தாமிரபரணி கரையினிலே...ctd






தெய்வீக மூலிகைகளையும் சித்த புருஷர்களின் திருவருளையும் தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் பொதிகையில், நீருக்கும் காற்றுக்கும்கூட மருத்துவ குணம் உண்டு!

பாம்புக்குப் பகையான சிறியாநங்கை, இரும்பையும் தங்கமாக்கும் கல்தாமரை மட்டுமல்ல... பல வருடங்களுக்குப் பசிக்காமல் வாழ உதவும் பழங்களும், ஆயுளை நீட்டிக்கும் அற்புதச் செடிகளும் இங்கே உண்டு! பண்டைய இலக்கியங்களும் இதை மெய்ப்பிக்கின்றன.

காயசண்டிகை என்ற வடநாட்டுப் பெண், கணவனுடன் தேனிலவைக் கொண்டாட பொதிகைக்கு வந்தாள். தாமிரபரணிக் கரையெங்கும் கணவனுடன் உலா வந்தாள். ஓரிடத்தில், மழை நீரில் மிதந்து வந்த நாவற்கனியைக் கண்டாள். ஆனால், அளவில் அது பனம்பழம் போன்று

இருந்தது. விளையாட்டாகக் கருதி, அந்தப் பழத்தைக் காலால் உதைத்தாள்.

பாவம் அவள்! 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே காய்க்கும் அற்புதமான பழம் அது என்பதோ, அந்தப் பழத்தை உண்டால் 12 வருடங்களுக்கு பசிக்காது என்பதோ அவளுக்குத் தெரியாது. இந்தப் பழத்தை சாப்பிட்டு, 12 வருடங்கள் தவத்தில் ஆழ்ந்து விடுபவர் விருச்சிக முனிவர். இவர், காயசண்டிகையின் செயலால் கோபம் கொண்டு அவளை சபித்ததாகக் கூறுகிறது மணிமேகலை!

அகத்தியர் பனிரெண்டாயிரம், போகர் ஏழாயிரம், புலிப்பாணி மூவாயிரம் ஆகியன, பொதிகை- மூலிகைகளை விவரிக்கும் நூல்களே. வெடதழை எனும் மூலிகையைக் கொண்டுதான், தொழுநோயாளிகளின் நோயைக் குணப்படுத்தினாராம் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்! இன்றும்... பொதிகையில் வாழும் அன்னம்மாள் பாட்டி என்பவரின் வாரிசுகள், அரிய மூலிகைகளைக் கொண்டு மஞ்சள்காமலை நோயை தீர்த்து வருகிறார்கள்!

பொதிகை மலை, தனது மூலிகைகளால் மக்களின் உடற்பிணி தீர்த்தது என்றால், இதன் சாரலிலும் தாமிரபரணிக் கரைகளிலும் வாழ்ந்த சித்தபுருஷர்கள், உடற்பிணிகளை மட்டுமின்றி அடியவர்தம் உள்ளப் பிணிகள் தீரவும் அருள் புரிந்தார்கள். அவர்களில் ஒருவர் ஏரல் சேர்மன் சுவாமிகள்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி.



ஸ்ரீவைகுண்டம் தென்கால் வழியாக பிரியும் தாமிரபரணி... 'கடல் பாதி கடம்பா பாதி' என்று சிறப்பு பெற்ற கடம்பா குளத்தை அடைந்து, அங்கிருந்தும் இன்னும் பல குளங்களைக் கடந்து, 'அருஞ்சுனை' எனும் பெயரில் ஓர் ஊருணியாக தேங்கிக் கிடக்கிறது.

இதன் கரையில் கோயில் கொண்டிருக்கிறார் அருஞ்சுனை காத்த ஐயனார். மேலப்புதுக்குடி கிராமத்தினரின் காவல் தெய்வம் இவர். இந்தக் கிராமத்தில் வசித்தவர் குமாரசாமி நாடார். இவர் ஒருமுறை, தங்கள் கிராமத்துக்கு வந்த முனிவர் ஒருவரை வணங்கி வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்தார். இவரின் பணிவிடைகளால் மனம் மகிழ்ந்த அந்த முனிவர், தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமிக்கு தந்தார்.

குமாரசாமி, அந்த ஏட்டில் இருக்கும் மந்திரச் சொற்களை மனதில் உருவேற்றிக் கொண்டார். இந்த மந்திரங்கள் மூலம், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வேப்பிலை அடித்து விஷத்தை இறக்கினார் (இதை, தென் மாவட்டங்களில் பார்வை பார்த்தல் என்பர்).

காலங்கள் ஓடின. குமாரசாமிக்கு மகனாகப் பிறந்தார் ராமசாமி அய்யா. இளம் வயதிலேயே இவரும் மந்திர மொழிகளை நன்கு கற்றுக் கொண்டார். திருமண வயதை அடைந்ததும் இவருக்கு உமரிக்காடு எனும் ஊரைச் சார்ந்த சிவனைந்தம்மாளை மணம் முடித்து வைத்தனர்.

தாம்பத்திய வாழ்க்கை இனிதே கழிந்தது. ஆனாலும், இந்தத் தம்பதிக்கு வெகு காலமாக குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. ஒருநாள், அருஞ்சுனை காத்த ஐயனார் சந்நிதிக்குச் சென்றவர்கள், சுனையில் நீராடினர். அப்போது, வானில் வட்டமிட்ட கருடன் சிவனைந்தம்மாளை மூன்று முறை வலம் வந்தது. குளித்து கரையேறியும்கூட அவர்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. 'இது என்ன அதிசயம்' என்று வியப்புடன் கருடாழ்வாரை வணங்கிவிட்டு வீடு திரும்பினர் இருவரும்.

வீட்டு வாசலில் காவி உடை தரித்த துறவி ஒருவர் நின்றிருந்தார். அவரை வணங்கினார்கள். அவர், குடிக்க தண்ணீர் தருமாறு சிவனைந்தம்மாளிடம் கேட்டார். ராமசாமி அய்யாவும் அவர் மனைவியும் கொடுப்பதில் சளைத்தவர்களா என்ன? தண்ணீர் கேட்டவருக்கு சொம்பு நிறைய பால் கொண்டு வந்து கொடுத்தார்

சிவனைந்தம்மாள். பாலைப் பருகி பசியாறினார் துறவி. பிறகு கருணையுடன் ராமசாமி அய்யா தம்பதியை ஏறிட்டவர், ''உங்களது குறை விரைவில் தீரும். இருவரும் செட்டியாபத்து கோயிலுக்குச் சென்று ஐந்துவீட்டு சாமியை தரிசனம் செய்யுங்கள்;

மகன் பிறப்பான்'' என்று அருளாசி வழங்கிச் சென்றார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ளது செட்டியாபத்து. துறவியின் வாக்குப்படி, ராமசாமி அய்யாவும் அவரின் மனைவியும் இந்தப் புண்ணியத் தலத்துக்குச் சென்றனர். அன்று இரவு கோயிலிலேயே தங்கினர். அவர்களின் கனவில் தோன்றிய இறைவன், ''உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். அவனுக்கு அருணாசலம் என்று பெயரிடுங்கள். அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான்'' என்று அருளினார்.



அருள் வாக்கு பலித்தது. மறு மாதமே சிவனைந்தம்மாள் கருவுற்றார். கண்ணனைக் கருவில் சுமந்த தேவகிக்கு எப்படி குமட்டலும் வாந்தியும் இல்லையோ, அதுபோல சிவனைந்தம் மாளுக்கும் மசக்கையால் ஏற்படும் குமட்டல்- வாந்தி எதுவும் இல்லை. விக்கிரம ஆண்டு, புரட்டாசி 18-ஆம் நாள் உத்திர நட்சத்திரத்தில் (2.10.1880) அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அருணாசலம் என்று பெயரிட்டனர். ராமசாமி அய்யா மனம் குளிர்ந்தார். தனது குழந்தைக்குப் பெயர் சூட்டிய செட்டியாபத்து கோயிலுக்கு, வேலைப்பாடுகளுடன் அழகிய மண்டபம் கட்டிக் கொடுத்தார்.

நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தெய்வாம்சத்துடன் வளர்ந்தான் அருணாசலம்.

அந்தக் காலப் பள்ளிக்கூடம், தற்போது உள்ளது போல் கிடையாது. அண்ணாவி பள்ளிக்கூடம் என்பார்கள். திண்ணைப் பள்ளியாகத் திகழ்ந்த இதுவும் அவ்வளவு அதிக எண்ணிக்கையில் கிடையாது. மூலக்கரையில் ஓர் அண்ணாவி பள்ளிக்கூடம் இருந்தது. இங்கே ... ஓலைச் சுவடியில், 'அரி ஓம் நம' என்று எழுதி ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தான் அருணாசலம். ஆரம்பக் கல்வி முடிந்ததும் அருணாசலம் வந்து சேர்ந்த திருவிடம் ஏரல் மாநகர்.

இவரால் இந்த நகரமும் தாமிரபரணி தீரமும் சிறப்படையப் போகின்றன என்பது அப்போது யாருக்கும் தெரியாது!

Comments