வண்டலூர் ஸ்ரீநிவாச வரத பெருமாள் கோயில்





அந்தக் காலத்தில், சோழ தேசத்திலும் பாண்டிய நாட்டிலும் பல்லவ சாம்ராஜ்ஜியத்திலும் கட்டப்பட்ட பலப் பல கோயில்கள்தான் வழிபாட்டுத் தலங்களாக, சரித்திரப் பொக்கிஷங்களாக, புராணச் சம்பவங்களின் சாட்சித் தொடர்ச்சியாக இன்றைக்கும் திகழ்கின்றன.


தன் குடையின் கீழ் இருக்கிற தேசத்தைக் கட்டிக் காப்பாற்றுவதையும், அடுத்தவரின் தேசத்தின் மீது போர் தொடுத்து, தனது ஆளுகைக்குள் கொண்டு வருவதையும் மட்டுமே தங்களின் கொள்கையாக, வேலையாக எந்தவொரு மன்னரும் நினைக்கவில்லை. ஒரு தேசம் செழிக்கவேண்டும் என்றால், அந்த நாட்டின் கடைக் கோடி குடிமகன் வரை அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும்; அப்படி அவன் சந்தோஷமாக வாழ்வதற்கு, அவன் கும்பிடுவதற்கு சாமியும், உழைப்பதற்கு பூமியும் இருக்கவேண்டும். சாமியை வணங்குவதற்கு ஆலயங்களை எழுப்புவோம் என்று மன்னர்கள் ஏகமனதாக முடிவு எடுத்ததற்கு, அவர்களுக்குள் இயல்பாகவே இருந்த இறை நம்பிக்கையும் ஒரு காரணம்! அங்கே குடிகொள்ளும் சாந்நித்தியங்கள் நம்மையும் நம் தேசத்து மக்களையும் இன்னும் இன்னும் செழிப்பாக்கும்; வாழவைக்கும் என்பதில் உறுதியாக இருந்தார்கள் மன்னர்கள். 'நாம் எழுப்புகிற ஆலயம், பலப்பல தலை முறைகளைக் கடந்தும், மக்களின் வழிபாட்டுத் தலமாக நிலைத்திருக்க வேண்டும்’ என்று உள்ளன்புடன் கோயில்களைக் கட்டினார்கள். அப்படி ஆயிரம் வருடங்களைக் கடந்த நிலையில், அனைத்துக்கும் சாட்சியாக இன்றைக்கும் இருக்கின்றன, புராதன- புராணப் பெருமைமிக்க பல ஆலயங்கள்!



சோழ தேசமான தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் பிரமாண்டக் கோயில்கள் ஏராளம். பாண்டிய தேசம் எனப்படுகிற தென் மாவட்டங்களிலும் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. பல்லவ தேசம், தொண்டை தேசம் என்று அழைக்கப்படுகிற காஞ்சியம்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் கோயில்கள் பலவும் இருக்கின்றன. சிற்பிகளின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தி, அவர்களுக்குத் தங்குவதற்கு இடமும் தொழில் செய்வதற்கான கூடமும் கொடுத்து, நிலங்களையும் தானமாகத் தந்து, ரசித்து ரசித்து அவர்களின் திறனை வெளிக்கொண்டு வந்தனர், பல்லவ மன்னர்கள். தொண்டை தேசத்தின் இன்னொரு பெருமை... சைவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜைன காஞ்சி எனப் போற்றப்படுகிற தேசம் இது!

எந்த ஊருக்குள் நுழைந்தாலும், அங்கே அழகிய திருக்கோயில்களைத் தரிசிக்க முடியும். தொண்டை தேசத்தில், கஜபிருஷ்ட அமைப்பில் கோயில்களில் கருவறைச் சந்நிதி அமைந்திருப்பது அரிது. அதிலும் குறிப்பாக, வைணவ ஆலயங்களில், கஜபிருஷ்ட அமைப்புடன் கருவறைச் சந்நிதி அமைந்திருப்பது ரொம்பவே அரிதானது.

பல்லவ மன்னரால் அப்படியரு அமைப்புடன் கட்டப்பட்ட, அற்புதமான கோயில் ஒன்று சென்னைக்கு அருகில் இருக்கிறது, தெரியுமா உங்களுக்கு! அந்தக் கிராமத்தின் அப்போதைய பெயர் தெரியவில்லை. இப்போதைய பெயர்... வண்டலூர். சென்னையில் இருந்து தாம்பரத்தைக் கடந்து இந்த ஊரை அடைந்தால், வண்டலூர் ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். ரயில் நிலையத் தில் இருந்து இடது கை பக்கத்தில், உயிரியல் பூங்காவும் வலது கைப் பக்கமாகச் செல்ல... பெருமாள் கோயிலும் வருகிறது. அதாவது, வண்டலூரில் இருந்து படப்பை செல்லும் சாலையில், சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் கோயில்.

இங்கேயுள்ள பெருமாளின் திருநாமம்- ஸ்ரீநிவாச வரத பெருமாள். ஒரு காலத்தில், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர் சகிதம் ஸ்ரீகோதண்டராமராக எழுந்தருளியிருந்தாராம் பெருமாள், இங்கே! ஸ்ரீராமர் கோயில் என்றும், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் என்றும், ஸ்ரீவரதர் ஆலயம் என்றும் பலவாறு அழைத்துள்ளனர், இந்த ஆலயத்தை! ஆனால், அந்நியப் படையெடுப்பின்போது, இங்கிருந்த ஸ்ரீகோதண்டராமர் விக்கிரகத் திருமேனியை, அருகில் செட்டி புண்ணியம் எனும் தலத்தில் வைத்துப் பாதுகாத்ததாகவும், பிறகு அந்த விக்கிரகத்தை அங்கேயே வைத்துப் பூஜைகள் செய்யத் துவங்கியதாகவும் சொல்கின்றனர், ஊர்மக்கள்.

அடுத்தடுத்து வந்த மன்னர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்து, நிலங்களைத் தானமாக அளித்துள்ளனர். தொண்டை மண்டலத்தின் அற்புதமான ஆலயங்களில் ஒன்றெனத் திகழ்ந்த கோயில் இது.

புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில், அந்தப் பக்கம் காஞ்சி புரத்தில் இருந்தும், இந்தப் பக்கம் சென்னையில் இருந்தும், திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்தும், வாலாஜாபாத் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், வண்டலூருக்கு வந்து பெருமாளைக் கண்ணாரத் தரிசித்துச் செல்வார்களாம்!

திவான் ரங்கசாமி ஐயங்கார் என்பவர் இந்தக் கிராமத்தில் வாழ்ந்தபோது, இந்தக் கோயிலில் நித்தியப்படி பூஜைகள் குறையற நடைபெற வேண்டும் என்று நிலங்களையும் பொருட்களையும் தானமாக எழுதிக் கொடுத்தாராம். இந்தக் கோயிலின் பெருமாளுக்கு அழகிய, புதிது புதிதான வஸ்திரங்கள் சார்த்தியும், திருமஞ்சனம் செய்தும், நைவேத்தியங்கள் அளித்தும் விமரிசையாக பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தேறியதாகச் சொல்கின்றன குறிப்புகள்.

ஸ்ரீநிவாச வரத பெருமாள், வீதியுலா வருகிற அழகே அழகு.

கருட வாகனத்தில், ஆபரணங்கள் பலவற்றை அணிந்து, அலங்கார பூஷிதராக, எல்லாத் தெருக்களிலும் உலா வருவாராம். அடுத்தடுத்த நாட்களில், அந்தத் தெருக்களில் வசிப்போருக்கு ஒரு குறையும் இருக்காதாம்; நோய்வாய்ப்பட்டுத் தவித்தவர்கள் கூட, குணமாகி விடுவார்கள்; தடைப்பட்ட திருமணத்தால் தவித்தவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறிவிடும்; பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சார்த்தி வழிபட்டவர்களின் நிலங்களில், பொன்னென விளைந்து பூரித்துக் கிடக்குமாம், நெல்மணிகள்!

பழைய விழாக் கோலாகலங்களை நினைத்த படி கோயிலுக்கு வந்தால், துக்கத்தில் நெஞ்சடைத்துப் போகிறது; கண்களில் நீர் கட்டித் திரையிட்டு இம்சிக்கிறது. ஒரு பிரமாண்டமான ஆலயம், மிகச் சிறிய ஒற்றைச் சந்நிதியாக இன்றைக்குக் காட்சி தருவது கவலை அளிக்கிறது.

கஜபிருஷ்ட சந்நிதி அமைப்பில், அஷ்டாங்க விமானத்துடன் திகழ்கிறது ஸ்ரீநிவாச வரத பெருமாள் குடிகொண்டிருக்கும் கருவறைச் சந்நிதி. எண்கோண பீடமும் ஒற்றை அத்தி மரத் தூணும் விமானத்தைத் தாங்கியபடி நிற்கின்றன.

'அந்த அத்திமரக் கட்டையாக இருந்திருந்தால், பன்னெடுங்காலமாக உன்னை தரிசித்துக் கொண்டே இருந்திருக்கலாமே...’ என்கிற ஏக்கத்துடன் கோயிலைச் சுற்றி வந்தால், வேறு எந்தச் சந்நிதிகளும் இல்லை; கோபுரம் இல்லை; மாறாக, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீள மான கல் நடப்பட்ட நிலையில் வாசலெனக் காட்சி தருகிறது.

''ஒரு காலத்துல ஸ்ரீதேவி- பூதேவி விக்கிரகங்களும் இல்லாம இருந்துச்சு. சுமார் 180 வருஷமா, தாயாரும் இல்லாம தனியாகவே இருந்தார் ஸ்ரீநிவாச வரத பெருமாள். தனிமையில இருந்ததோட மட்டுமில்லாம, வழிபாடு, பூஜைகள், வஸ்திரங்கள், நைவேத்தியங்கள்னு எதுவும் இல்லாம, திருப்பணியும் நடக்கா மலே இருந்துச்சு. அப்புறம், தாயாரின் திருவிக்கிரகத்தைத் தயார் பண்ணி வந்தாச்சு. ஒவ்வொருத்தருக்கும் சந்நிதி அமைக்கணும்; கும்பாபிஷேகம் பண்ணணும்னு ஆசை எங்களுக்கு!'' என்கின்றனர் திருப்பணிக் கமிட்டியினர்.

தாயாரின் திருநாமம்- ஸ்ரீபெருந்தேவித் தாயார். கொள்ளை அழகு; கருணையும் கனிவும் கொண்ட பார்வையில், நம் சிந்தையெல்லாம் நிறைந்து, மனதைக் குளிரச் செய்கிறாள் தாயார். இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்து, அவளின் கணவராம் ஸ்ரீநிவாச வரதரை, அருளும் பொருளும் அள்ளித் தருகிற அருளாளனை அகம் மகிழச் செய்வது, நம் கைகளில்தான் இருக்கிறது!

பிரமாண்டமாகத் திகழ்ந்த பெருமாள் கோயில்,இன்றைக்கு பிரமாண்டத்தைத் தொலைத்துவிட்டு தெருமுனைக் கோயில்போல் நிற்பது, அவலம் இல்லையா?

ஊரையே செழிக்கச் செய்த திருமாலின் கோயிலுக்குத் திருப்பணிகள் நடக்கவேண்டாமா? அக்கம்பக்க ஊர்களையும் மக்களையும் சிறக்கச் செய்த அருளாளனுக்கு அள்ளித் தர இயலவில்லை என்றாலும், கொஞ்சம் கிள்ளியேனும் தந்து, ஆலயத் திருப்பணிக் கைங்கர்யத்தில் பங்கேற்கக் கூடாதா?

வண்டலூர் ஸ்ரீநிவாச வரத பெருமாள் கோயில் பொலிவுறு வதற்கு, நம்மால் முடிந்த அறப்பணியைச் செய்வோம்; அது நம் ஆயுளை விருத்தி செய் யும்; ஆன்மாவைச் சுத்திகரிக்கும்; அளவற்ற நிம்மதியை வாரி வழங்கும்.

முக்கியமாக, கருவறைச் சந்நிதியில் குடிகொண் டிருக்கும் பெருமாளுக்கும், தனிச்சந்நிதி இன்றித் தவிக்கும் தாயாருக்கும் வஸ்திரம் சார்த்தி, சந்நிதி அமைப்பதற்கு கரம் கொடுப்போம்; நம் ஏழேழு சந்ததியும் சிறக்கும்; செழிக்கும்!

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment