தாமிரபரணி கரையினிலே...ctd










அற்புதங்களால் இந்த அகிலத்தையே தன் பக்கம் ஈர்த்த ஏரல் சேர்மன் சுவாமிகள் மட்டுமல்ல... தாமிரபரணியின் கரை நெடுக, இன்னும் பல மகான்களும் சித்த புருஷர்களும் அருளாட்சி நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் அகத்தியர். இவர் வழிபட்ட சிவாலயங்கள், 'அகஸ்தீஸ்வரங்கள்' என்ற சிறப்புடன் திகழ்கின்றன. முத்தமிழின் முதுபெரும் தொண்டன், திருமுனிவன், குறுமுனிவன், குள்ள முனிவன், கும்ப முனிவன் என்று பலவாறு போற்றப்படும் அகத்திய மாமுனிவரின் மகிமைகளை அறிந்து கொள்ள, நிச்சயம் நாம் பொதிகைக்கு பயணிக்க வேண்டும்.

ஆம்! 'குளிர்ந்த தண்மையும், தென்றலென வீசுங்காற்றும் தவழ்ந்து விளையாடும் பச்சைமலை' என இலக்கியங்கள் பெருமை பேசும் பொதிகையின் உச்சியில், இன்றும் அகத்தியர் சூட்சுமமாக உலா வருகிறார்; தேடி வருவோருக்கு அருள்புரிகிறார் என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! சிலாரூபமாகவும் இங்கு எழுந்தருளியிருக்கிறார் கும்ப முனிவர்!

ஏகபொதிகையில் அகத்தியர் ஏகாந்தமாக அருள்பாலிக்கும் இடம்- அகத்தியர் மொட்டை. அகத்தியரை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களுக்கு, அடிவாரத்தில் இருக்கும் புருஷோத்தமன் என்பவர் வழிகாட்டுகிறார்.


ஏகபொதிகைக்குச் செல்ல... பாபநாசம் அணையை அடைந்து, பாண தீர்த்தத்தைக் கடந்து, மலைக்கு மேல் பயணிக்க வேண்டும். மலையில் நிறைய குகைகள் உண்டு. அகத்தியர் வசிப்பதாகக் கருதப்படும் இந்த குகைகளில் அவ்வப்போது யாகங்களும் நடப்பது உண்டு என்கிறார்கள்! இந்த இடத்தில் இருந்து பார்த்தால், பாணதீர்த்தத்துக்கும் மேலே உள்ள சமவெளியில் வளைந்து நெளிந்து ஓடும் தாமிரபரணியின் ஒட்டுமொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம். ஆனால், மிக ஆபத்தான பகுதி இது! குகைகளை தரிசித்த பிறகு, கறுக்கமேடு எனும் காட்டுப்பகுதியை கடக்க, இங்கிருக்கும் பழங்குடி இனத்தவரை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து பயணித்து கல்லருவி எனும் இடத்தைத் தாண்டும் வரை சமதளப் பகுதிதான். இதன் பிறகே கடினமான பயணம்!

பயணத்தை இலகுவாக்க அகத்தியரையே துணைக்கு அழைப்போமா? வாருங்கள், கல்லருவியை அடைவதற்கு முன், அகத்தியரின் மகிமைகளை அறிவோம்!

யோக- தியானங்களில் வல்லவரான அகத்தியர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஆற்றல் பெற்றவர். கும்ப லக்னத்தில்- கும்ப ராசியில் அவதரித்தவர் ஆதலால், கும்ப முனி எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் (வேறு காரணமும் உண்டு).

'நந்தி, தன்வந்திரி ஆகியோரின் சீடராக... காஷ்மீரம், சீனா, நேபாள நாடுகளில் பயணித்து, சித்த வல்லமையை வெளிப்படுத்தியவர் அகத்தியர்' என்று பிரசித்தி பெற்ற நூல்கள் சிலாகிக்கின்றன. முக்காலத் தையும் அறியும் சக்தி கொண்டவர்; முருகவேளிடம் தமிழ் கற்றவர்... என புராணங்கள் சிறப்பிக்கின்றன. இவர் இயற்றிய அகத்தியம் மிகச்சிறந்த இலக்கண நூல்; முதல் தமிழ்ச் சங்க காலத்தின் முதலாவது நூல்!



ஆஹா... எவ்வளவு அற்புதமான, மகத்துவமான சித்த புருஷரை தரிசிக்க இருக்கிறோம்?! நினைக்கும்போதே... பொங்குமாங்கடலாக மனதில் ஆனந்தம் ததும்பி வழிகிறது!

கல்லருவி தாண்டி, செங்குத்தான பாதையில் நடந்தால்... சங்குமுத்திரை எனும் இடத்தை அடைகிறோம். அமானுஷ்யமும் குளிரும் நிறைந்த இந்தப் பகுதியில்தான், இரவுப் பொழுதை கழிக்கிறார்கள் யாத்திரிகர்கள். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,200 அடி உயரத்தில், சுமார் 1500 அடி பரப்பளவுடன் அமைந்திருக்கும் இந்த இடம், காடுகளால் சூழப்பட்டுள்ளது.

அடர்ந்து வளர்ந்திருக்கும் மூலிகை கள், மலர்ந்து சிரிக்கும் பூக்கள், முகடுகளை தழுவிச் செல்லும் மேகங் கள்... என மனதுக்கு ரம்மியமாக இருந்தாலும், ஆபத்துகள் நிறைந்த இடம் இது என்கிறார்கள். அடிவாரம் துவங்கி பயணம் முழுக்க விஷப் பூச்சிகள், வனவிலங்குகள், கரடு-முரடான பாதை என்று பல பிரச்னைகள்...

சங்குமுத்திரையில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டு, அதிகாலையில் எழுந்து ஏகபொதிகையை தரிசிக்கச் செல்கிறார்கள். சிறிது தூரம் நடந்து, வழுக்கும் பாறைகளில்... அங்கே பிணைக்கப் பட்டிருக்கும் சங்கிலியைப் பிடித்து ஏறிச் சென்று ஏகபொதிகையை அடைகிறார்கள்.



இங்குதான் ஏகாந்தநிலையில் சிலாரூபமாகக் காட்சி தருகிறார் அகத்திய மாமுனிவர்.

பக்தர்கள்... தாங்களே குடம் குடமாக நீரூற்றி இவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இன்னும் சிலர், ஆசை ஆசையாக தாங்கள் பறித்துக் கொண்டு வந்த மலர்களை மாலையாக்கி, அகத்தி யருக்கு அணிவிக்கிறார்கள்; புது வஸ்திரங்களை சாத்துகிறார்கள். தொடர்ந்து தீபாராதனையும் செய்கிறார்கள். இன்னும் சிலர்... தங்களது பிரார்த்தனையையே ஜபமாக்கி, மௌனத்தையே வழிபாடாக்கி இவரை வணங்கிச் செல்கிறார்கள்.

சுற்றிலும் ஆங்காங்கே அமர்ந்து... மலையையே மகேசனாகவும், முகம் தவழும் தென்றலின் ஸ்பரிசத்தையே அகத்தியரின் ஆசியாகவும் கருதி, இயற்கையை வியந்து கொண்டிருக்கும் அடியவர்களை காணமுடிகிறது!

எல்லாம் சரி! அகத்தியருக்கும் பொதிகைக்கும் என்ன தொடர்பு? இவர், இங்கு வந்தது எப்படி? தாமிரபரணி நெடுக அகஸ்தீஸ்வர ஆலயங்கள் அமைந்தது எவ்வாறு? அதுவொரு நெடுங்கதை!

எத்தனை அகத்தியர்கள்?

சாது சிதம்பரனார் என்ற அறிஞர், நமது நாட்டில் பல காலங்களில் 37 அகத்தியர்கள் இருந்ததாகக் கூறுகிறார். அறிஞர் சுத்தானந்த பாரதி, முன்னூறுக்கும் மேற்பட்ட அகத்தியர் இருந்ததாகக் கூறுகிறார். அகத்தியர் பெயர் கொண்ட நூல்களைப் பார்க்கும் போது, 3- க்கும் மேற்பட்ட அகத்தியர்கள் இருந்தது புலனாகிறது.

அகத்தியர் தந்த நூல்கள்!

அகத்தியர் எழுதிய அகத்தியம் என்னும் நூல் ஐந்து இலக்கணம் அடங்கிய நூல். இவர் பல வைத்திய நூல்களை எழுதியுள்ளார். இதில் பெருந்திரட்டு ஆயுர்வேத பாஷ்யம், விதிநூல், மூவகை காண்டம், வைத்திய சிந்தாமணி, செந்தூரம் 300, மணி 4000, சிவசாலம், சக்தி சாலம், சண்முக சாலம், வைத்திய கண்ணாடி, வைத்திய ரத்தினாகாரம், கர்மவியாபாகம், கரிசல்பஷ்பம் 200, தண்டகம், பச்சணநாடி போன்றவை. இவர் முதல் தமிழ்ச் சங்கத்தில் புலவராக இருந்தவர். அகத்திய சம்ஹிதை என்னும் வைத்திய நூலை தமிழ் ஆக்கியவர்.

Comments