பரமபதத்து எல்லை- தாமிரபரணியின் தென்கரை திவ்விய தேசமான ஆழ்வார்திருநகரியை இப்படித்தான் போற்றுகிறார் உடையவர், ஸ்ரீராமானுஜர். தென்னாட்டுத் தலங்களுக்கு யாத்திர சென்ற உடையவர், நம்மாழ்வார் அவதரித்த இந்தத் தலத்தின் எல்லையை அடைந்தார்.
பொங்கிப் பெருகியோடும் தாமிரபரணியும், அதன் கரையில் கம்பீரமாக நிற்கும் கோயிலும் அதன் கோபுரமும் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியே பாடலாகவும் வெளிப்பட்டது...
'இதுவோ திருநகரி ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்(து) எல்லை - இதுவோதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்’
- என்று சிறப்பித்தாராம் உடையவர். இவ்வூரின் பழம்பெயர் திருக்குருகூர். 'குருகு’ எனும் சொல் தமிழில் நாரை, கோழி, குருக்கத்தி என்று பொருள்படும். எனினும், 'குருகு’ எனும் பறவையின் பெயராலேயே இத்தலம் திருக்குருகூர் எனப்படுகிறது என்பது ஆய்வாளர்கள் பலரது கருத்து. குருகன் என்ற மன்னன் ஆட்சி செய்த பகுதி இது என்றும் சொல்வர்.
தாமிரபரணி கரையில் ஒன்பது பெருமாள் தலங்கள் உண்டு. நவதிருப்பதிகளான இந்த 9 தலங்களும் அடங்கிய பகுதி, 'திருவழுதி வளநாடு’ எனப் போற்றப்பட்டதாம். நவதிருப்பதிகளில்... தொலைவில்லிமங்கலம் மற்றும் திருக்குளந்தை ஆகிய தலங்களுக்கு இடையே இருந்த 'மங்கலக்குறிஞ்சி’ எனும் இடம் தானம் செய்யப்பட்டதாக திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் தகவல் உண்டு. இதில், தானம் அளிக்கப்பட்ட அந்த இடம், 'திருவழுதி வளநாட்டு மங்கலக்குறிச்சி’ என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தத் திருவழுதி வளநாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது திருக்குருகூர் என்கிறார்கள்.
பெற்றோரை அவமதித்ததால் சாபத்துக்குள்ளான இந்திரன், இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு, விமோசனம் அடைந்ததாக தலபுராணம் சொல்கிறது. திருக்குருகூர் மூலவர்- ஸ்ரீஆதிநாதர். 'திருக்குருகூரதனுள் பொலிந்துநின்ற பிரான்’ எனும் பாசுரத்தின்படி, இங்குள்ள உற்ஸவருக்கு ஸ்ரீபொலிந்துநின்ற பிரான் என்றே திருநாமம். ஸ்ரீஆதிநாதவல்லி, ஸ்ரீகுருகூர்வல்லி என இரண்டு தனிக்கோயில் நாச்சியார்களை தரிசிக்கலாம். தாமாகத் தோன்றிய மூலவரின் திருவடிகள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.
அழகிய மண்டபங்களுடன் மிக அற்புதமாக அமைந்திருக்கும் ஆழ்வார்திருநகரி ஆலயத்தில், ஞானபிரானாக அருளும் ஸ்ரீவராஹ பெருமாளை தரிசிப்பது விசேஷம். இங்கே தனிச்சந்நிதியாய் அமைந்திருக்கும் புளியமரத்தின் (திருப்புளியாழ்வார்) பொந்தில்தான் 16 வருடங்கள் யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் எழுந்தருளி இருந்தாராம் நம்மாழ்வார். இந்த விருட்சத்தை உறங்காப்புளி எனப் போற்றுகிறார்கள். இவ்விடத்திலேயே ஆழ்வாருக்கு மதுரகவிகள் கோயில் அமைத்தார் என்பர். இங்கே அருள்பாலிக்கும் கருடாழ்வாரும் வரப் பிரசாதி. ஆடிச் சுவாதியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நம்மாழ்வார் அவதரித்தது வைகாசி விசாகத்தன்று. இதையட்டி 10 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அப்போது நடைபெறும் கருடசேவை, யாவரும் தரிசித்து இன்புற வேண்டிய வைபவம்!
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.