ஆடி அமாவாசை (28.07.1908). உற்றார்- உறவினரும், நண்பர்களும், நகர மக்களும் சுவாமிகளின் வீட்டில் குழுமியிருந்தனர். சுவாமிகள் கண் மூடிப் படுத்திருந்தார். அவரின் உள்ளம் முழுக்க பரம்பொருள் தியானம். இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்தவர், மெள்ள எழுந்தார். சுற்றியிருப்பவர்களை மௌனமாகப் பார்த்தவர், தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்து கண்களை மூடினார். தியானத்தில் ஆழ்ந்தார். உச்சிப் பொழுது... ஏரல் நகரின் அந்த ஜோதி, பரம்பொருளோடு கலந்தது.
ஏரல் நகரமே துக்கத்தில் மூழ்கியது. சுவாமிகள் கூறியபடியே, ஊருக்கு தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில், ஆலமரத்தின் அடியில்... வானில் பறந்த கருடனின் நிழல் சுவாமிகளின் திருமேனியின் மீது விழ, அமர்ந்த கோலத்தில் இருக்கும் சுவாமிகளின் திருமேனியை மலர்களாலும், மண்ணாலும் மூடி சமாதிப்படுத்தினர். அவர் படித்த நூல்கள், பயன்படுத்திய விலைமதிப்பு மிக்க பொருட்கள் மற்றும் அணிகலன்களையும் சுவாமிகளின் திருவடியில் சமர்ப்பித்து சமாதிப் படுத்தினார்கள். சுவாமிகளின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருந்த அந்த மக்களுக்கு அப்போது தெரியாது... இது முடிவல்ல துவக்கம் என்பது!
ஏரல் சேர்மன் சுவாமிகள் தெய்வ நிலையடைந்து ஒரு சில நாட்கள் ஆகியிருக்கும். சுவாமிகள் சமாதிப்படுத்தப்பட்ட ஆலமரத்தடிக்கு வந்தது ஒரு கும்பல். அவர்களில் சிலர் கடப்பாறையால், சுவாமிகள் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். சுவாமிகளின் உடலோடு புதைக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடுவதே அவர்களின் நோக்கம்.
திடீரென நிகழ்ந்தது அந்தச் சம்பவம். தாமிரபரணியின் கரையில் இருந்து, சீறியபடி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகங்கள், இவர்களை விரட்ட ஆரம்பித்தன. தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடிய திருடர்கள் அதன் பிறகு இந்த திசை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
ஆனால், ஓர் ஆச்சரியம்... இந்தச் சம்பவம் அப்படியே சேர்மன் சுவாமிகளின் தந்தை ராமசாமி ஐயாவின் கனவில் தெரிந்ததாம். பதறி எழுந்தவர், ஆலமரத்தடிக்கு ஓடோடி வந்தார். அங்கே, மண் தோண்டப் பட்டிருப்பதையும், அருகில் கடப்பாறை மற்றும் மண்வெட்டிகள் கிடப்பதையும் கண்டார்.
கனவு மெய்ப்பட்டிருப்பதைக் கண்டு சிலிர்த்துப்போன அந்த முதியவருக்கு, ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புலப்பட்டது! தெய்வநிலை பெற்றுவிட்ட தன் மகனுக்கு அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்தார். விரைவில், அந்த ஆலமரத்தின் அடியில் சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டது. இன்றும், ஏரல் சேர்மன் சுவாமிகளின் தெய்வ சாந்நித்தியத்துக்கு சான்றாகத் திகழ்கிறது இந்த ஆலயம். அன்றும் இன்றும் சுவாமிகளால் இங்கு நிகழும் அற்புதங்கள் ஏராளம்!
அப்படித்தான் ஒருமுறை ஆடு-மாடு மேய்க்கும் சிறுவர்களுக்குக் காட்சி தந்தார் சுவாமிகள். சமாதி நிலைக்குப் பிறகும் சுவாமிகள் தரிசனம் தந்த விஷயத்தை, ஊருக்குள் சொன்னார்கள் சிறுவர்கள். இதைக் கேட்டு ஏரல் மட்டுமல்ல, சுற்றியிருக்கும் ஊர்களில் வசிக்கும் அடியார்களும் சுவாமி களின் மகிமையை அறிந்தார்கள். கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்து சுவாமிகளின் அருள் பெற்றுச் சென்றார்கள்.
ஏரல் சேர்மன் சுவாமிகள் உயிருடன் இருந்த போது அவரிடம் சிகிச்சைக்கு வந்தவள் சுடலைபேச்சி. இவளும் சுவாமிகளின் தரிசனம் குறித்துக் கேள்விப்பட்டு, ஏரலுக்கு வந்தாள். சமாதியைக் கண்டவள், கண்ணீர் மல்க கைகூப்பினாள். ''சாமி, நீங்க உயிரோட இருந்தப்ப தந்த மருந்தை சாப்பிட்டும் பலன் இல்லையே? வேறு எந்த மருந்து எனது நோயைக் குணப்படுத்தும்?'' என்று புலம்பினாள்.
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெண்ணுக்குக் காட்சி தந்த சுவாமிகள், ''தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும்'' என்று அருளி மறைந்தார். அதன்படியே தீர்த்தத்தையும் நிலக்காப்பையுமே மருந்தாக சாப்பிட்டு, சுவாமிகளின் அருளால் நோய் நீங்கப் பெற்றாள் அந்தப் பெண். இந்த அற்புதத்தைத் தொடர்ந்து, சுவாமிகளின் புகழ் அண்டை மாநிலங்களுக்கும் பரவியது.
சுவாமிகளிடம் பக்தி கொண்ட அடியவர்கள், அவரின் அருளை நாடி இங்கு வந்தனர். ஆனால் சில தீயவர் களோ, அவரது சக்தியை வசப் படுத்த இங்கு வந்தனர்.
கேரள மந்திரவாதிகளான அவர்கள் சாதாரணமான வர்கள் கிடையாது. மந்திரத்தால் தெய்வ சக்திகளையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து விடும் வல்லமை பெற்றவர்கள். எனவேதான், சேர்மன் சுவாமி களின் சக்தியையும் சுலபமாக வசப்படுத்தி விடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள் போலும். ஆனால், சேர்மன் சுவாமிகள் சும்மா விடுவாரா?
மந்திர ஸித்திகள் கைவரப்பெற்ற அவர்களிடம் தனது ஸித்திகளை காட்டத் துவங்கினார். சமாதிக்கு வந்திருந்த மந்திரவாதிகளை நோக்கி வெள்ளிப் பிரம்பை வீசியெறிந்து எச்சரித்தார். ஆனால், மந்திரவாதிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.
சுவாமியை கட்டிப்போட்டுவிட்டு பூஜையை ஆரம்பித்தனர். மறுகணம்... அங்கே நிகழ்ந்தது என்ன தெரியுமா? மந்திரவாதிகளை நோக்கி பெரும் படை ஒன்று ஆர்ப்பரித்து வந்தது. ஆக்ரோஷத்துடன், மின்னல் வேகத்தில் வரும் படைவீரர்களைக் கண்டு மிரண்டு போனார்கள்.
பெரும் படைக்கு முன் இவர்களின் மந்திர ஸித்திகள் எடுபடுமா?! 'வீரர்களின் கையில் சிக்கினால் அவ்வளவுதான்!' என்று, மந்திரவாதிகள் தலைதெறிக்க ஓடினார்கள். ஊர் எல்லையை விட்டு நெடுந்தூரம் வந்ததற்குப் பிறகுதான், போன உயிர் திரும்பி வந்தது மந்திரவாதிகளுக்கு!
ஏன் இப்படி நடந்தது என்று யோசித்தவர்களுக்கு, எல்லாம் ஏரல் சுவாமிகளின் செயல்தான் என்பது தெரிய வந்தது. 'சுவாமிகளின் தெய்வீக ஆற்றலுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை' என்று முடிவு செய்தவர்கள், மறுநாள் சுவாமிகளின் சந்நிதிக்கு ஓடோடி வந்தார்கள். சமாதியின் முன் நின்று மனமுருக மன்னிப்பு வேண்டிச் சென்றார்கள்.
சுவாமிகளின் அருளாடல் தொடர்ந்தது. மத பேதமின்றி திருவருள் புரிந்தார் அவர்.
மரியாள் என்ற பெண், உரிய வயதை அடைந்தும் பூப்பெய்தவில்லை. எங்கெங்கோ சென்றும் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. அவளின் பெற்றோரிடம் நண்பர்கள் சிலர், ஏரல் சுவாமிகளின் மகிமைகளை எடுத்துச் சொல்லி கோயிலுக்கு வருமாறு அழைத்தனர். மரியாளின் பெற்றோர் முதலில் தயங்கினர். ஆனால் பிறகு, சுவாமிகளின் அற்புதங்களைப் பற்றி மற்றவர்கள் எடுத்துச் சொல்ல, பின்னர் சம்மதித்தனர்.
தங்கள் மகளுடன் சுவாமிகளின் சந்நிதானத்தை அடைந்ததுமே ஒருவித பரவசம் தொற்றிக் கொண்டது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன், தாமிரபரணிக்குச் சென்றனர். உடல் குளிர- உள்ளம் சிலிர்க்க நீராடியவர்கள், ''சாமி... உங்கள நம்பி வந்துட்டோம். நீதான் அருள் புரியணும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டு கரையேறினார்கள்.
சற்று நடப்பதற்குள்... 'அம்மா' என்று அலறிய மரியாள், வயிற்றைப் பிடித்தபடி தரையில் சுருண்டாள். அந்த அன்னையின் முகத்தில் மலர்ச்சி! மகிழ்ச்சியுடன் சொன்னாள் கணவனிடம்... ''நம்ம மக பெரியமனுஷி ஆயிட்டா!''
கண்ணீர் மல்க... ஏரல் சுவாமிகளின் கோயில் இருக்கும் திசை நோக்கி கரம்கூப்பி வணங்கினார் மரியாளின் தந்தை!
Comments
Post a Comment