தாமிரபரணி கரையினிலே...ctd

தாமிரபரணி! 'பொருநை' என்றும் 'பரணி' என்றும் தமிழ் இலக்கியங்கள் போற்றும் இந்த நதி... கரைகளில் தரணி போற்றும் ஆலயங்களையும், அந்த ஆலயங்கள் குறித்த வரலாற்றுச் சுவடுகளையும் கொண்டு, தென் தமிழகத்தை செழிக்கச் செய்யும் ஜீவ நதியாய் பாய்கிறது!

வங்கக் கடலில் சங்கமிக்கும் தாமிரபரணியின் கரைகளில் இருக்கும் ஊர்களோ... வாழ்வாங்கு வாழ்ந்த மகான்கள் பலரது திருவிடங்களையும், அகத்தியர் உட்பட சித்தர்கள் பலர் நிகழ்த்திய அற்புதங்களுக்கான சாட்சிகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றன!

இந்த நதியை ஈன்றெடுக்கும் பொதிகை மலை மட்டும் என்னவாம்? குறுந்தொகையும் பரிபாடலும் போற்றும் இந்த தெய்வீக மலை, ஆயிரமாயிரம் மூலிகைகளைக் கொண்டது! அகத்திய முனிவருக்கு முருகக் கடவுள் தமிழ் கற்பித்ததும், அகத்தியர் யாழ் இசைத்து ராவணனை தோற்கடித்ததும் இந்த மலையில்தான்! குறுமுனிவரின் கோயிலும் இங்கே உண்டு. இன்றும்... அகத்தியர் அருவமாக இங்கே வசிக்கிறார் என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

இத்தகு மகத்துவம் வாய்ந்த பொதிகை, அதன் சாரலிலும் தாமிரபரணிக் கரைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஒவ்வொன்றையும் இந்தத் தொடரில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

வாருங்கள்... இடைக்காட்டுச் சித்தரை தரிசிப்போம்.

கடும் பஞ்சம் தலை விரித்தாடியது. பசுமை நிறைந்த பொதிகை மலையும் பஞ்சத்துக்கு தப்பவில்லை. உண்ண உணவின்றி தவித்து நின்றனர் இந்தப் பகுதி மக்கள்.ஆனால், ஆடு மேய்க்கும் அந்த நபர் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் நலமுடன் இருந்தார். இதைக்கண்டு அனைவருக்கும் ஆச்சரியம்!

அனைவரையும் வியக்க வைத்த அந்த நபர்தான் இடைக்காடர். பிற்காலத்தில் வரப் போவதை முன்னமே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். இவருக்கு இந்த வல்லமை கிடைத்தது எப்படி?

ஒருமுறை, பொதிகை மலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் இடைக்காடர். அப்போது அங்கே வந்த ஒருவர் இவரிடம் ஆட்டுப்பால் கேட்டார். இரக்கமும் ஈகைப் பண்பும் மிகுந்தவர் இடைக்காடர். மன நிறைவோடு ஆட்டுப்பாலைக் கறந்து கொடுத்தார்.

இவரிடம் ஆட்டுப்பால் கேட்டவர் நவ சித்தர்களுள் ஒருவர். இடைக்காடரின் பணிவையும் பண்பையும் கண்டு மகிழ்ந்த இந்த சித்தர், இடைக்காடருக்கு சித்த ரகசியங்களை கற்றுக் கொடுக்க விரும்பினார். தான் கற்றுத் தேர்ந்த அஷ்டமா ஸித்திகளில் சிலவற்றை இடைக்காடருக்கு உபதேசித்தார். இதன் மூலம் பெரும் வல்லமை பெற்றார் இடைக்காடர். எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களை முன்னரே அறிந்து கொள்ளும் அபூர்வ சக்தியும் அவருக்குக் கிடைத்தது! இதன் மூலம்... 'கடும் பஞ்சம் வரப் போகிறது' என்பதையும் முன்னதாகத் தெரிந்து கொண்டார்!



பஞ்ச காலத்தில் பாதிப்புகள் இல்லாமல் வாழ என்ன செய்யலாம் என்று யோசித்தார். தனது ஆடுகளுக்கு வித்தியாசமாக ஒரு பயிற்சி அளித்தார். ஆம்! காட்டில் வளரும் எருக்கு இலைகளை மட்டுமே தின்று உயிர் வாழ ஆடுகளைப் பழக்கினார். தானும் குறுவை மற்றும் வரகு தானியத்தாலும் ஆட்டுப் பாலிலும் தயாரித்த கூழை மட்டுமே அருந்தி உயிர் வாழப் பழகிக் கொண்டார்.எனவேதான்... கடுமையான இந்த பஞ்ச காலத்திலும் எந்த பாதிப்புகளும் இன்றி அவரால் வாழ முடிந்தது.

இந்த விஷயம் நவக்கிரக மூர்த்திகளுக்கும் தெரிய வந்தது. ஒன்பது பேரும் பொதிகைக்கு வந்து இடைக்காடரை தரிசித்து வணங்கினர். அன்புடன் அவர்களை உபசரித்தார் இடைக்காடர். தினமும் தான் பருகும் கூழை அவர்களுக்கும் வழங்கினார். ஆனந்தமாக வாங்கிப் பருகினார்கள் நவக்கிரகங்கள்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு அல்லவா! அமிர்தம் பருகியது போன்று களிப்படைந்தவர்கள், பொதிகைச் சாரலையே சொர்க்கமாக பாவித்து நன்றாக உறங்கிப் போனார்கள்!

இதுதான் நல்ல தருணம் என்று தனது வேலையை ஆரம்பித்தார் இடைக்காடர். பெருமழை பொழியச் செய்தார். அடைமழை பெய்து பொதிகையும் அதன் சுற்றுவட்டார நீர்நிலைகளை நிறைத்தது. மழை நீர் பட்டு விழித்துப் பார்த்த நவக்கிரகங்கள் அதிர்ந்தனர். ஆனாலும், மக்களின் நன்மைக்காகவே இடைக்காடர் இப்படிச் செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவர்கள், அவரை வாழ்த்தி விடைபெற்றனர்!

இடைக்காடர் மட்டுமா? இன்னும் பல சித்தர்கள் தங்கள் அருள் மழையால் பொதிகையை குளிர்வித்திருக்கிறார்கள். தேவர்களும் சித்தர்களும் உறையும் இடம் என்பதால்தான் 'பொது இல்' எனப்பட்டது பொதிகை மலை! இதுவே 'பொதியில்' என மருவி, 'பொதிகை' என்றானதாம்!

சித்தர்கள் அழிவு இல்லாதவர்கள்; சூட்சுமமாக வாழ்ந்திருப்பவர்கள். சித்தர் நூல்கள் பல... 'அவர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டாக வாழ்ந்தவர்கள். ஏழைகள் மீது இரக்கம் கொண்டு, பல்வேறு மூலிகை மற்றும் பச்சிலைகளால் அவர்களின் நோய் நீக்கி நலம் விளைவித்தவர்கள், பச்சிலை களையே உண்டு உயிர் வாழும் வல்லமை பெற்றவர்கள்' - இதுபோன்ற தகவல்களைத் தருகின்றன.

அதுமட்டுமா? நவ பாஷாணங்கள் எந்தெந்த பச்சிலைகளில் உள்ளன? பஞ்சலோக சக்திகளைக் கொண்ட மூலிகைகள் எவை... இதுபோன்ற மூலிகை ரகசியங்களை அறிந்தவர்கள்; மூன்று நாடிகளையும் முறையாகக் கணக்கிடத் தெரிந்தவர்கள் சித்தர்கள்!

பொதிகை மலையில் கல்தாமரை என்றொரு தாவரம் உண்டு. இதைக் கொண்டு இரும்பையும் தங்கம் ஆக்கலாம் என்பது சித்தர்கள் வாக்கு. சாமானியர்களால் அறிந்துகொள்ள முடியாத இந்த வித்தை, சித்தர்களுக்கு மட்டுமே உரியது. இந்தக் கல்தாமரை மூலிகையை மண்ணில் போட்டு, அதன் மீது நின்று ஆகாயத்தை உற்று நோக்கினால், பகலிலும் விண்மீன்களை பார்க்கலாமாம்!

பொதிகை மலையில் வளரும் ஒரு வகைப் புல், இரவு-பகல் வேறுபாடு இன்றி எப்போதும் ஒளிரும் தன்மை கொண்டது என்றும், இதை செந்தூரமாக மாற்றிச் சாப்பிட்டால் யானை பலம் கிடைக்கும் என்றும் குறிப்புகள் உண்டாம். வெட்டுக் காயங்களை... வடுகூடத் தெரியாத அளவுக்கு குணமாக்கும் மூலிகையும் உண்டு என்பது வியப்பான விஷயம்!

கிராமப்புறங்களில்... வீடுகளுக்குள் பாம்புகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சிரியாநங்கை- பெரியா நங்கை என்ற மூலிகை செடியை வளர்ப்பார்கள். இந்தச் செடி வளரும் வீட்டின் திசை பக்கம்கூட நாகங்கள் வராது என்பது நம்பிக்கை. ஆனால் இந்தச் செடிகள், 'மிளகா நங்கை' என்று அழைக்கப்படுபவை; உண்மையான சிரியாநங்கை செடி, மனிதன் நடமாட்டத்தை உணர்ந்து பாம்பு சீறுவது போன்ற ஓசையை உண்டாக்குமாம். இதுபோன்ற சீறும் செடிகளும் பொதிகையில் உண்டு!

Comments