திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொழிற் பேட்டைக்கு அருகில் உள்ளது அத்திப்பட்டு. இந்த ஊரில், முப்பெருந்தேவியரின் அம்சமாகத் திகழ்ந்து, அனைவருக்கும் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் ஸ்ரீதேவி செல்லியம்மன்.
அம்பத்தூர் டன்லப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அத்திப்பட்டு. பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.
இந்தப் பகுதி வழியே செல்லும் வியாபாரிகளும் பொதுமக்களும் அம்மனை வணங்கிவிட்டுத்தான் அன்றாடப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீதேவி செல்லியம்மனை வணங்கிச் சென்றால், வியாபாரம் செழிக்கும்; செல்வம் பெருகும் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். கோயிலுக்கு முன்புறம் அரச மரத்தடியில் காட்சி தருகிறார் ஸ்ரீசக்தி விநாயகர். அரச மரத்துடன் வேம்பும் இணைந்து காட்சி தரும் அழகே அழகு! இங்கேயுள்ள புற்றுக்குப் பால் வார்த்து, நாகர் விக்கிரகங்களுக்குப் பாலபிஷேகம் செய்து வணங்கினால், நாக தோஷம் விலகுமாம். ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, நவகன்னியர் மற்றும் நவக்கிரக சந்நிதி உள்ளன.
கார்த்திகை சோமவாரங்களில் (திங்கட்கிழமை) இங்கு வந்து, அம்மனை வணங்கினால், நினைத்த காரியங்கள் ஈடேறும்; விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கப் பெறலாம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பெண்கள்.
வைசூரி, அம்மை முதலானவற்றால் அவதிப்பட்டால், இங்கே அம்மனுக்கு அபிஷேகித்த தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்று உட்கொள்ள, விரைவில் அந்த நோய்கள் இறங்கிவிடுமாம்!
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில், ராகு கால வேளையில் ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன. அப்போது, எலுமிச்சை தீபமேற்றி, ஸ்ரீதுர்கையை மனதார வணங் கினால், பயம் நீங்கி, சந்தோஷமும் நிம்மதியும் மனதுள் குடிகொள்ளும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. பௌர்ணமி தோறும் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுவதைத் தரிசிப்பது விசேஷம்!
நவராத்திரியின் பத்து நாள் விழாவின் போது, அத்திப்பட்டு ஊரே அமர்க்களப் படும். அப்போது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சித்திரை மாதப் பிறப்பு அன்று அம்மனுக்கு வளைகாப்பிட்டு, வளையல்கள் வழங்கிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.
கோயிலில் உள்ள தீர்த்தக் கிணறு விசேஷம். அதிகாலையில் ஆலயத்துக்கு வந்து, தீர்த்தக் கிணறில் நீராடி, அம்மனை வணங்கிப் பிரார்த்திக் கின்றனர். பிறகு பிரார்த்தனை நிறைவேறியதும், அம்மனுக்குப் பொங்கல் படையலிட்டு, கூழ் வார்த்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்து கின்றனர், பக்தர்கள்!
தகவலுக்கு நன்றி ... நல்ல பதிவு ....
ReplyDelete