பூக்கூடையாக மாறிய சாம்பல் கலயம்

கயிலையில் இருந்து இரண்டு லிங்கங்களோடு வந்த காசியப முனிவர், ஒன்றை காஞ்சிபுரத்தில் ஸ்தாபிதம் செய்தார். மற்றொன்றை அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள செய்யாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்தார். காசியை போல முக்தி தலமாக இது பொலிவுபெறும் என அகக் கண்ணில் கண்டார். கால ஓட்டத்தில் வீடுபேறு வேண்டி ஏங்கும் ஜீவனெல்லாம் இந்த ஈசனால் அருளப்பட்டு அரனின் பேரானந்தச் சோலையில் இளைப்பாற, அந்த இடமே கயிலை ஆனது! காசியபர் பிரதிஷ்டை செய்த லிங்கம் சோளீஸ்வரர் என்று திருநாமம் பூண்டது. அன்னையை சுந்தராம்பிகை என்று கொண்டாடினார்கள். தன் பெயருக்கேற்ப பேயுரு தாங்கி வந்த ஜீவன்களை எல்லாம் அழகிய ரூபம் கொள்ளச் செய்து சாந்தப்படுத்தினாள் அன்னை.

இவருக்கு அருகே இருக்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் செய்யும் லீலையும் அபாரமானது.அந்தண இளைஞன் ஒருவன் தனது தந்தையின் அஸ்தியை ஒரு மண் கலயத்தில் நிரப்பி எடுத்துக் கொண்டு, அதை கங்கையில் கரைக்கும் பொருட்டு பயணமானான். செய்யாறு அருகே வந்த போது அந்தி சாய்ந்து இரவானது. செய்யாற்றில் நீராடிவிட்டு தனது நித்திய கடமைகளை முடித்து அங்கிருந்த கோயில் அருகே கண்ணயர்ந்தான்.பொழுது புலர்ந்து கண்விழித்து பார்த்தபோது அஸ்தி இருந்த மண்கலயம் நிறைய முல்லைப் பூக்கள்!

அதிர்ச்சியும் வியப்பும் மேலிட தன் கைகளைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அப்போது அத்தல ஈசன் திருக்காட்சி காட்டியருளினார். இந்த புண்ணிய தலத்திற்கு வந்து சேரும் எந்த ஒரு ஜீவனின் அஸ்தியும் புனிதம் பெற்று, அந்த ஜீவனை அரனும், அன்னை விசாலாட்சியும் தங்களோடு இணைத்துக் கொண்டு ஆசிர்வதிப்பதைக் காட்டி
உணர்த்தினார்.

காசியை போன்றே மோட்ச பூமியாக விளங்கும் செய்யாற்றங்கரையில் இன்றும் இறந்தவர்களின் அஸ்தியை புதைக்கும் வழக்கம் இருக்கிறது. அது மலராக மாறி, இறைவனடி சேருவதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். காசி விஸ்வநாதரும் விசாலாட்சியும் ஒரு ஜீவனை நற்கதியடைய செய்கிறார்கள் என்றால் சோளீஸ்வரரும், சுந்தராம்பிகையும் அதற்கு இளைப்பாறுதல் தந்து ஏக்கம் தணிவிக்கிறார்கள்.
பர வாழ்வுக்கு வழிகாட்டும் இவர்கள் இக வாழ்வுக்கும் அருள் செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கும், நல்ல கணவன் அமைய கையேந்துபவர்களுக்கும் தட்டாது தயை புரிகிறார்கள். தங்கள் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை தவறவிட்டவர்கள் இத்தல ஈசனை தரிசித்தாலே அந்த பாவம் நீங்கும். அவர்களது மூதாதையர் கடைதேறுவார்கள்

Comments