காட்டுப் பகுதிகளில் உள்ள சிவலிங்கங்களைத் தேடித் தேடி தரிசித்துக் கொண்டிருந்த அகத்தியர், பயஸ்வினி நதியின் கரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பரமனை, பனங்காட்டீசனாக வழிபட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் அவா. என்ன காரணமோ, வழியெங்கும் பனங்காடென்ன, பனை மரம் ஒன்றைக் கூட காணவில்லை!
தேடிப் பார்த்துக் கொண்டே வந்த அகத்தியரின் கண்களில், அந்தப் பனந்தோப்பு தென்பட்டது.
ஆஹா! பனைக் கூட்டம். அப்படியானால், இங்கே பனங்காட்டு நாதராக இறைவன் எழுந்தருளியிருக்கக் கூடும். சுற்றிச் சுற்றிப் பார்க்க, அந்தச் சுயம்புலிங்கம் மெள்ளத் தட்டுப்பட்டது.
மகிழ்ச்சிப் பெருக்கில் கூத்தாடிய அகத்தியர், பாடிப் பரவி வழிபடத் தொடங்கினார். தால (பனை) மரத்துக்கு அடியில், தாலபுரீஸ்வரராக பரம்பொருளை வழிபட்டார். அகத்தியர் மனமுருகிப் பாடப் பாட ... சடாமுடிதாரியான சிவப் பரம்பொருளை அந்த லிங்க மூர்த்தத்துள் கண்டு பாடப் பாட ... சடைமுடிக்குள் கட்டுப்பட்டுக் கிடந்த கங்கைப் பெருமாட்டி, உருக்கம் தாங்காமல் ஓடோடிப் பெருகினாள். சடா கங்கை தீர்த்தமாக வெளிப்பட்டாள்!
இன்றைக்கும் 'சடா கங்கை', ஒரு தீர்த்த குளமாகக் காட்சி தரும் திருத்தலத்தைக் காண வேண்டுமா? வாருங்கள், வன்பார்த்தன் பனங்காட்டூர் போகலாம்.
இருங்கள், இருங்கள். வன்பார்த்தன் பனங்காட்டூர் என்று தேடினால் கிடைக்காது. திருப்பனங்காடு என்பதுதான் இப்போதைய பெயர். காஞ்சிபுரம்- கலவை பாதையில், ஐயங்கார்குளத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்றவுடன், திருப்பனங்காடு கூட்டு ரோடு வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊர்.
முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும் ஊர். கூட்டு ரோடிலிருந்து ஊருக்குள் செல்ல, நல்ல சாலை உண்டு; களைப்பு தெரியாமலிருக்கும்படி இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களும் உண்டு.
ஊரின் கோடியில் திருக்கோயில்.
வன்பார்த்தன் பனங்காட்டூர். அதென்ன பெயர்?!
தம்முடைய வன்தொண்டரான சுந்தரரிடம், 'யாம் வன்பாக்கத்துக்கும் பனங்காட்டூருக்குமாய் உள்ளோம்!' என்று இறைவன் அருளினாராம். பக்கத்திலேயே, வெம்பாக்கம் (பழைய வன்பாக்கம், இப்போது வெம் பாக்கமாகி, வெண்பாக்கமும் ஆகி விட்டது) என்றும் ஓர் ஊர் உள்ளது. வன்பாக்கத்துக்கு அருகிலுள்ள பனங்காட்டூர்; இதுவே, வன்பார்த்தன் பனங்காட்டூர்.
ஏற்கெனவே, மற்றொரு பனங்காட்டூரை, நாம் கண்டிருக்கிறோம். விழுப்புரம்- புதுச்சேரி பாதையில், முண்டி யம்பாக்கத்துக்கு அருகிலுள்ள அது, புறவார் பனங்காட்டூர். அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், இது வன்பார்த்தன் பனங்காட்டூர் எனப்படுகிறது.
சிறிய ஊர் என்றாலும், கோயில் நல்ல பராமரிப்புடன் விளங்குகிறது. தேவகோட்டை ஏகப்பச் செட்டியார் என்னும் பெருமகனார், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். அவருடைய புதல்வர்கள் காலத்தில், திருப்பணிகள் நிறைவடைந்து, 1929-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அவரின் குடும்பத்தினரும் வழித்தோன்றல்களும் இன்றளவும், மிகச் சிறப்பாகக் கோயிலைப் பராமரித்து, விழாக்களையும் திருப்பணியையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய திருக்கோயிலுக்கு எதிரில், சற்றே வடக்காக சடாகங்கை தீர்த்தம். நன்கு படிகள் கட்டமைக்கப்பட்ட பெரிய திருக்குளம். குளக்கரையில் கங்காதேவியின் சிலை.
தீர்த்தத்தை வணங்கிவிட்டுத் திருக்கோயிலுக்குள் நுழைகிறோம். முகப்பு வாயில் மட்டுமே உண்டு; வெளியில் ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயிலில் நுழைந்து உள்ளே சென்றால், பலிபீடம், கொடிமரம், நந்தி. தொடர்ந்து, மூன்று நிலை கோபுரத்தைக் கொண்ட உள்வாயில். கொடிமரத்தின் அருகில் நின்று லேசாக நமக்கு இடப் புறம் திரும்பினால், மற்றுமொரு பலி பீடம், கொடிமரம், நந்தி. என்ன இது?
ஆமாம். இந்தக் கோயிலில் இரண்டு மூலவர்கள்; இரண்டு சந்நிதிகள்; இரண்டு அம்பாள்கள்; அம்பாள்களுக்கும் தனித்தனியாக இரண்டு சந்நிதிகள். அடுத்தடுத்து அமைந்து, கிழக்கு நோக்கியிருக்கும் இரண்டு சுவாமி சந்நிதிகளுக்கான கொடிமர- நந்திகளையே நாம் இங்கே காண்கிறோம். கொடிமரங்களும் நந்திகளும் அமையப் பெற்ற இதுவே வெளிப் பிராகாரம். வாயிலுக்கு நேர் எதிரில் உள்ளவை, புலஸ்திய ரிஷி வழிபட்ட கிருபா நாதேஸ்வரர் எனும் மூலவருக்கான கொடிமரம்.
வெளிப் பிராகாரத்தை வலம் வரத் தொடங்குகிறோம். பிராகாரத்தின் கிழக்குச் சுற்றில் அடுத்திருப்பது, அகத்தியர் வழிபட்ட தாலபுரீஸ்வரருக்கான கொடிமரம். இதற்கு நேர் எதிரில், கோயில் உள்மதிலில், ஒரு சாளரம். கிழக்குச் சுற்றின் மூலைகள் இரண்டிலும், தல மரங்களான பனை மரங்கள். வெளிப் பிராகாரத்தின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்குச் சுற்றுகளில் நந்தவனம். வலம் வருவதற்கு ஏற்ப நடுவில், நல்லதொரு தளப் பாதை அமைத்திருக்கிறார்கள்.
வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்து, உள் வாயிலை அடைகிறோம். ஒரு பக்கத்தில் செல்வகணபதி; மற்றொரு பக்கத்தில் தண்டபாணி. சகோதரர்கள் இருவரையும் வணங்கி வழிபட்டு, உள் புகுகிறோம். எதிரில் இரண்டு சுவாமி சந்நிதிகளும், வலப் புறம் இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெரிகின்றன. நான்கு சந்நிதிகளுக்கும் சேர்த்தாற்போன்ற முகப்பு மண்டபப் பகுதியில் நிற்கிறோம் என்றாலும், இப்படியே உள் பிராகாரத்தை வலம் வந்து விடலாம்.
வாயிலை அடுத்தபடியாக, கிழக்குச் சுற்றில் சூரியன். தொடர்ந்து, வெளிப் பிராகாரத்திலிருந்து பார்த்தோமே, அந்தச் சாளரம். இந்தக் கோயிலில் இரண்டு சுவாமி சந்நிதிகள் அல்லவா. உள்வாயிலில் நுழைந்ததும், நேரே தெரிவது அருள்மிகு கிருபா நாதேஸ்வரர் சந்நிதி. வாயிலுக்கு நேரே உள்ள கொடிமரமும் நந்தியும், இந்தச் சந்நிதிக்கானவை. இப்போது சாளரம் காண் கிறோமே, இதற்கு நேர் எதிராக இருப்பது அருள் மிகு தாலபுரீஸ்வரர் சந்நிதி. சாளரத்துக்கு எதிராக வெளியில் உள்ள கொடிமரமும் நந்தியும், இந்தச் சந்நிதிக்கானவை.
கிழக்குச் சுற்றிலிருந்து தெற்குச் சுற்றுக்குள் திரும்புகிற பகுதியில், வாகனங்கள் வைக்கப்பட்டுள் ளன. தெற்குச் சுற்றில், பக்கவாட்டு வாசல். தொடர்ந்து அறுபத்துமூவர் பெருமக்கள்; சைவ நால்வர்; அடுத்து, உற்சவ அறுபத்து மூவர். தென் மேற்கு மூலையில், விநாயகப் பெருமான். அருகி லேயே இன்னொரு பிள்ளையார்... இவருக்குப் 'பக்கத்துப் பிள்ளையார்' என்றே திருநாமம். அடுத்து மீனாட்சி சொக்கலிங்கம் சந்நிதி. அடுத்து தலமரத்தின் சிலை வடிவம்; தொடர்ந்து மகாலிங்கம். அடுத்துள்ள பகுதியில், உற்சவ மூர்த்தங்கள் வைக்கப் பட்டுள்ளன. சோமாஸ்கந்தர் மற்றும் பிரதோஷ நாயகரின் திரு மேனிகள் அழகோ அழகு. அடுத்து, கஜலட்சுமி. வடமேற்குப் பகுதியில், வள்ளி- தெய்வானை உடனாய முருகப் பெருமான்; நான்கு திருக்கரங்களுடன் மயில் வாகனனாகக் காட்சி தருகிறார். மயிலின் முகம் திசை மாறியுள்ளது.
மேற்கிலிருந்து வடக்குச் சுற்றுக்குள் திரும்பினால், யாகசாலை. அடுத்து, நவக் கிரகங்கள்; அவரவர் வாகனங்களுடன் எழுந்தருளியுள்ளனர். அடுத்து, நடராஜ சபை. கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் ஆடல்வல்லான் ஆடிக் கொண்டிருக்கிறார்; அம்மையோ, மனதைக் கொள்ளை கொள்ளும் படியாகத் தாளமிட்டுக் கொண்டிருக்கிறார். நடராஜரைப் பணிந்து நடந்தால், லேசாகத் திரும்பி, அம்பாள் சந்நிதிகளின் பின் புறமாக வலம் வருகிறோம். வடகிழக்கு மூலையில், பைரவர் சந்நிதி. அடுத்து சந்திரன். வலத்தை நிறைவு செய்து, சுவாமி சந்நிதிகளின் முன்பாக நிற்கிறோம். முகப்பு மண்டபப் பகுதியின் தூண்களும் சிற்பங்களும் நமது கவனத்தை ஈர்த்தாலும், சுவாமியை வணங்கிவிட்டுத்தான் வருவோமே!
அகத்தியர் வழிபட்ட தாலபுரீஸ்வரரை முதலில் வணங்கி, பின்னர் புலத்தியர் (புலஸ்திய ரிஷி) வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வழிபடுவதே முறை. அதன்படியே, தாலபுரீஸ்வரர் சந்நிதியை அடைகிறோம். இரண்டு சுவாமி சந்நிதிகளும் அருகருகே அமைந்துள்ளன; இரண்டும் கிழக்குப் பார்த்தவை; இரண்டின் கட்டுமான அமைப்பும் ஒரே போன்றவை. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் இரண்டு சந்நிதி களுக்கும் சேர்ந்தாற்போல், ஸ்நபன மண்டப அமைப்பும் உள்ளது.
தாலபுரீஸ்வரர் சந்நிதி முன்பாக நிற்கிறோம். ஸ்நபனப் பகுதியில், சிறிய நந்தி. மகா மண்டப வாயிலில் துவார பாலகர்கள்; மற்றும் துவார கணபதி. பெரிய துவாரபாலகர்களைத் தாண்டி... நம் பார்வை, உள்ளிருக்கும் மூலவரை நோக்கிச் செல்வதற்கு முன்பாக, வேறு ஏதோவொன்று கவனத்தை ஈர்க்கிறது. என்ன?
துவார வாயிலையே சற்று உற்று நோக்குங்கள். வாயில் சுவரிலேயே, சிறியதாக, ஆனால் தீர்க்கமாகத் தெரியும் அந்த வடிவங்களைப் பாருங்கள். துவார வாயிலில் ஒரு புறம் அகத்தியர்; இன்னொரு புறம் தலமரமான பனை. கல்சிற்பங்களாகக் காட்சி தரும் இந்த வடிவங்கள் மிக அழகு!
மெதுவாக நமது கவனத்தை இழுத்துத் திருப்பி, உள்ளே நோக்கிப் பார்வையைச் செலுத்தினால், அருள்மிகு தாலபுரீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடை யாரில் பெரிய பாணத்துடன் காட்சி தரும் சுயம்பு லிங்க மூர்த்தி. தாலபுரீஸ்வரரை வணங்கி நாம் நிற்கும்போது, நமக்கு வலப் பக்கத்தில், அதாவது தாலபுரீஸ்வரருக்கு வடக்காக அமைந்துள்ளது அருள்மிகு கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. இரண்டு சந்நிதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளதால், அவரையும் வழிபட்டுவிட்டே, மூலவர்களை வலம் வரலாம்.
Comments
Post a Comment