மலை மீது நிலை கொண்டிருக்கும் கோயில்களுக்கு எப்போதுமே தனிச் சிறப்புண்டு. அப்படி தனித்த அழகு பெற்ற மலைத் தலங்களுள் பெருமுக்கலும் ஒன்று. முக்தியாசலேஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் இங்கு அருள்கிறார். தியானத்தையும் சித்தியையும் பெற விரும்பி பலர் வந்து வணங்கியதால் ஞானமலை என்ற பெயரும் இதற்குண்டு. சுமார் 1500 அடி உயரம் கொண்ட பெருமுக்கல் மலை மீதுள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் எதுவும் இல்லை. இடதுபுறம் வெற்றி விநாயகர் காட்சியளிக்கிறார்.
அருகேயே மூலவரின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் திருவான்மீக ஈஸ்வரம் உடையார், திருமலைமேல் உடையார், திருவான்மீசுவரமுடையான் என்று பல பெயர்கள் இந்த ஈசனுக்குரியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முக்கல் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு முக்யா அல்லது முக்தி என்று பொருள். அசலம் என்றால் மலை. கூடவே ஈசனும் சேர, முக்தியாசலேஸ்வரர் என்று தற்போது ஈசன் வழிபடப்படுகிறார்.
கருவறையின் வெளியே தனிச் சந்நதியில் ஞானாம்பிகை அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவான் வீற்றிருக்கிறார். அதற்கும் வெளியே தனி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின் பின்னால் சாளரம் போன்ற துளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சூரியஒளி வருடத்துக்கு இரண்டுமுறை (ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில்) 3 நாட்கள் தொடர்ந்து சிவபெருமான் மீது விழுவதாக கூறுகின்றனர். கருவறையின் சுற்றுச் சுவரில் (தென் திசையில்) காணப்படும் ஒரே தெய்வமாக தட்சிணாமூர்த்தி அழகுற அருள்பாலிக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். தமிழ் நாட்டின் ஏழாவது சிறப்புமிக்க தட்சிணாமூர்த்தியாக இவர் விளங்குகிறார்.
தட்சிணாமூர்த்தி சந்நதியின் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. சீதையை சுற்றி பெருத்த வயிற்றுடன் அரக்கி ஒருத்தி இருப்பதும், மேற்கு திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப் பெண் குட்டிக் குரங்கை தழுவி நிற்பதும், மற்றொரு பெண், பூதகணம் தழுவ காத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கவை.கோயிலின் பின்புறம் உள்ள பழமையான சந்நதியில் வெற்றிவீர ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக அவரது உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் திருக்குளம். அடுத்து பெரிய பள்ளம் காணப்படுகிறது. அங்கு குன்றுகளால் ஆன குகைக்குள் கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குகையில்தான் சீதை தங்கியிருந்து லவன், குசனை பெற்றெடுத்ததாக கூறுகின்றனர். அதனால் இதனை சீதை குகை என்று அழைக்கிறார்கள்.
மலைக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் கலைநயமிக்க விஜயநகர காலத்து சிவபெருமான் ஆலயம் தாழக் கோயிலாக அமைந்துள்ளது. இது மலையிலிருந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இந்த ஆலயத்தை காமாட்சி அம்மன் கோயில் என்கின்றனர். சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலில் புதர்கள் மண்டியுள்ளன. இங்குள்ள மூலவரின் லிங்கம் மும்மூர்த்திகளையும் தன்னகத்தே கொண்டது. எனவே இந்த லிங்கத்தை வழிபட்டால் சிவபெருமான், பெருமாள் மற்றும் பிரம்மாவையும் சேர்த்து வழிபட்ட பலன் கிட்டும்.
முதலாம் குலோத்துங்கச் சோழனால் கி.பி.1050ல் திருப்பணி துவங்கப்பட்டு, 1118ல் அவரது மகன் விக்கிரம சோழனால் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கால மனிதர்களின் தமிழ் எழுத்து வடிவத்தை இங்கு காணலாம். சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இத்தனை பெரிய கற்கோயில் ஆங்காங்கே சிதைந்து காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின்போது பீரங்கி குண்டுகள் தாக்குதலால் இந்த சேதம் ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கற்தூண்கள் அனைத்தும் சோழர்கால கலைநயத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை பொருத்தி மிகப்பெரிய கலைநயமிக்க கோயிலை எழுப்பினால் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்பது நிச்சயம்.
இக்கோயிலில் பிரதோஷ விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலை 2 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும். மாத சிவராத்திரி அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் திறந்திருக்கும். மாசி மகத்தன்று இந்த ஊரைச் சுற்றியுள்ள கீழ் சிவிரி, பழமுக்கல், பெருமுக்கல், நல்லாளம் ஆகிய ஊர்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் மலையேறி முக்தியாசலேஸ்வரரை தரிசித்து பின் மலையிறங்குவது வழக்கம். மகாசிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இம்மலை மீதுள்ள கருங்கல் தீபமேடையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணா
மலைக்கு அடுத்து நெய்யினால் ஏற்றப்படும் (ª)மகாதீபம் இதுதான்.
இங்குள்ள வால்மீகி ஆசிரமம் மிகவும் சிறப்பு மிக்கது. வால்மீகி முனிவர் இங்கு வந்து தியானம் செய்ததாக கூறுகின்றனர். இங்குள்ள வால்மீகி தீர்த்தம் எக்காலத்திலும் வற்றாத மகிமை கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தர், பாலயோகி சுவாமிகள் போன்ற மகான்கள் இந்த மலையில் தவமிருந்து அருள் பெற்றுள்ளனர்.
மலைக்கோயிலை அடைவதற்கு முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலை முழுமையாக புனரமைப்பு செய்து, முறையாக படிக்கட்டு வசதி, மின்விளக்கு, குடிநீர், தங்கு மண்டபம் உள்ளிட்ட வசதிகளை செய்தால் மிகப்பெரிய ஆன்மிகத் தலமாக இந்த மலை பொலிவுபெறும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மலைக்கோயில் திண்டிவனம்&மரக்காணம் பாதையில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருபவர்கள் மரக்காணம் பேருந்து நிலையத்திலிருந்து பெருமுக்கலை அடையலாம். திண்டிவனம்&மரக்காணம் இடையேயும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
Comments
Post a Comment