பார்த்தசாரதி, நின் பாதமே கதி...






வேதனைகளை விரட்டும் சங்கொலி உற்சவர் பார்த்தசாரதியின் முகத்தில் காயங்கள். வெறும் சாரதியாகப் போரில் ஈடுபட்டாலும் அர்ஜுனனைக் காக்க, பீஷ்மர் ஏவிய கணைகளை தன் முகத்தில் தாங்கி, உதிர்த்ததால் ஏற்பட்ட வடுக்கள். அதைப் பார்க்கும்போதே மனசு விண்டுபோகிறது. தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை அழிக்க, பகவான்தான் எத்தனை துன்பங்களை மேற்கொண்டிருக்கிறார்! முக்காலமும் உணர்ந்தவரானாலும் தற்காலத்திய தன்மைக்கேற்பத் தன்னைக் குறுக்கிக் கொண்டு, அதனால் தர்மம் விஸ்வரூபம் எடுக்க உதவியிருக்கிறார். சகாதேவனின் யோசனைப்படி களபலிக்கு துரியோதனன் நாள் குறித்தபோது, அதைத் தெரிந்து கொண்டு, நதிக்கரையோரம் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க, அது கண்டு திகைக்கும் சூரியனும், சந்திரனும் அங்கே வர, சகாதேவன் குறித்துக் கொடுத்த முகூர்த்த நாளையே மாற்றியது வெறும் தந்திரம் மட்டுமல்ல; தகாதவர்கள் வென்றிடக் கூடாது என்ற உலகளாவிய நோக்கும்தான். ராமதூதனான சிரஞ்சீவி அனுமனை அர்ஜுனனுடைய தேர்க் கொடியாகப் பறக்கச் செய்து அர்ஜுனனுக்குப் பராக்கிரம ஆசியை அருளுமாறு கேட்டுக் கொண்டதும் அதே நோக்கத்திற்காகத்தான். எந்த தர்மத்துக்காகப் பிரயத்தனப்படுகிறோமோ, அந்த தர்மத்தின் தேவதை கர்ணனைக் காத்து நிற்பது கண்டு மனங்கலங்கி, தன்னையே தாழ்த்திக் கொண்டு, கர்ணனிடம் அவன் தான, தரும புண்ணியங்களை யாசகமாகப் பெற்றதும் அந்த நோக்கம் நிறைவேறத்தான். அர்ஜுனனின் குழம்பிய மனதைப் பாறையாக இறுக வைத்து சொந்த, பந்தங்களுக்கெல்லாம் மீறிய தார்மீக நோக்கத்தை அவனுக்குப் புகட்டி, வெற்றி கொள்ள வைத்ததும் அதற்காகத்தான். போர் முடிந்தபின் ஒரு சாரதியின் கடமையையும் மீறி, அர்ஜுனனை தேரைவிட்டு முதலில் இறங்கச் சொல்லி, அதன் பிறகு தான் இறங்க, உடனே எதிரி பாணங்களால் துளைக்கப்பட்டிருந்த தேர் பளிச்சென்று எரிந்து சரிந்ததும் அதே நோக்கத்துக்காகத்தான்.

பஞ்சபாண்டவர்களுக்காக உதவிய விஷயங்கள்தான் இவை என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், அவை ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்காக பரந்தாமன் ஆற்றிய சேவைகள் என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல, அன்றைன்றைய போர் முடிந்ததும், மாலையில் தேர் இழுத்த குதிரைகளுக்கு உணவளிப்பதும், அவற்றுடன் அன்பாகப் பேசியபடியே அழுக்குப் போகக் குளிப்பாட்டுவதும், அன்றன்றைக்கு தேருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பழுதுகளை சரி பார்த்து, அதனை அடுத்த நாள் போருக்குத் தயார் நிலையில் வைப்பதும் என்று ஒரு சராசரி சாரதியின் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பணியாற்றினாரே, அந்த எளிமை, சமுதாயத்தில் அனைவரும் பின்பற்றப்பட வேண்டிய ஓர் அருங்குணம் என்பதைச் சுட்டிக்காட்டினாரே, அந்தப் பெருந்தன்மைக்குதான் ஈடு ஏது! தான் பரந்தாமனாகவே இருந்தாலும், அப்போதைக்குத் தான் ஏற்றிருக்கும் பொறுப்பை எப்படி முழுமையாக, முறையாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஒழுங்குப் படிப்பினையை அனைவருக்கும் உணர்த்தினாரே, அந்தக் கடமை உணர்வுக்குதான் நிகர் ஏது! அதே பார்த்தசாரதியை உற்சவராக இங்கே தரிசிக்கும்போது, மகாபாரதப் போர்க் காட்சிகள் நினைவலைகளாய் பொங்கி வருவதைத் தவிர்க்க முடியாதுதான். அதற்கு முக்கிய காரணம்,

சூரியோதயத்தில் போர் துவங்கும் அறிகுறியாகவும், அஸ்தமனத்தில் அன்றைய போர் முடிந்ததைத் தெரிவிப்பதாகவும், வெற்றியை அறிவிக்கவும் ஒலிக்க, தான் பயன்படுத்திய பாஞ்சஜன்ய சங்கை மட்டுமே இந்த பார்த்தசாரதி தன் வலது கையில் வைத்திருப்பதுதான். அன்றும் சரி, இன்றும் சரி, தன் பக்தர்களுடைய மனக் குழப்பங்களை, வேதனைகளை, எதிரிகளை, அந்த சங்கொலியால் அவர் விரட்டியடிக்கிறார்.

மூலவர் வேங்கடகிருஷ்ணனை குடும்ப சமேதராக தரிசிக்கும்போது மனசுக்குள் தோன்றும் பெருமை, உற்சவர் விக்ரகத்தைப் பார்க்கும்போது வேதனையாக மாறுவதைத் தவிர்க்க முடியவில்லைதான். கம்பீரத் தோற்றமும், ஆனால் காயம் பட்ட முகமும் நமக்குள் தோற்றுவிக்கும் உணர்வுகள்தான் அவை. இதே திருவல்லிக்கேணியில் வாழ்ந்த மகாகவி பாரதியும், கண்ணன் பாடல்களை உளம் நெகிழ இயற்றியுள்ளார். கண்ணனை தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய் போற்றி நெஞ்சம் தழுதழுக்க கண்ணன் பாடல்களை இயற்றியுள்ளார் அவர். அது மட்டுமா, பாஞ்சாலி சபதம் என்ற தன் கோணத்து மகாபாரதக் கவிதைத் தொகுப்பையும் படிப்போரை நேரில் காணும் உணர்வு கொள்ளச் செய்யும் வண்ணம் உருவாக்கியிருக்கிறார் என்றால், அது, தினம் தினம் அவர் இந்த வேங்கட கிருஷ்ணனை, பார்த்தசாரதியை அவர் சேவித்திருப்பாரே, அதன் அற்புத பலன்தான்; நாராயணீயம் இயற்றிய பட்டத்திரி போல தன் சந்தேகங்களை, விளக்கங்களை இந்த கிருஷ்ணனிடமே கேட்டுத் தெளிவு பெற்றிருப்பார்,
மகாகவி.

பார்த்தசாரதி சுவாமி சந்நதிக்கு வலப்புறம் புஜங்க சயனத்தில், ஆதிசேஷ மஞ்சத்தில் சயனத் திருக்கோலத்தில் மந்நாதன் சேவை சாதிக்கிறார். இவருக்கு அருகிலேயே சக்கரவர்த்தித் திருமகனான ராமபிரான். ஆண்டாள் தன் சந்நதியில் அழகுற நின்றிருக்கிறாள். அவள் சந்நதிக்கு நேர் எதிரே மண்டப சுவரில் திருப்பாவை 30 பாடல்களும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டு, கூடவே ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஓர் ஓவியம் காட்சியாய் உயிர் கொடுக்கிறது.
தல விருட்சம் மகிழ மரம். பக்தர்கள் மனம் மகிழ மணம் பரப்பும் மரம். ராமானுஜர் இங்கே தனிப் பெருமையுடன் கொண்டாடப்படுகிறார். பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் எல்லா விழாக்களிலும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் உண்டு. உற்சவர் அருகிலேயே அவருக்கும் இடம் கொடுத்து, முதல் மாலை உற்சவருக்கென்றால், அடுத்த மாலை இந்த ஆழ்வாருக்கு என்ற அளவில் சிறப்பு செய்யப்படுகிறார் ராமானுஜர்.

பேயாழ்வார் இந்த மயிலைதிருவல்லிக்கேணியில் அவதரித்தவர். பார்த்தசாரதி கோயிலுக்கு இடப்புறம் அவருடைய மண்டபம் அமைந்துள்ளது. இந்த இடத்தை முற்றிலுமாகப் பழுது பார்க்க முயன்றபோது சாதாரணமாகத் தெரிந்த மண்டபத்தைச் சுற்றி சுமார் நாலடி ஆழத்துக்கு புராதன கட்டமைப்புடன் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

திருவல்லிக்கேணி கடலருகே எளிமையே உருவாக கொலுவிருக்கும் வேங்கட கிருஷ்ணன், அலைகள் அடுத்தடுத்து பாய்ந்துவர, உடனேயே அவை இவன் திருவுரு கண்டு பணிந்து பின்வாங்குவது போல, தன் பக்தர்களின் துன்பங்களையெல்லாம் விரட்டியடித்து, அவர்தம் மனதில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கக் காத்திருக்கிறார்.

Comments