நீங்கள் பகவான் கிருஷ்ணரை திருடன், கள்ளன், பொய்யன், கொடியன் என்று எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள். ஆனால் ஒன்றே ஒன்று... வெறுமனே திருடன், பொய்யன் என்று சொல்லாமல், 'கண்ணன் திருடன், கண்ணன் பொய்யன், கண்ணன் கள்வன்’ என்று அவனுடைய பெயரையும் சேர்த்துச் சொல்லித் திட்டுங்கள். ஏனென்றால், அவனுடைய திருநாமத்தை உச்சரித்தாலே நமக்கு நற்கதி கிடைக்கும். அப்படிப்பட்ட தயாளன் அவன்! துவாபர யுகத்தில், அப்படிக் கண்ணனின் பெயரைச் சொல்லித் திட்டியதால்தான், சிசுபாலன் நற்கதி அடைந்தான்.
சிசுபாலன் 'அசத்’. அதாவது, கொடியவன். அப்படி 'அசத்’தாக இருப்பவனுக்கே கிருஷ்ணன் நற்கதி கொடுத்தானென்றால், 'சத்’தாக, 'சத்புருஷர்’களாக வாழ்பவர்களைக் கைவிட்டுவிடுவானா, அந்தப் பரந்தாமன்?! தன்னுடைய சீடர்களை அழைத்துக்கொண்டு பி¬க்ஷக்குச் சென்று சாப்பிட்ட குரு, விருந்தில் பரிமாறப்பட்ட வடைகளை விரும்பிச் சாப்பிட்டார். பிறகு, மேலும் ஒரு வடையை எடுத்து ஒரு குச்சியில் கோத்து, அதைத் தன் சீடனிடம் கொடுத்து, 'இந்த வடையை பத்திரமாக வைத்திரு. பிறகு சாப்பிடலாம்’ என்று சொல்லி, ஆஸ்ரமக் குடிசையில் செருகி வைக்கச் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து, சீடனை அழைத்து அந்த வடையை எடுத்து வரச் சொன்னார். திரும்பி வந்த சீடன், 'குச்சியைக் காணோம்’ என்றானாம். வடையின் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டு வந்த எலியானது, வடையை லபக்கிக்கொண்டு சென்றுவிட்டது. 'குச்சியைக் காணோம்’ என்று சீடன் சொன்னதும், 'குச்சி போனால் போகிறது. வடை எங்கே?’ என்று கேட்கவில்லை குருநாதர். குச்சியே காணாமல் போய்விட்டதென்றால், வடை மட்டும் அங்கே இருக்கவா செய்யும்?! இந்தக் கதை சொல்லும் சேதி வெகு அழகு!
இதனை 'தண்டாபூபந்யாயம்’ என்பார்கள். அதாவது, தண்டம் என்றால் குச்சி; கோல். அபூபம் என்றால் வடை. தண்டமே இல்லாத போது, அதில் செருகப்பட்டிருந்த வடை மட்டும் இருக்கவா செய்யும்? அப்படித்தான், 'அசத்’துகளுக்காக இருப்பவர்களுக்குக்கூட மோட்சம் கிடைக்கிறதென்றால், 'சத்’தாகத் திகழ்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!
பகவான் ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைந்து, அவனுடைய திருநாமங்களை மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் சொல்லி வந்த சத் கோபியர்களும், சத் ஆச்சார்யர்களும், சத் ஆழ்வார்களும், சத் பெற்றோர்களும் நற்கதியை அடைந்தனர்; பகவானின் திருவடியை அடைந்தனர்; வைகுண்டத்துக்குச் செல்லும் பாக்கியம் பெற்றனர்.
எத்தனையோ தத்து வார்த்தங்களையும் ஞான மார்க்கங்களையும் போதித்து அருளிய ஸ்ரீஆதி சங்கரர், 'இறுதியில் நமக்குத் துணைக்கு வருவதும், நாம் நற்கதி அடைவதற்கு வழிவகுப்பதும் பஜ கோவிந்தம் மட்டுமே!’ என அருளியுள்ளார். அப்பேர்ப் பட்ட உன்னதமானது அவனுடைய திருநாமம்!
ஆனால் என்ன... 'எனக்குக் கார் கொடு, பங்களா கொடு, கை நிறைய காசு கொடு, வீடு- வாசலைக் கொடு, நகை நட்டுக்களைக் கொடு’ என்று கேட்கிறோமே தவிர, நற்கதி என்கிற அற்புதமான சொத்து குறித்து அவனிடம் கேட்பதே இல்லை. 'நான் உன் சொத்து; எனவே நற்கதி எனும் சொத்தினை எனக்கு வழங்கி அருள்வாயாக!’ என்று ஒருபோதும் பிரார்த்திப்பதே இல்லை. 'உனக்கு நான் அடிமை’ என்று பகவானிடம் சொல்லிச் சரணடைந்தால், அவன் நமக்கு அடிமையாவான்! ஆனால், நாம் என்ன செய்கிறோம்?
'பகவான் என்பவர் மிகப் பெரிய கடலுக்குச் சமமானவர். நாமெல்லாம் மிகச் சிறிய துரும்பைப் போன்றவர்கள். பகவான் எனும் கடலில், துரும்பாகிய நம்மை அலையானது தூக்கிக் கரையில் போட்டுவிடுமே! பிரமாண்டமான கடலை, துளியூண்டு துரும்பு எப்படி நெருங்க முடியும்? அப்படி நெருங்கினாலும், அதை அந்தச் சமுத்திரம் ஏற்கவும் ஏற்காது!’ என்று நினைத்துக்கொண்டு, தூரத்திலேயே நின்று கொள்கிறோம்.
ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கடலில் வாழ்கிற மீன்களையும் திமிங்கிலங்களையும் கரையில் ஒதுக்கித் தள்ளி விடுகின்றனவா, அலைகள்! 'கடலே! உனக்கு நான் அடிமை’ என்பது போலல்லவா, மீன்களும் திமிங்கிலங்களும் கடலும் தண்ணீருமே கதி என்று கிடக்கின்றன!
ஆனால் துரும்பானது, 'நீ யாரோ... நான் யாரோ’ என்பது போல் ஒட்டியும் ஒட்டாமலும் விட்டேத்தியாகத்தானே இருக்கிறது!
நாம் அப்படி இல்லாமல், மீன்களும் திமிங்கிலங்களும் கடலுக்கு அடிமையாக இருப்பதுபோல, நாமும் கடவுளுக்கு அடிமையாக இருந்துவிட வேண்டும்; முழுவதுமாக அவரைப் பற்றிக் கொண்டுவிட வேண்டும்; எந்தப் பாசாங்கும் இன்றி, பகவானைப் பரிபூரணமாகச் சரணடைவதே உத்தமம். அதுவே 'சத்’ காரியம்; 'சத்’கதி. அதனால்தான், 'சத்கதிஹி’ எனும் திருநாமத்தைச் சொல்லி, 'நற்கதியைத் தர வல்லவன்’ என்று பகவானைப் போற்று கிறோம் என்கிறார் ஆழ்வார்.
முன்பே சொன்னதுபோல், நாம் ஸ்ரீகிருஷ்ணருக்கு அடிமையாகிவிட்டால், பகவான் நமக்கு அடிமையாகி விடுவார்.
'சத்கதி’ என்கிற நல்ல விஷயங் களைத் தர வல்லவன் அவன். அதேபோல், 'சத்க்ருதி’ என்றும் அவனைப் போற்றுவார்கள். 'க்ருதி’ என்றால், செயல்கள்; விளையாட் டுக்கள் என்று அர்த்தம். 'சத்க்ருதி’ என்றால், நற்செயல்கள்; நல்ல விளையாட்டுக்கள்!
அது சரி, விளையாட்டில் நல்ல விளையாட்டு, கெட்ட விளை யாட்டு என்றெல்லாம் உண்டா என்ன?
உண்டு. நாம் ஆடுகிற ஆட்டம் வேறு; பகவான் ஆடுகிற ஆட்டம் வேறு. நம்முடைய ஆட்ட- பாட்டங்கள் யாவும் சம்சார பந்தத்தில், அதாவது இல்லறத்தில் நம்மை இன்னும் இன்னும் தள்ளும். பகவானின் ஆட்டத்தை, விளையாட்டை உணர்ந்து கொண்டால், சம்சார பந்தத்தில் இருந்தும், அதன் பிரச்னைகளில் இருந்தும் நாம் கரை சேரலாம்.
பகவான் ஸ்ரீகண்ணன் தயிரையும் வெண்ணெயையும் திருடித் தின்று விளையாடினான். முட்டிக்கால்கள் தேயத் தேய, இங்கும் அங்குமாகத் தவழ்ந்தும், நடந்தும், ஓடியும் விளையாடினான். அவனுடைய விளையாட்டுக் களையும் சேட்டைகளையும் பொறுக்கமுடியாமல், உரலோடு அவனைச் சேர்த்துக் கட்டிப் போட்டுவிட்டாள் அவன் தாய்.
உரலுக்கும் கயிற்றுக்கும் கட்டுப் பட்டவன் போல, அவற்றைத் தன்னால் ஒன்றுமே செய்யமுடியாது என்பது போல விளையாட்டுக் காட்டினான் கண்ணன் என அவனுடைய 'சத்க்ருதி’களை, நல்ல விளையாட்டுக்களை வெகு அழகாகச் சொல்கிறார் பராசரபட்டர்.
'திவ்வியமான என்னுடைய இந்தப் பிறப்பையும், அந்தப் பிறப்புக்குப் பிறகு நான் வளர்ந்ததையும் எவரொருவர் நினைக்கிறாரோ, உண்மையாகப் புரிந்துகொள்கிறாரோ, அவருக்கு அதுவே கடைசிச் சரீரம்’ என அர்ஜுனனிடம் அருளியுள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
ஸ்ரீகண்ணனின் பிறப்பை நினைக்க நினைக்க நமக்குப் பிறப்பு இல்லை. அதே போல், அவனுடைய கோகுலாஷ்டமி நன்னாளின்போது, அவனுக்குப் பிரியமானவற்றையெல்லாம் வழங்கிப் பிரார்த்திப்பதும், அவனது அவதாரத்தை நினைத்து உணர்வதும் சகல சம்பத்துக் களையும் வழங்கும்.
வீடுகளில் இனிப்பு, காரம் போன்ற பட்சணங்களைத் தயார் செய்துவிட்டு, அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வைப்பார் கள் அம்மாக்கள். மறுநாள், குழந்தைகள் நைஸாக அந்தப் பாத்திரத்தைத் திறந்து பார்த்தால், அதில் பட்சணங்கள் இருக்காது. அவற்றையெல்லாம் இரவோடு இரவாக வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிப் பாதுகாப்பாக வைத் திருப்பாள், அம்மா. ஆனாலும், அந்தப் பாத்திரத்தைக் கண்டு பிடித்து, பட்சணங்களைத் தின்று தீர்ப்பதில் குழந்தைகள் கில்லாடிகள்.
யசோதையும் குறும்புக் கண்ண னுக்குப் பயந்து தயிர், வெண்ணெய் ஆகியவற்றைப் பானை பானையாக மாற்றிக்கொண்டே இருப்பாள். மாற்றி வைப்பது அவளுடைய வேலை; அதைக் கண்டெடுத்துத் தின்று தீர்ப்பது கண்ணனின் விளையாட்டு!
''வெண்ணெயும் தயிரும் பாலும் குடம் குடமாக இருந்தென்ன... அவற்றையெல்லாம் ரசித்துத் தின்பதற்கு ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கியவள்தானே நீ? பிறகு ஏன், கண்ணன் தின்னக்கூடாது என்று ஒளித்து வைக்கிறாய்?'' என்று தோழியருத்தி கேட்க...
''ஐயோ! அவன் தின்னக்கூடாது என்பது என் நோக்கமில்லை. தயிர், வெண்ணெய், பால் ஆகியவை அளவுக்கு அதிகமாக உள்ளே சென்றால், கண்ணனின் அந்தச் சின்ன வயிறு தாங்குமா? அவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்றுதான் கவலைப்படு கிறேன்'' என்றாளாம் யசோதை.
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு, திருடுவதையும் தின்பதையும் ஆனந்தமாகத் தொடர்ந்தான் ஸ்ரீகண்ணன்.
Comments
Post a Comment