எரிச்சுடையார் திருக்கோயில்- தாமிரபரணிக் கரையில்... சத்தியத்துக்குச் சான்றாகத் திகழும் அற்புத சிவாலயம்.
நெல்லைச் சீமையின் அம்பாசமுத்திரம் பகுதி, கேரள அரசரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலம். அற சிந்தனை மிகுந்த இந்த மன்னருக்கு தீராத வயிற்று வலி! பல்வேறு வைத்தியங்கள் செய்தும் பலன் இல்லை. சாஸ்திர வல்லுநர்களை அழைத்து, வயிற்று வலி குணமாக வழி கேட்டார் அரசர். அவர்களோ, ''மன்னா... பூர்வ ஜென்ம பாவங்களே இதற்குக் காரணம். வேதம் கற்றுணர்ந்த, பிரம்மசாரியான அந்தணன் ஒருவனுக்கு உமது பாவத்தை தானம் அளித்தால் பிணி தீரும்!'' என்றனர்.
பாவத்தை தானமாகப் பெற எவர் முன்வருவார்?! எனவே, தனது பாவத்தை தானமாகப் பெறுபவருக்கு, ஆயிரம் பொற்காசுகள் பரிசளிப்பதாக அறிவித்தார் மன்னர். கன்னட தேசத்தில் வசித்த பிரம்மசாரி அந்தணர் ஒருவர், இந்தத் தகவலை அறிந்தார். அகத்தியரையே குலதெய்வமாக பூஜித்த அவர், பொதுநலனில் அக்கறை கொண்டவர். கேரள மன்னர் தரும் பொற்காசுகளைக் கொண்டு பிறருக்கு உதவலாமே என்ற எண்ணம் அவருக்கு! உடனே, புறப்பட்டு விட்டார்.
விரைந்து வந்து, மன்னரின் பாவத்தை ஏற்றதுடன், 1000 பொற்காசுகளையும் பெற்றுக் கொண்டார்; மன்னரின் வயிற்று வலி குணமானது. அதேநேரம்... பாவங்களை தானம் பெற்றதால், அந்தணரின் வேத ஞானம் அவரை விட்டு அகன்றது!
ஆனாலும் அவர் கலங்க வில்லை; பொற்காசுகளை மூட்டை கட்டிக் கொண்டு அம்பாசமுத்திரம் சிவாலயத்தை அடைந்தார். ஆலய அர்ச்சகரிடம், ''அகத்தியரை தரிசிக்கச் செல்கிறேன். நான் வரும் வரை இந்தத் தவிட்டு மூட்டையை பத்திரமாக வைத்திருங்கள்'' என்று கூறி பொற்காசு மூட்டையை ஒப்படைத்தார். பின்னர் பொதிகை மலையை அடைந்த அந்தணர், தவம் கிடந்து அகத்தியரை தரிசித்தார். அவரிடம், மன்னரின் பாவத்தை தானம் பெற்றதை விவரித்தவர், ''பரிசாகக் கிடைத்த பொற்காசுகளைக் கொண்டு என்ன செய்வது என்பது குறித்து அறிவுறுத்துங்கள்''- என்று வேண்டினார்.
''அன்பனே... நான் மறைந்ததும் இந்த இடத்தில் ஒரு பசு தோன்றும். அதன் வாலைப் பிடித்துக் கொள். அந்தப் பசு, உன்னை தாமிரபரணிக் கரையில் கொண்டு போய்ச் சேர்க்கும். அந்த இடத்தில் ஓர் அணை கட்டு. பிறகு பசு ஓட ஆரம்பிக்கும். நீயும் பின்தொடர்ந்து ஓடு. பசு சாணம் இடும் இடத்தில் குளமும், ஜலம் கழிக்கும் இடத்தில் மடையும் வெட்டு. பசு, எந்த இடத்தில் படுக்கிறதோ அந்த இடத்தில் உனது பயணத்தை முடித்துக் கொள். அணையும் குளமும் மடையும் அமைப்பதால் விவசாயிகள் பயன் பெறுவர். உனது புகழும் நிலைக்கும்!'' என்று அருளி மறைந்தார்.
மறுகணம் அந்த இடத்தில் ஒரு பசு மாடு தோன்றியது. அதன் வாலைப் பிடித்தார் அந்தணர். தாமிரபரணிக் கரையை அடைந்தவர், அகத்தியர் குறிப்பிட்டபடி... அணை, குளம் மற்றும் கால்வாய் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார். உடனே பணியைத் துவங்க முடிவு செய்தவர், அர்ச்சகரிடம் வந்து மூட்டையை வாங்கினார். பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. பொற்காசுகளுக்கு பதில் தவிடு நிரம்பியிருந்தது!
ஆமாம்... மூட்டைக்குள் பொற்காசுகள் இருப்பதை எப்படியோ அறிந்த அர்ச்சகர், பொற்காசுகளை எடுத்துக் கொண்டு, தவிட்டை நிரப்பி வைத்திருந்தார்!
மனம் கலங்கிய அந்தணர், மன்னரிடம் சென்று முறையிட்டார். அவர் கூறுவது பொய்யாக இருக்காது என்பது அரசருக்குத் தெரியும். அதேநேரம், பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் அர்ச்சகரையும் அவசரத்தில் தண்டித்து விடக்கூடாது என்று கருதிய மன்னர், அர்ச்சகரை அழைத்து, ''நாளை, கோயிலுக்கு வந்து, 'பொற்காசுகளை எடுக்கவில்லை' என்று இறைவன் மீது சத்தியம் செய்'' என்று ஆணையிட்டார்.
அன்று இரவே பகவானை பாலாலயம் செய்து, (இறைவனின் சாந்நித்தியத்தை) அருகில் உள்ள புளியமரத்தில் சேர்த்தார் அர்ச்சகர். சாந்நித்தியம் இல்லாத மூர்த்தத்தில் பொய் சத்தியம் செய்தால் பாதகம் இல்லை என்பது இவரின் எண்ணம். ஆனால் இதனை கனவு மூலம் கர்னாடக அந்தணரிடம் தெரிவித்தார் இறைவன்.
விடிந்தது; அனைவரும் கோயிலில் கூடினர். சந்நிதியை நோக்கி நடந்த அர்ச்சகரைத் தடுத்த அந்தணர், ''நமது பிரச்னைக்கு இறைவனை இழுக்க வேண்டாம். எதிரில் இருக்கும் புளிய மரத்தைக் கட்டிப்பிடித்து சத்தியம் செய், போதும்!'' என்றார். அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வேறு வழியின்றி புளிய மரத்தைக் கட்டிப்பிடித்து சத்தியம் செய்தார். மறுகணம் எரிந்து சாம்பலானார்! பொய் சத்தியம் செய்தவரை சாம்பலாக்கிய இறைவன், எரிச்சுடையார் என்று பெயர் பெற்றார்.
பிறகென்ன... பொற்காசுகளைக் கொண்டு, அணைக்கட்டு, குளம், கால்வாய் என அமை த்தார் அந்தணர். கன்னடராகிய இவரால் அமைக்கப்பட்டதால் இந்தக் கால்வாய்க்கு, 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கே... தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ளது எரிச்சு டையார் எனும் ஸ்ரீகாசிநாத ஸ்வாமி ஆலயம்.
கிழக்கு நோக்கிய ஆலயத்தின் உள்ளே நுழைந்தால், இடப்புறம்- பூரணை- புஷ்கலா சமேத ஸ்ரீஹரிஹர சாஸ்தா சந்நிதி. பிராகார வலம் வரும்போது ஸ்ரீகாசி விஸ்வநாதர்- விசாலாட்சி, ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீஅண்ணாமலையார், வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகர், சொக்கர்- மீனாட்சி ஆகியோரை தரிசிக்கலாம். தவிர கோயிலுக்குள், சூரிய- சந்திரர், சுரதேவர், அறுபத்து மூவர், சப்தகன்னியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, உமாமகேஸ்வரர், சுப்ரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வர் மற்றும் பைரவரின் தரிசனமும் சிலிர்க்க வைக்கிறது. முன்பு புளிய மரம் இருந்த இடத்தில் அடையாளக் கல் ஒன்று உள்ளது.
மூலவர் ஸ்ரீகாசிநாதர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கோகிலேஸ்வரர், திருப்போற்றீஸ்வரர், அம்பைநாயகர், மணிலிங்க மூர்த்தி, எரித்தாட் கொண்டார் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. அம்பாள் ஸ்ரீமரகதாம்பிகை வரப்பிரசாதி. தவிர, பெருமாளையும் இங்கே தரிசிக்கலாம்.
ஸ்ரீஅனுக்ஞை விநாயகர் தரிசனமும் நடராஜர் சபையும் குறிப்பிடத் தக்கவை. கன்னட அந்தணருக்கும் சிலை உண்டு. அதிதி, காசிபர், சூரிய குலத்து மன்னர்கள் இருவர் சாபவிமோசனம் பெற்ற இந்தத் தலத்தில், குயில் ஒன்றுக்கும் இறையருள் கிடைத்ததாகச் சொல்கிறது புராணம்!
தேவி தீர்த்தம், சாலா தீர்த்தம், தீப தீர்த்தம், காசிப தீர்த்தம், புழுமாறி தீர்த்தம், கோகில தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களாலும் சிறப்புறத் திகழ்கிறது ஆலயம். தொழுநோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள் இங்கே வந்து தொடர்ந்து 41 நாட்கள், தாமிரபரணியில் நீராடி ஸ்ரீகாசிநாதர்- ஸ்ரீமரகதாம்பிகையை தரிசித்து வழிபட, விரைவில் பிணி அகன்று நலம்பெறலாம் என்கிறார்கள். ஸ்ரீகாசிநாதரை வழிபட, குழந்தை பாக்கியமும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமாம்!
தொடர்ந்து 41 நாட்கள், தாமிரபரணியில் நீராடி ஸ்ரீகாசிநாதர்- ஸ்ரீமரகதாம்பிகையை தரிசித்து வழிபட, விரைவில் பிணி அகன்று நலம்பெறலாம் என்கிறார்கள். ஸ்ரீகாசிநாதரை வழிபட, குழந்தை பாக்கியமும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமாம்!//
ReplyDeleteஅருமையாய் தரிசனம். நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.