கிடந்தான், இருந்தான், நின்றான், நடந்தான்!

பிரளயம் பெருக்கெடுத்து, பிரபஞ்சத்தையே மூழ்கடித்தது. புத்துலகம் தோன்ற வேண்டியதற்கான அறிகுறி இது. மூழ்கிய பகுதிகள், நீர் மட்டம் குறைவதற்காகக் காத்திருந்தன. அதேபோல வெள்ளம் வடிந்தபோது மேலே தலை நீட்டிய பகுதிகளுள் ஒன்று & ஒரு மலை. இதனாலேயே இது திருநீர் மலையாயிற்று. ஆனால், அனைவரும் பரவசப்படும்படி அந்த மலை காட்சி தந்தது. ஆமாம், அந்த மலைமீது அரங்கநாதர் பள்ளி கொண்டிருந்தார். மனித முயற்சிகளல்லாமல், தானே வெளிப்படுத்திக் கொண்ட ‘ஸ்வயம் வ்யக்த’ தலம் இது. இன்னொரு புராண சம்பவத்தையும் சொல்கிறார்கள்: இறைக் கடமையை ஒரு பொழுது கூடத் தவிர்க்க விரும்பாத முனிவர்களும், ரிஷிகளும் ஒரே நாளில் பல யாகங்களையும் ஹோமங்களையும் இயற்றி, அக்கினிக்கு ஆஹுதி அளித்தார்கள். ஏற்கெனவே உஷ்ணமாக இருந்த அக்கினி, இந்த ஆஹுதிகளால் மேலும் வெப்பமடைந்து மிகவும் துன்புற்றான். உடனே அவன் பரந்தாமனின் தாள் பணிந்து நிவர்த்தி கோர, அவர் இந்தத் திருநீர்மலையை சிபாரிசு செய்தார். இங்குள்ள மூலிகைகளை புசித்தால் அவன் குளிர்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்தார். உடனே இங்கு வந்த அக்கினி புல், பூண்டு என்று எதையும் விடாமல் தின்று தீர்த்து, குளிர, அப்போதே இந்த மலை தீய ஆரம்பித்தது. வறட்சி கோர தாண்டவம் ஆட, மக்களெல்லாம் எம்பெருமானை தம்மைக் காத்தருளுமாறு கோரினார்கள். உடனே அந்தக் கருணை வள்ளல் பெருமழை பெய்யச் செய்து அந்தப் பகுதிக்கு குளிர்ச்சியூட்டினார். அதனால் திருநீர் மலையாயிற்று. ஆனால் மழை சுமார் 6 மாதங்களுக்குத் தொடரவே, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக இரண்டு பேர் & திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்.


இந்த மலைக்கு வந்து அரங்கனை சேவித்து மங்களாசாசனம் செய்ய விரும்பிய அவர்கள் நெடுங்காலம் மழைநீர் வடிவதற்காகக் காத்திருந்தார்கள். ‘மாமலையாவது நீர்மலையே’ என்றும் பாடி வைத்தார்கள். வடிந்தபின் தரிசனம் கண்டு பேருவகை அடைந்தார்கள்.திருமால் எட்டு வகையான சயனக் கோலங்களை காட்டியிருக்கிறார். இங்கே திருநீர்மலையும் அவற்றில் ஒன்றாகிப் பெரும் பேறடைந்திருக்கிறது. அரங்கனின் இந்தக் கோலம், மாணிக்க சயனம் எனப்படுகிறது. சதுர்புஜங்களுடன் ‘கிடந்தானா’கத் திகழ்கிறார் அரங்கன். ஸ்ரீதேவி, பூதேவி, பிரம்மன் சகிதம் சேவை சாதிக்கிறார். தெற்கே திருமுகமண்டலத்துடன் சயனித்திருப்பதால், இந்தத் தலம் மத்யரங்கம் என்று புகழப்படுகிறது.

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதும் வேங்கடமே பன்னாள் பயின்றது
அணிதிகழும் சோலை அணி நீர்மலையே
மணி திகழும் வண்தடக்கை மால்என்று அரங்கனைப் பாடி நெகிழ்கிறார் பூதத்தாழ்வார்.

இதே மலைக்கு வந்து நிரந்தரமாகக் கோயில் கொள்ள விரும்பிய ஒருவர் & நரசிம்மர். ஹிரண்யனை வதைத்த கோபம் அடங்காமல் ரௌத்திரம் பொங்க, திணறிய அவர், தன்னைக் குளிர்ப்படுத்திக்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் இந்தத் திருநீர்மலை. இந்தக் குளிர்ச்சியில் அவர் சாந்தமாகி, சாந்த நரசிம்மராகவே தரிசனம் தருகிறார். பிரகலாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இரு கரங்களுடன், மலர்ந்த முகத்தினராய், காட்சித் தருகிறார், நரசிம்மர். இந்த அமைப்பை ‘இருந்த கோலம்’ என்று வர்ணிக்கிறார், திருமங்கையாழ்வார். ‘முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் அவுணனவன் மார்வகலம் உகிரால் வகிராகி முனிந்து.... நிமிர்ந்தவன்’ என்கிறார். இந்த சாந்த நரசிம்மரை தரிசித்தாலேயே பில்லி, சூனியக் கட்டுகள் தளர்ந்து போகும்; பேய், பிசாசு என்ற மாய பாதிப்புகள் அண்டாது என்கிறார்கள்.
ஓங்கி உலகளந்த உத்தமன், ஓரடியால் மண்ணையும், இன்னொரு அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியால் மகாபலியின் சிரசை மிதித்து அவனை பூமிக்குள் அமிழ்த்தினார். விண் நோக்கி அவர் உயர்ந்தபோது அவர் திருப்பார்வையில் காண்டவ வனம் என்ற பகுதி பட்டது. அங்கே தோயாத்ரியகமாக நிமிர்ந்து நின்ற மலையைக் கண்டு புன்னகைத்தார் அவர். தன்னுடைய வாமன அவதாரத்தை விஸ்வரூபமாகக் காட்டிய தன்னைப் போலவே, சிறு மணல் மேடு, இறுகி, உயர்ந்து வளர்ந்து மலையாகி நின்ற கோலத்தை அவர் ரசித்தார். தன்னைப் போலவே தானே தோன்றிய மலை அது. அதன் நாயகனாக அரங்கன் அதற்கு அணி செய்கிறான். அவனுடன் தானும் உடனிருந்து பக்தர்களுக்கு அரிய தரிசனத்தையும், பேரருளையும் அள்ளி வழங்க விருப்பம் கொண்டார். அதன்படியே தானும் இந்த மலைக் கோயிலில் தனி சந்நதி கொண்டிருக்கிறார். ‘நடந்தான்’ கோலம் கொண்ட இந்த நாயகனை கம்பர் மனம் உருகிப் பாடியிருக்கிறார். இங்கே வந்து இந்த அற்புத தரிசனம் கண்ட அவர், ராமாயணத்தில்,

வேதங்களறை கின்ற உலகெங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ?
ஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ டொன்று ஒவ்வாப்
பூதங்கள் தோறும் உரைந்தால், அவையுனைப் பொறுக்குமோ?
&என்று வியந்து பாடியிருக்கிறார்.

நாயகன் இருக்கும்போது நாயகி இல்லாதிருப்பாளா? ரங்கநாயகி தாயார், தாய்மை பொங்கும் கருணைக் கண்களுடன் அருட்காட்சி வழங்குகிறாள்.மலைமீது அரங்கன் முதலான இந்த நால்வரையும் சேவிக்க 210 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இடையிடையே ஓய்வெடுக்க, படி மண்டபங்கள் சில அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபங்கள் அல்லாமல், சுமார் 25 படிகள் கடந்தபின், வலப்புறமாக ஒரு பாதை தெரிகிறது. அதில் சில அடிதூரம் நடந்து சென்றால், ஆஞ்சநேயர் எதிர்கொள்கிறார். இருகரம் கூப்பி அஞ்சலி ஹஸ்தனாக கண்களில் விநயம் பொங்கக் காட்சியளிக்கிறார்.

திருநீர்மலைப் பகுதியிலேயே ஆசிரமம் அமைத்து வால்மீகி வாழ்ந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அடிவாரத்துக் கோயிலில் நீர்வண்ணனாக அரங்கனை சேவித்த இவர் மனசுக்குள் கொஞ்சம் ஆதங்கம்: ‘என் ஆதர்ஷ புருஷன் ராமனை இங்கு நான் காண்பேனோ.’
உடனே அரங்கன் அவர் ஏக்கம் போக்கினார். ஸ்ரீராமனின் இக்ஷ்வாகு குலத்து வழிபாட்டு தெய்வமல்லவா அவர்! ராமாயணம் படைத்த கவித்தோன்றலின் விருப்பத்தை நிறைவேற்றாதிருப்பாரா? உடனே சீதை, லட்சுமணர் சகிதமாக கல்யாண ராமனாகவே காட்சி தந்தார். இந்த ராமர் சந்நதி, அடிவாரத்து கோயிலில், உற்சவர் விக்ரகங்களுடன் விளங்குகிறது. மலைக் கோயிலில் நரசிம்ம, வாமன அவதாரங்களை தரிசிக்கப் போவதை முன்கூட்டியே உணர்த்துகிறது, கோயில் நுழைவாயில் மண்டபமான, ‘கல்கி மண்டபம்.’ மலையடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாளை தரிசிக்கும் முன் மலை மீதிருக்கும் மூவரின் அருளை முதலில் பெறவேண்டும் என்பது இங்கு வழிபடு மரபு.

மீண்டும் படியிறங்கி நீர்வண்ணப் பெருமாளை சேவிக்க மலையடிவாரக் கோயிலுக்குள் போகலாம். நீலமுகில் வண்ணனுக்கு உகந்த நீர்த்தலம் இதுவென்பதை அவர் சந்நதியில் அமைக்கப்பட்டிருக்கும் நவீன வசதிகளும் நிரூபிக்கின்றன. ஆமாம், அந்த சந்நதி முற்றிலும் குளிர்ப் பதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. தண்ணருள் வழங்கும் தயாளன் என்பதை அது நிரூபிக்கிறது. நின்ற திருக்கோலம் பரவசமூட்டுகிறது. அபய, கடிக ஹஸ்தங்களுடன், சங்கு சக்கரம் ஏந்தி சதுர்புஜனாக அழகுத் தோற்றம். பெருமாளின் வலது பக்கத்தில் வால்மீகி முனிவர் நின்ற கோலத்தில் அஞ்சலி செய்யும் பாவனையாகக் காட்சி தருகிறார்.
சந்நதிக்கு வலதுபுறம் பள்ளியறை. பல நிலைக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டு எண்ணிலடங்கா பிம்பங்களைப் பிரதிபலிக்கின்றன. உற்சவ சமயங்களில் நீர்வண்ணப் பெருமாள் இங்கே எழுந்தருளி பல பிம்ப தோற்றங்களால் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்.
இதற்கு வலப்புறம் அணிமாமலர் மங்கைத் தாயார் திவ்ய தரிசனம் தருகிறார். அதாவது மலர்களையே அணிகலன்களாகப் பூண்டிருப்பவள். தத்துவார்த்தமாக அணிமாதி சக்திகளை அருள்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். அணிந்திருக்கும் மலர்களை விட மென்மையான தாயாரின் பார்வை மனதின் அனைத்து வலிகளையும் விரட்டி, பாசத்துடன் வருடி விடுகிறது.
தன் சந்நதியில் ஆண்டாள் திரிபங்க நிலையில் தோற்றம் தருகிறாள். அரங்கனுக்கு அருகாமையில் இருப்பது அவள் உடலிலேயே நாண நளினத்தை உண்டாக்கி மூன்று
வளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது போலிருக்கிறது!

கோயிலுக்குப் பின்னால் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் கோடையிலும் குளிர்த் தென்றலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் ஊரையே சூழ்ந்திருந்த நீர், குள அளவில் தற்போது சுருங்கிவிட்டாலும், அந்த ஊர் முழுவதற்கும் நிலத்தடி நீரை பஞ்சமில்லாமல் வழங்கிக் கொண்டிருப்பது நீர்வண்ணப் பெருமாளின் கருணையல்லாது வேறென்ன!
தல விருட்சம், வெப்பாலை மரம். இதில் மஞ்சள் சரடில் விரலி மஞ்சள் கிழங்கைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். இது, திருமணமாக வேண்டி கன்னியர் மேற்கொண்ட பிரார்த்தனை. அதேபோல, ஒரு சிறு கருங்கல், ஒரு ரூபாய் காசு இரண்டையும் ஒரு துணியில் முடிந்தும் கட்டி விட்டிருக்கிறார்கள். இது, குழந்தைப் பேறு கிடைக்க நேர்ந்து கொண்ட நேர்ச்சை. திருமண வாய்ப்புகள் வந்தும் தட்டிப் போய்க் கொண்டே இருக்கும் பெண்கள், மலைமீது ரங்கநாயகி தாயார் சந்நதி முன் பசு நெய்யில் தரையை மெழுகி சர்க்கரையில் கோலமிடுகிறார்கள். இவ்விதம் 6 வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்து முற்றிலும் தகுதியான மணமகனை அடைகிறார்கள். ராகு&கேது, சுக்கிர தோஷம் உள்ளவர்கள் ரங்கநாதரை சேவித்து மந்திரஸ்வீகார பூஜையை புதன்கிழமை அன்று செய்து நிவர்த்தி பெறுகிறார்கள்.

வளர்ச்சிக்கு வழிகாட்டும் கோயில் என்றே திருநீர்மலையைச் சொல்லலாம். படுத்திருக்கும் ஒரு குழந்தை, அமர்ந்து, நின்று, உறுதியாக நடக்கும் வளர்ச்சி போல இங்குள்ள பெருமாள்கள் அருள்பாலிக்கிறார்கள்.

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment