கேட்டதைக் கொடுப்பான் ஸ்ரீகிருஷ்ணன்!




ஈரோடு மாவட்டம், ஈரோடு- சென்னிமலை சாலையில் உள்ளது மயிலாடி. இந்த ஊருக்கு அருகில் உள்ள வேலம்பாளையத்தில் கோயில்கொண்டு, அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார், ஸ்ரீகிருஷ்ண பெருமாள் ஸ்வாமி!


ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஆலயம். சுமார் 500 வருடங்கள் பழைமை மிக்க திருக்கோயில் இது. ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியதாம். அதற்குச் சின்னதாக ஒரு சந்நிதி அமைத்து, தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் வழிபடத் துவங்கினார்கள் ஊர்மக்கள். அடுத்தடுத்த காலகட்டங்களில், ஸ்ரீகிருஷ்ணரின் பேரருளைப் பெற்று செழித்தவர்கள், கோயிலுக்கு நில புலன்களை வழங்கினார்கள்; திருப்பணிக்கு உதவினார்கள்!

தற்போது அர்த்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீகிருஷ்ணபெருமாள் கோயில். கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீகிருஷ்ணர், கொள்ளை அழகு! இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; திருமண வரம் கைகூடும். நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர், மிகவும் விசேஷமானவர். இவருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சார்த்திப் பிரார்த்தித்தால், மனக்கிலேசங்கள் யாவும் விலகிவிடும்; எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.


புரட்டாசி சனிக்கிழமைகள், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஆகியவை சிறப்புற கொண்டாடப் படுகின்றன. அன்றைய நாளில், ஸ்ரீகிருஷ்ணருக்குத் திருமஞ்சனம் செய்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, சிறப்பு பஜனைகள், உறியடி உத்ஸவம் என அமர்க்களப்படுமாம், ஆலயம்.

ஸ்ரீகிருஷ்ணபெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் யாவும் விரைவில் நடந்தேறும். ஸ்ரீகிருஷ்ணபெருமாளை வணங்கிவிட்டுத் தொழி லைத் துவக்கினால், வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்; லாபம் கொழிக்கும் என்கின்றனர் ஊர்க்காரர்கள்.

மேலும், ஸ்ரீகிருஷ்ணருக்கு வஸ்திரம் சார்த்தி, திருமஞ்சனம் செய்து வணங்கினால், தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஈரோடு மாவட்ட பெண்களின் நம்பிக்கை.

Comments