பாண தீர்த்தத்தில் இருந்து பல மைல் தொலைவில் உள்ளது ஐந்து தலை பொதிகை. ஜீவ நதியாம் தாமிரபரணி தோன்றும் இடமாகக் கருதப்படும் இந்தப் பகுதியை, பொய்கை என்றும் சொல்கிறார்கள். இங்கே உள்ள குகை போன்ற இடத்தில்தான் ஊற்றாக சுரந்து, நதியாக உருவெடுக்கிறதாம் தாமிரபரணி. இந்த இடத்துக்கு அருகில் உள்ளது பூங்குளம் எனும் பகுதி. இதன் சிறப்பு... கருடா மலர்கள்! இந்தப் பூக்கள் மலர்வதை வைத்தே, இங்கே வசிக்கும் காணிகள், தாமிரபரணியில் அந்த வருட நீர்வரத்து எப்படியிருக்கும் என்பதை கணித்து விடுவார்களாம். கருடா மலர்கள் ஏராளமாகப் பூத்தால், அந்த வருடம் நல்ல மழை பொழியும்; தாமிர பரணியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்; தரணி செழிக்கும் என்று நம்பிக்கை. கருடாமலர்கள் பூக்கவில்லை என்றால் மழை பொய்க்குமாம்!
ஏரல் சேர்மன் சுவாமிகளும் ஒரு வகையில் கருடா மலருக்கு ஒப்பானவர்தான். இவரது அவதாரத்தால் தர்மம் செழித்தது.
மூலக்கரையில் இருந்து ஏரல் நகருக்கு வந்து சேர்ந்த அருணாசலம், தன் சித்தப்பா சிவசுப்பிரமணியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஏரலுக்கு அருகில் உள்ள பண்ணைவிளையில் இருந்த நடுநிலைப் பள்ளியில், அருணாசலத்தின் படிப்பு தொடர்ந்தது. ஆங்கிலத்தையும் நன்கு கற்றார். சுவாமிகளின் ஆங்கில உச்சரிப்பை, பள்ளியின் நிர்வாகிகளாக இருந்த கிறிஸ்துவ பாதிரியார்கள் பாராட்டினர். பாடநூல்களுடன், பைபிள், திருக்குர்ஆன் ஆகியவற்றையும் படித்தறிந்தார் அருணாசலம். பள்ளிப் படிப்புடன், அருணாசலத்தின் இறைத் தேடலும் குறைவில்லாமல் தொடர்ந்தது.
ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட அருணாசலம், முன்னோர் வழியில் விஷக்கடி மருத்துவத்தையும் தொடர்ந்தார். இதனால் ஏழை- எளியவர்களின் மனதில் இடம்பிடித்தார்.
காலம் ஓடியது. இளைஞன் அருணாசலத்தின் தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையை அறிந்த ஆங்கிலேய அரசு, இவரை கிராம முன்சீப்பாக நியமித்தது. திறம்பட பணியாற்றினார் அருணாசலம். எட்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள்... இவரை அழைத்த மேலதிகாரி ஒருவர், உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தினார். அருணாசலம் மறுத்து விட்டார்.
'பொய்சாட்சி சொல்லாவிட்டால் பதவி பறிபோகும்' என்று மிரட்டினார் அதிகாரி. உண்மையை உயிராகப் போற்றிய சுவாமிகள், தாமே முன்வந்து பதவியைத் துறந்தார். இதற்குப் பிறகு சமய வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இந்து சமய நூல்களை கற்றுத் தேர்ந்தார். சித்தர்களின் வரலாற்றையும் மகிமைகளையும் படித்தும் கேட்டும் வியந்தார்.
குடும்பச் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார் சுவாமிகள். அவ்வப்போது தங்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பார்வையிட குதிரையின் மீது ஏறிச் செல்வார். வெள்ளை வேட்டி- கோட் மற்றும் தலைப்பாகை அணிந்து, ராஜ கம்பீரத்துடன் செல்லும் அருணாசலத்தின் அழகைப் பார்த்து ஊரே வியக்கும். பிரமுகர்கள் பலரும் தங்கள் பெண்ணை இவருக்கு மணமுடிக்க விருப்பம் தெரிவித்தனர். உறவினர்களும் அவருக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஆனால் அருணாசலமோ, ''இது சுட்டமண். இதில் எதுவும் ஒட்டாது!'' என்று உறுதியுடன் கூறிவிட்டார். வீட்டுப் பெரியவர்களோ, அன்பால் இவருக்கு அணை போட்டு விடலாம் என்று கருதினர். அவர்களின் மனம் நோகக்கூடாதே என்பதற்காக... ''28 வயது ஆகட்டும் பார்க்கலாம்'' என்று நாசூக்காகக் கூறிவிட்டார் அருணாசலம்.
காலப்போக்கில் இவரிடம் விஷக்கடி மருத்துவம் செய்து கொள்ள கூட்டம் கூடியது. பெண்கள் அதிகம் வந்தனர். அவர்களில் சுவாமிகளின் முறைப்பெண் ஒருத்தியும் உண்டு. 'என்றாவது ஒருநாள் அருணாசலத்தின் பார்வை நம் மீது படும்' என்ற நம்பிக்கையுடன், அடிக்கடி வந்தாள். 'உடம்புக்கு என்ன?' என்று விசாரித்தால்... ''காலில் விஷக்கடி; சிகிச்சை தர வேண்டும்'' என்றாள்! அவளின் உள்ளக்கிடக்கையை அறிந்த அருணாசலம், ''பெண்ணே, விஷம் உன் காலில் இல்லை; மனதில் இருக்கிறது. அதைப் போக்கினால் போதும் எல்லாம் சுகமாகும்!'' என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
அப்பழுக்கற்ற அருணாசலத்தின் நேர்மையை, பணிவை, பண்பை கவனித்த, மாவட்ட ஆட்சித் தலைவர்களான பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் ஆகியோர், அருணாசலத்தை ஏரல் பஞ்சாயத்து சேர்மனாக நியமிக்கும்படி பரிந்துரைத்தனர். தமது 26-வது வயதில் ஏரல் சேர்மன் ஆனார் அருணாசலம். ஊராட்சித் தலைவர்களை 'சேர்மன்' என்று அழைப்பது அப்போதைய வழக்கம்.
சேர்மனாகப் பொறுப்பேற்றதும், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். தெருவிளக்குகள் அமைத்தார். மண்ணெண்ணெய் விளக்குகளான இவை இரவில் அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள பணியாட்களை நியமித்தார். பொதுநலப் பணிகளுக்கு இடையே ஆன்மிகத் திலும் திளைத்த சுவாமிகள் அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து விடுவார். இதன் பலனாக, பிறிதோர் இடத்தில் நிகழும் சம்பவங் களை, இருந்த இடத்திலிருந்தே ஞான திருஷ்டி மூலம் அறியும் வல்லமை கைவரப் பெற்றார்.
இதை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவம்...
ஏரலில் இருந்தார் சுவாமிகள். அப்போது ஆறுமுக நேரி எனும் ஊரில், பொன்னையா என்பவரது தொடையில் பூரான் கடித்து விட்டது என்பதை அறிந்தார். ஏரலில் இருந்தபடியே மருத்துவம் செய்து, விஷத்தை இறக்கி பொன்னையாவை குணப்படுத்தினாராம். இதன் பிறகு சுவாமிகளின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது.
ஒருமுறை, இந்தப் பகுதியில் வசித்த பால் நாடார் என்பவரை பாம்பு கடித்துவிட்டது. தகவல் அறிந்து விரைந்தார் சுவாமிகள். தனது தவ வலிமையால், கடித்த பாம்பையே வரவழைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்கச் செய்தார். இதைக் கண்டு ஊரே வியந்தது.
ஒருமுறை சுவாமிகளைச் சந்தித்த அவரின் தங்கை, ''ஏன், என் வீட்டுக்கு வருவதே இல்லை?'' என்று குறைபட்டுக் கொண்டாள். அவளிடம் தன் போட்டோ ஒன்றைக் கொடுத்த சுவாமிகள், ''இதை வீட்டில் வைத்து தினமும் பார்த்து வா; நான் உன்கூடவே இருப்பதாக நினைத்துக் கொள்!'' என்றார். அவளும் அதன்படியே செய்தாள்.
ஒருநாள், திடீரென்று தீப்பற்றிக் கொள்ள அவளது வீடு எரிந்தது. சுவாமிகளின் படத்துக்கு மட்டும் எதுவும் நேரவில்லை. அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது இது.
இவற்றைக் கேள்விப்பட்டவர்கள், சுவாமிகளை தரிசிக்க கூடினர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. ஆனால் சுவாமிகளின் எண்ணமோ வேறுவிதமாக இருந்தது! ஒரு நாள், சுவாமிகளின் கனவில் தோன்றிய சிவபெருமான், ''இன்னும் 8 நாட்களில், இங்கு வந்து சேர்'' என்று அருளி மறைந்தார்.
மறுநாள் காலை, தன் தம்பி கருத்தபாண்டியை அழைத்த சுவாமிகள், ''காலம் கனிந்துவிட்டது. என் உடலின் ஆயுள் முடியப் போகிறது. வருகிற ஆடி அமாவாசை- செவ்வாய்க் கிழமை (27.07.1908) அன்று உச்சிப் பொழுதில், சாமியோடு இரண்டறக் கலந்து விடுவேன். என் உடல் அழிந்தாலும், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்'' என்றார்.
கருத்தபாண்டியோ திக்பிரமை பிடித்தவராக நின்றார்! சுவாமிகள் தொடர்ந்தார். ''என் ஆவி பிரிந்ததும் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்கு செய்யும் சடங்குகளைச் செய்த பிறகு, உட்கார்ந்த நிலையிலேயே என் உடலை அடக்கம் செய்யுங்கள். அப்போது வானில் தோன்றும் கருடன், குரல் எழுப்பியவாறு என்னை மூன்று முறை வலம் வருவார். கருடனின் நிழல் என் மீது விழும். சரியாக அந்த தருணத்தில் மண்ணையும் மலரையும் கொண்டு என்னை மூடி விடுங்கள்!'' என்றார்.
சற்றும் கவலை இல்லாமல் மலர்ந்த முகத்துடன் சுவாமிகள் சொல்வதைக் கேட்டு, கருத்தபாண்டி கண்ணீர் வடித்து நின்றார்!
Comments
Post a Comment