'பால் பாயச நைவேத்தியம் செய்து, பாலகிருஷ்ணனை வழிபட்டால், பிள்ளை வரம் கிடைக்கும்; மனவளர்ச்சி குன்றியவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்!’ என்கின்றனர் திருச்சி பகுதி மக்கள்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீம நகர். இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் கோயில். இப்போது கோயில் உள்ள பகுதி, ஆங்கிலேயர் காலத்தில் பட்டாலியன்களின் மிகப் பெரிய முகாமாக இருந்ததாம். அந்த இடத்தில் சுயம்புமூர்த்தமாகத் தோன்றி, அருட்காட்சி தந்தாள் ஸ்ரீகாளிதேவி. எனவே, அந்த இடத்தில் ஸ்ரீகாளியம்மன் கோயில் உருவானது.
பின்னாளில், இந்தப் பகுதியில் உள்ள யாதவ மக்களில் ஒருவர், 'எங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே எங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர்தான். எனவே, இந்தக் கோயிலில் ஸ்ரீகண்ணபரமாத்மாவுக்கு சந்நிதி அமைத்து வழிபட விரும்புகிறோம்’ எனத் தெரிவிக்க, காளிதேவியும் சம்மதித்தாள். அதையடுத்து, கையில் புல்லாங்குழலும் அருகில் பசுமாடுமாக, அழகு கொஞ்சும் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள்.
காலப்போக்கில், ஸ்ரீகாளியம்மன் கோயில் என்று சொல்வது மாறி, தற்போது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என்றழைக்கும் அளவுக்கு, அனைவருக்கும் கேட்ட வரங்களை தந்தருளிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன்.
ஸ்ரீகிருஷ்ணனின் சாந்நித்தியத்தை அறிந்து சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் மட்டுமின்றி, இலங்கையில் இருந்தும்கூட பக்தர்கள் வந்து, ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கின்றனர்.
குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்கவேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும் பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
மாதந்தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள்; பூரண குணம் பெறுவார்கள் என்பது திருச்சி வாழ் மக்களின் நம்பிக்கை.
இங்கு, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாள், மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்ஸவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும். ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இதுவர, பீமா நகர் கிருஷ்னன் கோவில் பற்றி
ReplyDeleteதெரிந்திருக்கலை. உங்க பதிவு மூலம் தெரிந்து
கொண்டேன். இங்கெல்லாம் இஸ்கான் டெம்பில் தான்
பெரும்பாலும் இருக்கு. எந்த ரூபத்தில் இருந்தாலும் கிருஷ்ணர் கிருஷ்ணர் தானே.