கயிலையில் அம்மையோடு அமர்ந்திருந்த ஈசன் முன்பு அழகன் முருகன் கைகூப்பி நின்றான். மகனின் மனதைப் படித்த ஈசன் அவரது மௌனம் கலைத்து என்ன வேண்டுமென ஆதூரமாய் கேட்டார். ‘‘தந்தையே தாங்கள் அறியாதது எதுவுமில்லை. அசுரர்களை வதம் செய்ததால் உண்டான வீரஹத்தி தோஷம் நீங்க நான் செய்ய வேண்டியதை சொல்லுங்கள்” என்று கேட்டுப் பணிந்தார்.
‘‘நடுநாட்டில் வில்வவனத்தில் உறையும் எம்மை வழிபடு. உன் தோஷம் ஆதவனைக் கண்ட பனியாய் மறையும்” என்றார், ஈசன்.
மயிலேறிய முருகன் வில்வவனம் வந்தார். தாம் நீராடி பூஜிக்க புதிதாய் ஒரு நதி வேண்டுமே என யோசித்தார். அந்த யோசனையையே கட்டளையாய் ஏற்ற மயில், உடனே ஒரு நதியை உண்டாக்கியது. அதில் நீராடி, ஒரு லட்சம் வில்வ தளங்களால் அரனை அர்ச்சித்தார். அகம் மகிழ்ந்த ஈசன் திருக்காட்சி தந்து வீரஹத்தி தோஷம் நீக்கி அருளினார். அதோடு ‘‘இத்தலத்தில் எம்மை பூஜித்த திருக்கோலத்திலேயே வடக்கு நோக்கி அமர்ந்து, எம்மை தரிசிக்க வரும் பக்தர்களின் சகல தோஷங்களையும் நீக்குவதை கடமையாகக் கொள்” என கட்டளையுமிட்டார். தந்தை சொல்லை மந்திரமாய் ஏற்று அதை அப்படியே செய்து வருகிறார் முருகன்.
இத்தகைய புராணப் பெருமை வாய்ந்த தலம் எங்கு இருக்கிறது? இப்போது எப்படி இருக்கிறது?
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில், விருத்தாசலம்&ஆத்தூர் சாலையில் 13 கி.மீ. பயணித்தால் கண்டப்பங்குறிச்சி என்கிற கிராமத்தை அடையலாம். அங்கிருந்து வடக்கே 4 கி.மீ தூரம் பயணிக்க நல்லூரை அடையலாம். விருத்தாசலத்திலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
கிராமத்தின் எளிமை அதன் பல சிறப்புகளை மறைத்திருக்கிறது. மழைக்காலத்தில் மட்டும் மூன்று நதிகளும் எட்டிப் பார்க்கும். சுழித்து ஓடும் நதியை ஒட்டிய படித்துறையை கடந்து உள்ளே செல்ல, ராஜகோபுரத்தோடு அழகிய மண்டபம். கொடிமரம், நந்தியைக் கடந்து செல்ல, நடன விநாயகர் வரவேற்கிறார். உள்ளே நால்வரும், தூணில் அனுமனும் அருள்கிறார்கள். பிராகாரத்தில் காளியும் அருகில் வடக்கு திசை நோக்கி அமர்ந்த வடிவேலனும் அருள்கிறார்கள். செவ்வாய், சஷ்டி, கிருத்திகை, மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர நாளில் இவரை வணங்கி வழிபட, தோஷமெல்லாம் விலகி சுகவாழ்வு பெறுவார்கள் பக்தர்கள். அடுத்து நால்வரும் நாயன்மார்களும் அருள்கிறார்கள்.
பிராகாரத்தில் பஞ்சபாண்டவர்களின் பெயர்களில் லிங்கங்கள் உள்ளன. வனவாச காலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், வில்வவனநாதரின் அருளால் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்றதாகவும் புராண வரலாறு சொல்கிறது. கருவறையை ஒட்டி இருக்கும் பீமலிங்கம் மணல் லிங்கமாம். இது தவிர லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, நாகர், வீரபத்திரர், நவகிரக சந்நதி மற்றும் சந்திரன் ஆகியோர் அருளும் பிராகாரத்தில் உள்ள பிராணத் தியாகேஸ்வரர் லிங்கமும் ஒரு கதை சொல்கிறது. தன் மகனுடன் இந்த வனம் வழியாக வந்தான் சுவேதனன் என்பவன். வழியில் மகனைப் பாம்பு தீண்டி அவன் இறக்க, பதறிய சுவேதனன், மகன் உடலை ஈசனின் ஆலயம் முன் கிடத்தி கதறினான். கருணாகரனான இறைவன் பாலகனை மீண்டும் உயிர்ப்பித்தார். அது முதல் இத்தல ஈசன் பிராணத் தியாகேஸ்வரர் ஆனாராம். இது தவிர கௌட தேசத்து மன்னன் வர்த்தனன் கர்ம வினைப் பயனாக நோயுற்றான். வியாசரின் அறிவுரைப்படி இத்தல நாதனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.பிரம்மதத்தன் என்பவனின் ஐந்து குமாரர்கள் மந்திர சக்தி பெற்றதும், சந்திரன் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதும், பிரம்மா ஆணவம் நீங்கி நான்முகன் ஆனதும், வில்வவனநாதரை வழிபட்டதால்தான் என்கிறது தலபுராணம்.
வில்வ மரத்தை தல விருட்சமாக கொண்ட இத்தலத்தில் ஈசனின் கருவறை கோஷ்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி அருள்கிறார். பின்புறம் மாதவப் பெருமாள். அடுத்து, இத்தல சொத்துக்களை காவல் காக்கும் சண்டிகேஸ்வரரையும் துர்க்கையையும் தரிசித்து ஆலயத்தினுள் செல்ல, கருவறையில் கருணைக் கடலான நல்லூருடைய நல்ல நாயகரின் அழகு தரிசனம் சிலிர்க்க வைக்கிறது.
தனது குரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி இவரை வணங்கி, நைந்துவ நாட்டு ஏமாங்கதன்
மழலைப் பேறு பெற்றதும், கோதாவரி நதிக்கரையில், பாம்பினால் கடிபட்டு இறந்த தன் கணவனை இழந்து அழுத குணவதி, இத்தலம் வந்து அரனை வணங்கி நித்ய சுமங்கலியாய் அரம்பை எனும் பெயருடன் சிவனுலகம் சென்றதுமான புராண சம்பவங்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன.அரனின் அற்புத தரிசனம் பெற்று அன்னையை காணலாம். அன்னையின் சந்நதிக்கு தனி கொடிமரம். முதலில் பாலாம்பிகையை வணங்கி துவார பாலகிகளை கடந்து உள்ளே சென்றால் பிரஹன்நாயகி தன் அருள் பார்வையால் அரவணைத்துக் கொள்கிறார். அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட கலைகளில் தேர்ச்சியும் கல்யாண வரமும் விரைவில் கைகூடுகிறது என்பது பலரது அனுபவ நம்பிக்கை.
குழந்தையின் வயிற்றைப் பார்த்தே பாலூட்டும் அன்னையைப் போன்ற பாசமிகு அரனையும்
அன்னையையும் வெறுமே தரிசித்து விட்டு வந்தால் மட்டும் போதும்; எதுவும் கேட்க வேண்டாம். நம் தேவையை அறிந்து அவர்களே அருள்வார்கள்.
ஆலய தகவல்களுக்கு 04143-249250 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நல்ல பதிவு.
ReplyDelete