அற்புதம் நிகழ்த்தும் ஆகாச துர்கை!









துன்பத்தை அழித்து, இன்பத்தையும் நிம்மதி யையும் தருபவள் ஸ்ரீதுர்கை. இவளை வழிபட, சகல தெய்வங்களையும் வழிபட்ட பலன்கள் வந்தடையும் என்பார்கள்.

ஸ்ரீபிரும்ம துர்கை, ஸ்ரீருத்ர துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீஸ்தூல துர்கை, ஸ்ரீசூலினி துர்கை, ஸ்ரீஅக்னி துர்கை, ஸ்ரீஜல துர்கை, ஸ்ரீவன துர்கை, ஸ்ரீமகா துர்கை என நவதுர்கா தேவியர் அருள்பாலிப்ப தாகச் சொல்கின்றன புராணங்கள். இவர்களில், ஸ்ரீவன துர்கை சக்தி வாய்ந்தவள் என 'உபா சனை வழிகாட்டி’ எனும் நூலில் தெரிவிக்கிறார் துர்கைச்சித்தர். இந்த தேவி, வனப்பகுதியில், வன்னி மரத்துக்கு அருகில் குடியிருப்பதில் அகம் மகிழ்ந்து போவாளாம். இவளைக் கர்மசிரத்தையுடன் எவர் ஒருவர் வணங்கு கிறாரோ, அவரது கவலைகளும் பிரச்னைகளும் அந்த வனத்திலேயே காணாமல் போய்விடும்; நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வீடு திரும்புவார் என்பது ஐதீகம்!

தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், ஸ்ரீதுர்கைக்குச் சந்நிதிகள் இருக்கின்றன.ஆனால், தனிக் கோயில் அமைந்திருப்பது குறைவு. குறிப்பாக, ஸ்ரீவன துர்கை கோயில் கொண்டிருப்பது மிக அரிது!



தமிழகத்தில், நாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு அருகில் உள்ளது கதிராமங்கலம். இங்கே, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்பையும் அருளையும் வாரி வழங்குகிறாள் ஸ்ரீவன துர்கை. கும்பகோணத்தில் இருந்து சூரியனார்கோவில் வழியே குத்தாலம் செல்லும் பேருந்தில் பயணித்தால், இந்தக் கோயிலை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறை யில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது கதிராமங்கலம். சோழ வள நாட்டில், உத்திரவாஹினியாக காவிரி பாய்ந்தோடுகிற தலங்களில், கதிரா மங்கலமும் ஒன்று.

இந்தத் தலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில், ராகு கால வேளையில் வந்து, எலுமிச்சை தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட்டால், ராகுவால் உண்டான தோஷங்கள் யாவும் விலகும். அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், திருமணத் தடை விலகும்; நினைத்தபடி நல்ல வரன் அமையப் பெறுவார்கள்; இல்லறத்தில் ஒரு குறையுமின்றி கருத்தொருமித்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்! பௌர்ணமி நன்னாள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்து வணங்குவது, மிகுந்த பலனைத் தரும் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

தேவர்களுக்கும் முனிவர் பெருமக்களுக் கும் கொடுமைகள் விளைவித்த அசுரர்களை, மகா சக்தியாக, ஸ்ரீதுர்கையாக உருவெடுத்து, அழித்தொழித்தாள் தேவி. பிறகு, சிவனாரை வேண்டி, உலக நன்மைக்காகத் தவம் புரிந்தாள். அதுவே, கதிராமங்கலம் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானின் அவதாரத் திருத்தலம் தேரழுந்தூர். இந்தத் தலத்துக்கு அருகில் உள்ளது கதிராமங்கலம். கவிச்சக்ரவர்த்தி, ஸ்ரீவன துர்கை மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாராம்! ஒருமுறை, கம்பர் வீட்டு மேற்கூரை சிதைந்து விட... அன்றிரவு, 'அம்மா, உனது அருள் என்னைக் காக்கும்’ என்றபடி, உறங்கிப்போனார். விடிந்ததும் பார்த்தால், வீட்டின் மேற்கூரை முழுவதும் நெற் கதிர்களால் வேயப்பட்டிருந்தது. இதில் சிலிர்த்துப்போன கம்பர், 'கதிர் வேய்ந்த மங்கல நாயகி’ எனப் பாடினார். இதுவே பின்னாளில், கதிராமங்கலம் என மருவியதாகச் சொல்வர்.

அதுமட்டுமா? சிவ- பார்வதியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க, வேதாரண்யம் தலத்துக்குச் செல்லும் வழியில், அகத்திய மாமுனிவருக்கு ஏற்பட்ட இடையூறுகளைத் தகர்த்து அருளியவளும் ஸ்ரீவன துர்கையே. மிருகண்டு முனிவருக்கு புத்திர பாக்கியம் தந்ததுடன், 'உனது மகனை ஸ்ரீஅமிர்தகடேஸ் வரரைப் பற்றிக்கொள்ளச் சொல். அவனைக் காத்தருள்வார் ஈசன்’ என அருளியவளும் இவளே! அதையடுத்து, திருக்கடவூர் தலத்துக்கு வந்து ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரை ஆரத் தழுவி, எமனிடம் இருந்து தப்பித்து, என்றும் பதினாறாக, மார்க்கண்டேயன் அருள் பெற்றதைத்தான் நாம் அறிவோமே!

அம்மனின் கருவறையின் மேல் பகுதியில் சிறிதான துவாரம் உள்ளது. இதன் வழியே, ஸ்ரீவன துர்கை தினமும் காசியம்பதிக்குச் சென்று வருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு ஸ்ரீஆகாச துர்கை என்கிற திருநாமமும் உண்டு. இந்தத் தலத்தில் இன்னொரு விசேஷம்... இங்கே ஸ்ரீதுர்கையுடன் ஸ்ரீவிநாயகப் பெருமான் இரண்டறக் கலந்து அருள்வதாக ஐதீகம். எனவே, ஸ்ரீவிநாயகருக்குச் சந்நிதி இல்லை.

பொதுவாக சிம்மவாஹினி யாகவும், மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்திலும் காட்சி தரும் ஸ்ரீதுர்கை, இங்கே ஸ்ரீமகா லட்சுமி அம்சமாக, தாமரைப்பூவில் எழுந்தருளியுள்ளாள். வடக்கு நோக்கி காட்சி தரும் ஸ்ரீதுர்கை, இங்கே கிழக்கு நோக்கியபடி தரிசனம் தருவதும் விசேஷம் என்கின்றனர். இவ்வளவு சிறப்பு களுடன்... வலது கரம் சற்றே சாய்ந்த நிலையில், அபய- வரத ஹஸ்தம் காட்டி, தன்னை நாடி வரும் அனைவரின் குறைகளை யும் போக்கி, சகல ஐஸ்வரியங் களும் தந்தருள்கிறாள்!

கோயிலுக்கு எதிரில் தாமரைத் தீர்த்தக் குளம் உள்ளது. மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் குலதெய்வத்தை அறியாமல் வழிபாடு செய்ய முடியவில்லையே எனக் கலங்கித் தவிப்பவர்கள், இவளையே குல தெய்வமாக பாவித்து வழிபடு கின்றனர்.

இல்லறம் சிறக்கவும், சந்ததி தழைக்கவும் ஸ்ரீவன துர்கைக்குச் சந்தன அபிஷேகம் செய்வது சிறப்பு. எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு, குங்குமக்காப்பு சார்த்தி வழிபடுகின்றனர், பக்தர்கள். சர்வ தோஷங்களும் விலகி, வாழ்வில் சந்தோஷம் பிறக்க, ஸ்ரீவன துர்கைக்கு திருமஞ்சனக்காப்பு சார்த்தி வழிபட்டால், பலன் கிடைக்கும் என்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், ஸ்ரீதுர்கைக்கு பால் அபிஷேகம் செய்து, நெய் விளக்கேற்றி, புடவை சார்த்தி, செந்தாமரை மலர்கள் சூட்டி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கதிராமங்கலம் ஸ்ரீவன துர்கையை வணங்குங் கள்; கவலைகள் யாவும் பறந்தோடுவதை உணர்வீர்கள்!

Comments