குமரமலை முருகன் மகிமை!










வழக்கம்போல், பச்சை நிற வேட்டியைக் கட்டிக் கொண்டு, முருகப்பெருமானை நினைத்து விரதமிருக்கத் துவங்கிவிட்டனர், செட்டிநாட்டு மக்கள்!

தைப்பூசத்துக்கு ஏழெட்டு நாட்கள் இருக்கும் போதே, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கந்தனை வணங்கியபடி, தோளில் ஜோல்னாப் பையும், விரித்துக் கொள்வதற்கு வெள்ளை நிற சாக்கும் எடுத்துக்கொண்டு, நடக்கத் துவங்கிவிடுவது அவர்களின் வழக்கம். ஆம், பழநிக்குப் பாதயாத்திரையாகச் சென்று, முருகனைத் தரிசிப்பது, காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாயிற்றே!

செட்டிநாட்டுப் பகுதியில் இருந்து கிளைபிரிந்து செல்லும் வழியெங்கும் சின்னச் சின்ன கிராமங்கள். இவை, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைக் கோடிப் பகுதிகளுக்கு உட்பட்டவை. இந்தக் கிராமங்களில், குன்னக்குடிப்பட்டி எனும் ஊரும் ஒன்று (காரைக்குடிக்கு அருகில் உள்ள குன்றக்குடி அல்ல!).

இந்தக் கிராமத்தில் இருந்து பொன்னமராவதி வழியே சென்று, சிங்கம் புணரியை அடைந்து, நத்தம், கொட்டாம்பட்டி, திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம், ஆயக்குடி வழியே பழநியை அடைவார்கள்!



குன்னக்குடிப்பட்டி மக்கள் விரதம், பச்சை நிற ஆடை, பஜனை, அன்ன தானம் என மனம் நிறைந்த குதூகலத்துடன் விரதத்தில் ஈடுபட்டிருந்தனர். 'இன்னும் ரெண்டு நாள்ல யாத்திரை கிளம்பறோம்ப்பு’ என்று அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், சேதுபதி தேவர் மட்டும் சோகத்தில் இருந்தார்.

கிட்டத்தட்ட 90 வயதைக் கடந்த சேதுபதி தேவர், சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருபவர்; வார்த்தைக்கு வார்த்தை 'முருகா சரணம், முருகா சரணம்’ என்று அவன் நாமத்தை பக்திப் பெருக்கோடு உச்சரிப்பவர்; 'இந்த வருசமும் பாதயாத்திரையா உன்னை வந்து பார்க்கிறேம்ப்பா’ என்று விரதத் துவக்க நாளில் மெய்யுருகிச் சொன்னவர்; மற்றவர்களிடமும் அந்தச் செய்தியைச் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டவர். ஆனால், இப்போது சோகத்தில் தவித்து மருகியபடி இருந்தார். தள்ளாமைதான் காரணம்!

'அப்பனே, முருகா! உடம்புல உசுரு இருக்கற வரைக்கும் பழநிக்குப் பாதயாத்தி ரையா வருஷா வருஷம் உன்னை வந்து பார்த்துக்கிட்டிருக்கணும்னு நினைச்சிருந் தேன். ஆனா, இந்த முறை வரமுடியுமானு தெரியலியே! பார்வை மங்கிருச்சு; எல்லாமே கலங்கலாத்தான் தெரியுது. முழங்கால் ரெண்டும் வீங்கிருச்சு; அடிப்பாதங்கள் லேசா வளைஞ்சு, துவள ஆரம்பிச்சிருச்சு; ஆடுகால் தசை, சுண்டு விரல் அளவுக்கு வந்துட்டப்புறம், நிக்கவோ நடக்கவோ முடியலியே, முருகா! முதுகுத் தண்டு வேற பலமிழந்து, கூன் போட்டிருச்சு உடம்பு. எதுவும் சாப்பிட முடியலை; அப்படியே சாப்பிட்டாலும் பேதியாயிருது; வாந்தி வந்துருது. உன்னைப் பார்க்க முடியாதா, இந்த முறை? கடைசியா ஒரேயரு தடவை, உன்னைப் பார்த்துட்டு, கட்டையைச் சாய்ச்சுக்கறேனே முருகா!’ என்று கண்ணீர் விட்டார், சேதுபதி தேவர்.



அழுது தீர்த்த களைப்பில், அப்படியே தூங்கிப் போனார். கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'என் சேதுபதி அழலாமா? உன் ஊருக்கு அருகில் உள்ள மலையில், புதர் ஒன்றில் இருக்கிறேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்!’ என்று சொல்லி மறைய... விடிந்தது!

நடக்க முடியாமல் நடந்து, ஓட முடியாமல் ஓடி, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி, கனவில் முருகப் பெருமான் குறிப்பிட்ட அந்த மலையைக் கண்டார் சேதுபதி தேவர். சந்தோஷம் கொண்டார்.

சிரமப்பட்டு மலையேறினார்; செடி, கொடி களையெல்லாம் விலக்கித் தேடினார். இறுதியில், புதர் ஒன்றில் அழகிய விக்கிரக ரூபமாய்க் காட்சி தந்த முருகனைக் கண்டார். 'முருகா சரணம், முருகா சரணம்...’ என அரற்றியபடி, கண்களைக் கசக்கிக்கொண்டு பார்க்க... அந்த விக்கிரகம் மறைந்துபோனது.

'என்னை ஆட்கொண்ட என் முருகனே!’ என நிம்மதிப் பெரு மூச்சு விட்டபடி, ஊருக்குச் சென்று விஷயத்தைச் சொல்ல... பிரமித்துப் போனார்கள் மக்கள்.

பிறகென்ன... அந்த மலையில் அழகன் முருகனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. இதனால் அந்த மலை, குமரமலை என்று அழைக்கப்பட்டது. பின்னாளில், அதுவே, ஊரின் பெயராகவும் அமைந்தது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது குமரமலை. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு; புதுக்கோட்டையில் இருந்து காரையூர் வழியே பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், குமரமலை வழியாகத்தான் செல்லும். குமரமலை கோயில் நுழைவாயில் வளைவில் இருந்து சுமார் 1 கி.மீ. பயணித்தால், குமரமலையையும், அங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீபாலதண்டாயுதபாணியையும் தரிசிக்கலாம்.



சின்ன மலைதான்; அங்கே, நின்ற கோலத்தில் அருள்பவரும் 'பால’தண்டாயுதபாணிதான்! சக்தி வாய்ந்த தெய்வம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். பழநி முருகப்பெருமானைப் போன்று இடுப்பில் கை வைக்காமல், கைகளைத் தொங்க விட்டபடி அருளுகிறார்; அதே போல், மழித்த தலையுடன் இல்லாமல், உச்சிக் குடுமியுடன் அந்தணரைப் போல் காட்சி தருவதும் சிறப்பு எனச் சிலாகிக்கின்றனர், ஊர்க்காரர்கள். புதுக்கோட்டை சமஸ்தானக் கோயிலுக்கு உட்பட்ட இந்தக் கோயில், அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஸ்ரீபாலதண்டாயுதபாணியை மனதாரப் பிரார்த்தித்து, இங்கேயுள்ள மலையில், பாதத்தை வரைந்து நேர்த்திக் கடன் செலுத்தினால், வாத நோய் நீங்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

அறந்தாங்கி, கறம்பக்குடி முதலான பல ஊர்களில் இருந்தும், பக்தர்கள் பாதயாத்திரையாக இங்கு வந்து, முருகனைத் தரிசித்துச் செல்கின்றனர். சோமவாரம் (திங்கட்கிழமை), அமா வாசை மற்றும் விசாகம் ஆகிய நாட்களில் பாதயாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ வந்து, கந்தக் கடவுளைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் ஈடேறும்; சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும்; சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவர் என்று கந்தவேளை வணங்கி நலம் பெற்றவர்களும் பலம் பெற்றவர்களும் தெரிவிக்கின்றனர்!

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment