திருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்!

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று போற்றிப் புகழப்படும் திருவாசகத்தைத் தந்தருளியவர் மாணிக்க வாசகர். அந்தத் திருவாசகம் அரங்கேறிய தலம், ஆவுடையார்கோவில். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெருந்துறை எனப் போற்றப்படும் ஆவுடையார்கோவில்.

மதுரையை ஆட்சி செய்த அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். அவரின் அவதாரத் தலம், மதுரை திருமோகூரை அடுத்துள்ள திருவாதவூர் திருத்தலம். எனவே, அவரை வாதவூரார் என்றும் அழைத்தனர், மக்கள்.

ஒருமுறை, குதிரைகளை வாங்கு வதற்காகப் பயணப்பட்டார் வாத வூரார். வழியில், திருப்பெருந்துறையில் தங்கினார். அப்போது, அங்கே... குருந்த மர நிழலில், அடியவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் குரு ஒருவர். அவரைப் பார்த்ததுமே சிலிர்த்த வாதவூரார், அவரைப் பணிந்து, தனக்கு உபதேசிக்கும்படி வேண்டினார். அவரும் பஞ்சாட்சர மந்திரத்தை அருளிவிட்டு, அடுத்த கணம் சட்டென்று மறைந்தார். அந்தப் பரம்பொருளே நமக்கு அருளியுள்ளார் என அறிந்து பூரித்த வாதவூரார், அங்கேயே அமர்ந்து சிவனாரைத் தொழுது, பாடினார்; வந்த வேலையை மறந்துவிட்டு, அந்த இடத்தில் ஓர் அற்புதமான சிவாலயத்தை எழுப்பும் பணியில் ஈடுபட்டார்.



இந்த நிலையில், ''குதிரைகளை வாங்கி வராமல், அந்தக் காசில் கோயில் கட்டிக் கொண்டிருக் கிறானா, வாதவூரான்?!'' எனக் கடும் கோபம் கொண்ட மன்னன், உடனே வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான். அதையடுத்து, ஆவணி மாத மூல நட்சத்திர நன்னாளில், சிவனாரே நரியைப் பரியாக்கியதையும், வாதவூராருக்கு வைகை மணலில் மன்னன் தண்டனை தரும் வேளையில், வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்து திருவிளையாடல் நிகழ்த்தியதையும், மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்து, மன்னன் மன்னிப்புக் கேட்க, அகிலமே அவரைக் கொண்டாடிப் போற்றியதையும் நாம் அறிவோம்.

பிறகு, மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்றார்; கோயில் கோயிலாகச் சென்றார்; மனமுருகப் பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். திருப்பெருந்துறை திருத்தலத்துக்கு வந்து, சிவனாரின் திருநடனக் காட்சியைக் கண்டு மெய்யுருகி, திருவாசகத்தைப் பாடி அருளினார். இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... அடியவர் வேறு, சிவனார் வேறு என்றில்லாமல், மாணிக்கவாசகரே சிவமாகத் திகழும் ஒப்பற்ற திருத்தலம் இது!

இத்தகைய பெருமைகளை ஒருங்கே கொண்ட ஆவுடையார்கோவிலில், ஆனித் திருமஞ்சன விழாவும், மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்ட வைபவமும் சிறப்புற நடைபெறுகிறது. ஆனியில், பத்து நாள் பிரம்மோத்ஸவமாக ஆவுடை யார்கோவில் கிராமமே அமர்க்களப்படும். பத்தாம் நாள், ஆனி உத்திர நட்சத்திர நன்னாளில் (7.7.11), கோயிலில் திருவாசகம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, சிவனாரிடம் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் நிகழ்ச்சி, உத்ஸவமாக வந்து நிறைவுறும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும் எனச் சிலிர்ப் புடன் தெரிவிக்கிறார் கோயில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய நம்பியார்.



மாணிக்கவாசகருக்குக் குருந்த மர நிழலில் உபதேசம் செய்தார் அல்லவா, ஈசன்?! எனவே, இந்தத் தலத்தின் விருட்சம் குருந்த மரம்! இறைவனின் திருநாமம்- ஸ்ரீஆத்மநாதர்; இறைவி- ஸ்ரீயோகாம்பாள்; இங்கே, இறைவனும் இறைவியும் அரூபமாகக் காட்சி தருகின்றனர். கருவறையில், ஆவுடையார் எனும் சக்தி பீடமும், ஆவுடையாருக்குப் பின்னேயுள்ள சுவரில் 27 நட்சத்திர தீபங்களும், அதற்கு மேலே... சூரிய- சந்திர- அக்னி என மூன்று தீபங்களும் அமைந்துள்ளன. அம்பிகைக்கு சிவயோக நாயகி எனும் திருநாமமும் உண்டு. அம்பாள் சந்நிதியில், யோக பீடம் மட்டுமே உண்டு. பீடத்தின் மேல், சிவயோகத்தில் தேவி அமர்ந்திருப்பதாக ஐதீகம்!

ஸ்வாமி சந்நிதிக்கு முன்னேயுள்ள அமுத மண்டபத்தில், அன்னத்தைக் குவித்து வைத்தே நைவேத்தியங்கள் நடைபெறுகின்றன. காலையில் புழுங்கல் அரிசி அன்னம் மற்றும் கீரை; அர்த்தஜாம பூஜையில், பாகற்காய் நைவேத்தியம் ஆகியன இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.

சிவாச்சார்யர்களும் நம்பியார் பிரிவினரும் பூஜைகள் மேற்கொள்ளும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதரையும் மாணிக்கவாசகரையும் திருவாசகம் பாடி... மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்; உங்கள் மனங்களிலும் வீடுகளிலும் குருவருளும் திருவருளும் நிறைந்திருக்கும்!

Comments