"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி''

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.

அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் 'அனுமன் சாலீஸா'வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் அனுமன் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ''ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்'' என்றார்.


அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ''அப்னே ஆப் ஹுவா!''ன்னு தானாகவே உண்டானது... 'சுயம்பு'ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா... அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே...''

அதற்கு ஸ்வாமிகள், ''ஜ்வாலாமுகியை பார்த்திருக் கியா?'' என்று கேட்டார். ''நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!'' என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள், ''சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே... பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?'' என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.

''வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்'' என்றார் கண்ணன்.

உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்...

''அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:||

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது...

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்... நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்... மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல... லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

Comments

Post a Comment