் எதை உண்டாலும் வாயில் மீதம் உள்ளது எச்சில்தான். இவ்வுலகில் எது இருந்தாலும் இல்லையானாலும் மிஞ்சி இருப்பதும் எப்போதும் இருப்பதும் பிரம்மம்தான். அந்த மிஞ்சி இருக்கும் பிரம்ம சக்திக்கே உச்சிஷ்ட என்று பொருள். அதோடு உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே உயர்வானது என்று மற்றொரு பொருளும் உண்டு. மாயையான இந்த உலகை நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது இந்த உச்சிஷ்ட கணபதி எனும் பிரம்மம்தான். சுத்தம் அசுத்தம் என்ற இருவேறு நிலைகளை கடந்தவரே உச்சிஷ்ட கணபதி.
உச்சிஷ்ட கணபதியின் பக்கத்தில் சிவலிங்கக் கருவறை இருக்கிறது. இந்த சிவலிங்கத்தை உளியை கொண்டு செய்த காரணத்தினால், உளிப்பட்ட சிவமேனி சித்த பீடம் என்று அழைப்பர். இதை சித்தர் ஒருவர் அடக்கமான இடம் என்றே கூறுகிறார்கள். இதை ஸ்தாபித்த மூர்த்தி செட்டியார் என்பவர், மணப்படை வீடு ராஜாவாக இருந்தவர் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இந்த கோயிலை கட்டி குழந்தை பேறு பெற்றார் என்றும் கூறப்படுகிறது. தெற்கு நோக்கியபடி அம்பாள் சந்நதி. ஆனால் உள்ளே விக்கிரகம் இல்லை. தரை முழுவதும் பெயர்ந்து காணப்படுகிறது. இக்கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டு நாயக்க மன்னர் காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அரிய கோயில்களில் இதுவும் ஒன்று. கோயிலை சுற்றி வந்தால் வௌவால் கூட்டம் பறந்து நம் தலையில் மோதுகிறது. கற்கள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கின்றன. பெரிய பொக்கிஷமான இந்தக் கோயில் பொலிவிழந்து காணப்படுவதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இங்கே சித்தர்கள் நாக ரூபத்தில் காட்சி தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த கோயிலுக்கு ரதவீதி, மற்றும் மாடவீதிகள் உண்டு. இவையெல்லாவற்றிலும் தற்போது மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன.
தாமிரபரணியில் உள்ள மூன்று தீர்த்த கட்டங்களிலும் தீர்த்தமாடி மணிமூர்த்திஸ்வரம் உச்சிஷ்ட கணபதியை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பைரவரின் மகிமையால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
இந்த கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பணியில் பங்கு பெற விரும்புவோர் 9842169113, 8903546751 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை சந்திப்பில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
Comments
Post a Comment