முருகப்பெருமானை 'அறுசமய சாத்திரப் பொருளோனே’ என அருணகிரியார் அற்புதமாக அழைக்கிறார். காணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் என ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதங்களாகிய ஆறு சமயத்துக்கும் பொதுவான மூர்த்தி கந்தபெருமான்.
ஆறுமுகக் கடவுளாகவே அவர் விளங்குகிறார். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் நோக்கிய ஆறு திருமுகங்கள் கொண்டவர் சண்முக மூர்த்தி.
பார்வதி பாலனாகிய முருகன் சரவணத்தில் தோன்றினார். அப்போது எடுத்து வளர்த்தவர் கள் கார்த்திகை மாதர்கள் ஆறுபேர்.
முருகப்பெருமானைப் பக்தர்களாகிய நாம் வழிபடுவது ஆறாவது திதியாக விளங்குகிற சஷ்டி நன்னாள்.
சூரபத்மனை வதம் செய்த சுடர்வேல் இறைவனை வழிபட காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற ஆறு உட்பகைவர்கள் மடிவார்கள்.
பராசர முனிவர் புதல்வர்களாகிய தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகிய அறுவருக்கு திருப்பரங்குன்றில் முருகர் உபதேசம் அருளினார்.
'ஆறெழுத்து’ கூறும் அன்பர்கள் சிந்தை குடிகொண்டான் என குமரகுருபரர் குறிப்பிடுகிறார். 'சரவணபவ’ என்னும் ஆறு எழுத்தே முருக பக்தர்கள் ஜபிக்கும் மூலமந்திரம்.
கந்தனை வந்தனை செய்து விரதம் இருக்க வேண்டிய மாத நோன்பு கிருத்திகை விரதம். ஆண்டு நோன்பு சஷ்டி விரதம். வார நோன்பு வெள்ளிக்கிழமை. ஆறாவது நாளாக விளங்கும் சுக்ரவார விரதம் சுப்ரமண்யருக்கு உகந்ததாக ஸ்ரீகந்த புராணம் கூறுகிறது.
முருகப்பெருமானின் கீர்த்தியும், சீர்த்தி யும், நேர்த்தியும் பூர்த்தியாக விளங்கும் புனிதத்தலங்கள் ஆறுபடைவீடுகள்... திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, (குன்றுதோறாடலில் சிறந்த) திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை.
முருகனடியார் அருணகிரிநாதர் அருளிய நூல்களும் ஆறு- திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல்மயில்சேவல் விருத்தங்கள்.
சிறந்த முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் பாடிய பாடல்கள்... ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்து ஆறு 6,666.
அருமையாய் அறுசமய சாத்திரப் பொருளுரைத்த
ReplyDeleteஅற்புதப் பகிர்வுக்கு நன்றி.