கிருஷ்ணா... கிருஷ்ணா...



பல்லவ தேசத்தின் வனப்பகுதி அது. அந்த வனத்தில் வேட்டையாடு வதற்காக மன்னன் அடிக்கடி வருவது வழக்கம். ஒரு நாள், 'நாளை விடிந்ததும், வேட்டைக்குச் செல்ல வேண்டும்; அனைவரும் தயாராக இருங்கள்’ என்று படையினருக்குத் தெரிவித்த மன்னன், உறங்கச் சென்றான்.

அன்றிரவு, மன்னனின் கனவில் வந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, 'நீ வேட்டைக்குச் செல்லும் வனத்தில், எனக்கொரு ஆலயம் எழுப்பி, என்னை வழிபடு! உன்னுடைய தேசத்தை செழிக்கச் செய்கிறேன். உனது குடிமக்களை எந்த நோய் நொடியும் அண்டாமல் பார்த்துக் கொள்கிறேன்’ என அருளினார். இதைக் கேட்டுச் சிலிர்த்து எழுந்த மன்னன், விடிந்தும் விடியாததுமாக வனத்துக்குச் சென்றான். அங்கே அருமை யானதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீகிருஷ்ணருக்குக் கோயில் கட்டி வழி பட்டான். பிறகு, அந்த தேசம் செழித்துச் சிறந்தது என்கிறது ஸ்தல வரலாறு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்டபாளையம். ஒருகாலத்தில், வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத் தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் (எஸ்.வி.ஜி.புரம் என்றும் சொல்வர்). திருத்தணி- சோளிங்கர் வழி செல்லும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இந்த ஊரில் நின்று செல்கின்றன.



இந்தத் தலத்து இறைவனுக்கு, ஸ்ரீசந்தானவேணுகோபால ஸ்வாமி எனும் திருநாமம். தாயாரின் திருநாமம்- ஸ்ரீபத்மவல்லி நாயகி. ஸ்ரீருக்மிணி மற்றும் ஸ்ரீசத்தியபாமாவுடன், நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதனால், இவரை ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீராமானுஜர், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பெரியாழ்வார் போன்ற ஆழ்வார் பெருமக்களும் இங்கே தரிசனம் தருகின்றனர்.

மலைகளும் பசுமையும் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக அமைந்திருக்கும் ஆலயத்தைத் தரிசித்தாலே, நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடுகிறது. வலது புற மலையை கருடாத்ரி மலை என்றும், இடது புற மலையை ரிஷபாத்ரி மலை என்றும் சொல்வர்.

குழந்தை பாக்கியம் இல்லாத வர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து திருமஞ்சனம் செய்து பிரார்த் தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர், இந்த ஊர்க்காரர்கள்.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நாளில் திருவீதியுலா, சிறப்பு பூஜைகள், உறியடி உத்ஸவம் என அமர்க்களப் படுமாம், ஆலயம்.

Comments