அண்ணாமலையார் அருள் புரிய வேண்டும்!









அரடாப்பட்டு ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரர்

பஞ்சபூதத் தலங்களுள் அக்னித் தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய திருக்கோயில்களுள் ஒன்று இது. பிரமாண்டமான ஒரு நெருப்புக் குழம்பே, பின்னாளில் குளிர்ந்து திருவண்ணாமலையாக மாறியது என்கிறது புராணம். இங்கு குடி கொண்ட இறைவனார் அருணாசலேஸ்வரர் என்றும் அண்ணாமலையார் என்றும் ஆதி காலத்தில் இருந்தே வணங்கப்பட்டு வருகிறார். இந்த அக்னி மலையையே சிவ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள் பக்தர்கள். எனவேதான், இந்த மலையை வலம் வந்து வணங்குவது சிறப்பு. ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் முதலான பல மகான்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கிரிவலப் பாதையில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிகத்தை போதித்து, அண்ணாமலையாரின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமானார்கள். எண்ணற்ற அன்பர்களையும் நல்வழிப் படுத்தினார்கள்.



இறைவனாரின் இணையில்லா திருவருளுக்கும், எண்ணற்ற அருளாளர்களின் குருவருளுக்கும் திருவண்ணாமலை திருத்தலத்தில் என்றுமே பஞ்சம் இல்லை. அனுதினமும் ஆன்றோர்களால் ஆன்மிகம் போற்றப்படும் புனித பூமி இது. ஆச்சரியங்களுக்கும் அதிசயங்களுக்கும் இங்கே அணுவளவும் குறைவில்லை. சித்த புருஷர்கள் இன்றும் மலையின் உச்சியில் அரூபமாக வீற்றிருந்து தவ வாழ்க்கையிலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுவதுண்டு.


எங்கெங்கிருந்தோ பக்தர்கள் திருவண்ணாமலையை தினமும் வந்தடைகிறார்கள். அருணாசலேஸ்வரரின் அருள் பெற்று, ஆனந்தமுற்று, இன்முகத்துடன் தங்கள் இல்லம் திரும்புகிறார்கள். இந்த மலையின் மகத்துவம் உணர்ந்த வெளிநாட்டு அன்பர்கள், தங்களின் நிரந்தர வாசத்தை அண்ணாமலையின் அருகிலேயே அமைத்துக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு மாத பௌர்ணமியின்போதும் இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 'நமசிவாய' நாமம் சொல்லி, இங்கே கிரிவலம் வந்து அண்ணாமலையானைப் போற்றித் துதிக்கின்றனர்.

புண்ணியம் நிறைந்த இந்த திருவண்ணாமலையைச் சுற்றிலும் ஏராளமான திருத்தலங்கள் கம்பீரமாக விளங்குகின்றன. அவற்றுள் சில, பலராலும் அறியப்பட்டவை. இன்னும் பல, அறியப்பட வேண்டியவை. அப்படி அறியப்பட வேண்டிய ஒரு திருத்தலத்தைத் தரிசிக்க இந்த இதழ் 'ஆலயம் தேடுவோம்' பகுதிக்காக அரடாப்பட்டு கிராமம் நோக்கிப் புறப்படுவோம், வாருங்கள்! அங்கு உறையும் ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரரை தரிசித்து அவன் அருளைப் பெற்று இன்புறுவோம்.

புகழ்பெற்ற திருவண்ணாமலை திருத்தலத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் வருகிற சிறு கிராமம் அரடாப்பட்டு. இங்கிருந்து திருக்கோவிலூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. அதாவது இரு பெரும் க்ஷ்த்திரங்களான திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூருக்கு மத்தியில் அமைதி தவழும் கிராமமாக விளங்குகிறது அரடாப்பட்டு. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்குப் பக்கம் செல்கிற நேர் சாலையில் சுமார் ஐந்து நிமிட நேரத்துக்குப் பொடி நடை நடந்தால் அனவரத தாண்டவேஸ்வரர் திருக்கோயில் (ஆலய முகப்புப் பலகையில் அனவர தாண்டேஸ்வரர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) வந்து விடும்.



அற்புதமான பழைமையான சிவாலயம். ராஜகோபுரத்தில் சுதைகள் கரைந்து போய், செங்கற்கள் பல் இளிக்கின்றன. சுற்றுச் சுவர்களில் ஏராளமான கற்களைக் காணோம். திருக்கோயிலின் பெரும்பகுதி கட்டுமானம், கருங்கல்லால் ஆனது. சுமார் ஒண்ணேகால் ஏக்கரில் ஆலயம் விஸ்தாரமாக அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் வரும் இந்த ஆலயத்துக்கு, அரசின் உதவியோடு தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. உள்ளூர்க்காரரான ரவி என்பவர், ஒரு வேளை பூசாரியாக இருக்கிறார். முறையான ஆகம வழிபாடு ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்ததாம். ஆனால், தற்போது இல்லை. அற்புதமான அனவரத தாண்டவேஸ்வரர் குடி கொண்டிருக்கும் ஆலயம் இன்று விசேஷ பூஜைகள் ஏதும் இல்லாமல், வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து வெறுமனே காட்சி அளிப்பதைப் பார்க்கும்போது, காலத்தின் கோலத்தை நினைத்துக் கவலைப்படத்தான் முடிகிறது.



ஆலயத்தின் பழைமை பற்றி விசாரித்தால், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு தகவல். ஆலயத்தின் கோபுர வேலைகளை வைத்துப் பார்க்கும்போது பல்லவர் காலம் என்கிறார்கள். நுணுக்கமான சில சிற்பங்களின் வடிவத்தை ரசிக்கும்போது சோழர்களின் கைவண்ணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சேதாரத்தை வைத்துதான் இப்படிச் சில செய்திகளைச் சொல்கிறார்கள். எதற்கும் முறையான ஆதாரம் இல்லை.

பல்லவர்களோ, சோழர்களோ... தமிழகத்தின் பகுதிகளை தங்கள் கட்டுக்குள் வைத்து, ஆட்சி நடத்திக் கொண்டு வந்த தலைமகன்கள்தான் இந்த ஆலயத்தைக் கட்டி ஆன்மிகத்தைச் சிறப்பித்து வந்திருக்கிறார்கள். உலக ரசனையின் உச்சாணிக் கொம்பில் தமிழக கலாசாரத்தை வைத்துப் பார்த்து மகிழ்ந்த அந்தப் பிதாமகர்கள்தான் இந்த அனவரத தாண்டவேஸ்வரருக்கும் ஓர் ஆலயத்தைக் கருங்கல் திருப்பணியாக உருவாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். இன்று, நம் கண் முன்னே காண்பது ஆயிரம் ஆண்டு காலத்துக்கு முன், அரங்கேறிய அரும் பணி!



மரத்தை வைத்தவன், தண்ணி ஊற்றாமலா போயிருப்பான்? ஆலயத்தைக் கட்டியவன், ஆங்கே பூஜைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்து தராமலா போயிருப்பான்? நிச்சயம் செய்திருப்பான். காரணம் தமிழகத்தில் இன்றைக்கு உள்ள பல ஆலயங்களுக்குப் பெரிய சொத்துகள் ஏதும் சமீப காலத்தில் சேர்த்ததாக செய்தி இருக்காது. எல்லாமே பார் போற்றிய மன்னர்களாலும், பகட்டு இல்லாத குடிமக்களாலும் ஒரு காலத்தில் மான்யமாக மகிழ்ச்சியுடன் வழங்கப்பட்டவை! ஆலயத்தில் தொடர்ந்து விளக்கு எரிவதற்காக ஒரு மான்யம்... பூஜைகள் தடை இல்லாமல் தொடர்வதற்காக ஒரு மான்யம்... விழாக்கள் விமரிசையாக நடக்க ஒரு மான்யம்... இப்படி எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இன்னல்களை எல்லாம் முன்கூட்டியே சிந்தித்து, மான்யங்களை வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அசையா சொத்துக்களில் இருந்து வரும் பிரதான வருமானமும் இன்றைய ஆலயங்களின் வளத்துக்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

அதுபோல் இந்த அரடாப்பட்டு அனவரத தாண்டவேஸ்வரருக்கும் மாட்சிமை தங்கிய மன்னர்களும், மகோன்னத குணங்கள் நிரம்பிய மக்களும் மான்யங்களை மானாவாரியாக எழுதி வைத்திருக்கலாம். இதெல்லாம் ஒரு யூகம்தான். அத்தகைய சொத்துக்கள், இன்றைக்கு எவர் ஆதிக்கத்திலாவது இருக்கலாம்தான். இந்த அனவரத தாண்டவேஸ்வரர் திருத்தலத்தின் சொத்துக்கள் எத்தனை குடும்பங்களுக்கு இன்று சோறு போடுகிறதோ? யார் கண்டது? இறைவனுக்கும், அந்தக் குடும்பங்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

இந்த மான்யங்கள் குறித்த முறையான தகவல்கள் ஏதும் ஆலயம் தொடர்பான எவருக்கும் தெரியவில்லை. அனவரத தாண்டவேஸ்வரர் ஆலய வளர்ச்சியில் அக்கறை கொண்ட அன்பர்கள் பலரும் பல இடங்களில் விசாரித்துப் பார்த்து விட்டார்களாம்.

''முறையான தல வரலாறு கூட இந்த ஆலயத்துக்கு இல்லை. யாரோ சிலர் சொன்னது, சிலரிடம் இருந்து சேகரித்தது என்பதான தகவல்கள் மட்டுமே இப்போது நடைமுறையில் இருக்கின்றன. அற்புதமான இந்த ஆலயத்துக்கு நித்திய வழிபாடுகள் நின்று போய் சுமார் 60 வருடங்களுக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அதாவது, கூட்டமாக பக்தர்கள் உள்ளே போய் விழாக்கள் நடந்து 60 வருடங்களுக்கு மேல் இருக்கும்.

சமீபத்திய வருடங்களில் பெரிய விழாக்கள் ஏதும் இந்த ஆலயத்தில் நடந்துள்ளதாகத் தகவல் இல்லை. கோயிலுக்குள் இருக்கிற இந்த வெறிச்சோடிய நிலைமை என்றுதான் மாறுமோ, தெரியவில்லை. ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரர் பிரகாசிக்க, ஜோதி சொரூபமான அந்த அண்ணாமலையார்தான் அருள் புரிய வேண்டும்'' என்கிறார் திருவண்ணாமலையில் வசித்து வரும் ஆன்மிக அன்பர் ஒருவர், சோகமாக.

அருள்மிகு அனவரத தாண்டவேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிப்போமா?



கிழக்குப் பார்த்த ஆலயம். உள்ளே நுழையும் முன் நான்குகால் மண்டபங்கள் இரண்டு காணப்படுகின்றன. சில அடிகள் எடுத்து வைத்ததும் களை இழந்து போன ராஜகோபுரம். அடிப் பகுதி கருங்கல் கட்டுமானம். மேலே செங்கல் கட்டுமானம். மூன்று நிலை. அலங்காரமாகவும் அற்புதமாகவும் ஒரு காலத்தில் கட்டப்பட்ட இந்த ராஜகோபுரம், இப்போது ஏகத்துக்கும் சிதிலமாகி செடிகளுக்கும் கொடிகளுக்கும் புகலிடமாக இருப்பது, மனதைப் பிசையும் காட்சி. ராஜகோபுரத்தின் செங்கல் கட்டுமானம் செல்லரித்துப் போனது போல், சுதைகள் முற்றிலும் தேய்ந்து, செந்நிறக் கற்கள் அலங்கோலமாகத் துருத்திக் கொண்டு காட்சி அளிக்கின்றன. ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள கருங்கல்லால் ஆன உயரமான சுற்றுச் சுவர் பிரமிக்க வைக்கிறது. ஆனால், இந்த சுவரும் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து, பல கற்கள் போன இடம் தெரியவில்லை.

அனவரத தாண்டவேஸ்வரரை மானசீகமாக வணங்கி, உள்ளே நுழைகிறோம். பரந்த வெளியைத் தாண்டியதும் பெரிய மண்டபம். இங்கே வலப் பக்கத்தில் ஒரு மேடையில் பாலாலயம் செய்யப்பட்ட மூலவர் விக்கிரகங்கள் (சிலா) வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 2003ல் பாலாலயம் நடந்ததாம். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரர், ஸ்ரீஅனவரதாம்பிகை ஆகிய மூன்று விக்கிரகங்கள் மட்டும் இங்கே காணப்படுகின்றன. பிரமாண்டமான இந்த ஆலயத்தில் இந்த மூன்று விக்கிரகங்கள்தான் ஓரளவு சுமாரான நிலையில் காட்சி தருகின்றன. எண்ணெய்ப் பிசுக்குகள் அதிகம் சேர்ந்து போனதால், அம்மனின் அழகிய முகத்தில் வசீகரம் சற்றுக் குறைந்து காணப்படுகிறது. இந்த விக்கிரகங்களுக்கு அபிஷேகம் ஆகி நெடு நாட்கள் ஆகி இருக்கும் போலிருக்கிறது. பின்னே, அபிஷேகப் பொருட்களை யாராவது கொண்டு வந்து கொடுத்தால்தானே நித்தமும் அபிஷேகம் செய்ய முடியும்?!

சில ஆண்டுகளுக்கு முன் தடை பட்டு நின்று போன திருப்பணி வேலைகள், தற்போது மெள்ள துவங்கி இருக்கின்றன. திருவண்ணா மலையைச் சேர்ந்த கோ. மணிகண்டன் என்பவரைத் தலைவராகக் கொண்டு மொத்தம் மூன்று பேர் கொண்ட திருப்பணிக் குழு தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற இருவரும் உள்ளூர்க்காரர்களாம்!

மணிகண்டன் நம்மிடம் சொன்னார்: ''2003ல் பாலாலயம் செய்த கையோடு வசூலான தொகையைக் கொண்டு உற்சாகமாகத் திருப்பணி வேலைகளைத் துவங்கினோம். அரடாப்பட்டு கிராமத்தினரும், ராசிபுரம் கிராம பொதுமக்களும் பெருமளவில் உதவினார்கள். வேலைகளை ஓரளவு முடித்து விட்டோம். கையிருப்பில் உள்ள பணம் கரையும் வரை பணிகள் மளமளவென்றுதான் நடந்தன. தற்போது இந்தப் பணியில் சிறிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். விரைவில் ஈசன் அருளால் வேலைகள் சூடு பிடிக்கும். எங்களுக்கு இருக்கிற பெரிய குறை... இந்த ஆலயத்தைப் பற்றிய புராதனமான தகவல்கள் எதுவும் சரியாகத் தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் எவரேனும் எங்களுக்கு உதவினால் எதிர்கால வசதிக்கு சவுகரியமாக இருக்கும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

ஒரே பிராகாரம். சற்றே பெரியது. திருப்பணி வேலைகள் துவங்கி இருப்பதால் ஆங்காங்கே கற்குவியல். மண்மேடுகள். பிராகார வலத்தின்போது முதலில் வருவது விநாயகர் சந்நிதி. முழுக்க முழுக்க மண் மூடிப்போன இந்தச் சந்நிதியை சமீபத்தில் சுத்தம் செய்த போது இரண்டு லோடு மண்ணை வெளி யேற்றினார்களாம். தவிர, ஏராளமான செடிகளும் வேர்களும் சந்நிதியின் உள்ளே ஊடுருவி இருந்தனவாம். அதையெல்லாம் முழுக்க அகற்றி, சந்நிதியை ஓரளவு பார்க்கும் நிலையில் தற்போது வைத்திருக்கிறார்கள். இங்கிருந்த விநாயகர்தான் தற்போது பாலாலயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.



பிராகாரத்தை ஒட்டி, திருமாளிகைப் பத்தி மண்டபம் பெரிய அளவில் தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்தக் காலக் கட்டுமானத்தின் சிறப்பையும் தன்மையையும் ஆலயத்தின் உள்ளே இருந்தபோதுதான் நம்மால் பூரணமாக உணர முடிந்தது. அதாவது வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நண்பகல் வேளையில் நாம் ஆலயத்துக்குப் போயிருந்தோம். உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே, வியர்வைத் துளிகள் முற்றிலும் அடங்கிப் போய், சில்லென்ற குளுமை நம்மை இதமாக ஆட்கொண்டதால் இதை உணர்ந்தோம்.

விநாயகப் பெருமான் திருச்சந்நிதியை அடுத்து ஸ்ரீவேணுகோபாலருக்கும் ஸ்ரீஆறுமுகப் பெருமானுக் கும் தனித் தனி சந்நிதிகள். ஆனால், உள்ளே விக்கிரகங்கள் இல்லை. ஆறுமுகப் பெருமானின் சேதமான விக்கிரகம் ஒன்று பிராகாரத்தின் ஒரு மூலையில் தென்படுகிறது. இந்த விக்கிரகத்தின் கைகள் பின்னம் அடைந்திருப்பதால் புதிய பிரதிஷ்டைக்கு இது உதவாதாம். இதுவாவது பரவாயில்லை. ஸ்ரீவேணுகோபாலர் விக்கிரகத்தைக் காணவே காணோம்.

வன்னி மரமும் வில்வ மரமும் காணப்படுகின்றன. பிராகார வலம் வரும்போது ஈஸ்வரனின் கோஷ்டத்தில் விக்கிரகங்கள் எதுவுமே இல்லை. பிராகார வலத்தில் இப்போது அம்மன் சந்நிதி அருகே இருக்கிறோம். பாழ்பட்டுக் காணப்படுகிறது சந்நிதி. வெளவால்கள் மட்டும் அடிக்கடி உள்ளே போய் ஆஜர் சொல்லி விட்டு வெளியே வருகின்றன. வெளியே நந்தி விக்கிரகம் காணப்படுகிறது. விஸ்தாரமான சந்நிதி. இந்த அம்பாள் அனவரதாம்பிகை என அழைக்கப்படுகிறாள். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, விமானம் ஆகிய எல்லாம் உண்டு. தற்போது வெளியே பாலாலயத்தில் இந்த அன்னை அருள் பாலிப்பதை ஏற்கெனவே சொல்லி இருந்தோம்.

சிறிது தொலைவு நடந்ததும் தரையோடு தரையாக ஒரு சுரங்கம் காணப்படுகிறது. இப்போது இதன் உள்ளே குப்பைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். இதில் இறங்கி நடந்தால், திருவண்ணாமலை ஆலயம் சென்று விடலாம் என்று உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்னார். சுரங்கம் தற்போது அடைபட்டுள்ளது. பிராகார வலத்தின்போது பாணம் இல்லாமல் ஆவுடை, பின்னமாகிப் போன இன்னொரு விநாயகர் விக்கிரகம் போன்றவை காணப்படுகின்றன.

அடுத்து, நவக்கிரக சந்நிதி. தரிசித்து விட்டுத் தொடர்ந்து நடந்தால், புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கிறோம். அதாவது, இப்போது சிவன் சந்நிதி முன் இருக்கிறோம். கொடி மண்டபம், பலிபீடம் போன்றவை இல்லை. அதே நேரம் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, விமானம் என்று அனவரத தாண்டவேஸ்வரரின் சந்நிதி சற்று விரிவாகவே காணப்படுகிறது. திருப்பணி வேலைகளின் காரணமாக பிரதான நந்தி தேவர் கீழே இருக்கிறார். இவர்தான் பிரதோஷ நாயகர்.

இங்கு குடி கொண்டு அருள் பாலிக்கும் ஈஸ்வரரின் பெயர் வித்தியாசமானது. ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரர். 'அனவரத' என்றால் எந்நேரமும் என்று பொருள். 'தாண்டவம்' என்றால் நடனம் என்று பொருள். அதாவது, எப்போதும் நடனம் ஆடிக் கொண்டே இருக்கும் ஈஸ்வரர் என்பது இந்த ஆலய இறைவனின் பெயர். இங்கே உறையும் இறைவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

தரிசித்து விட்டு வெளியே திரும்பும்போது, உடல் வெளியே வருகிறது. ஆனால், மனம் மட்டும் மறுக்கிறது. திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கிறோம். மக்கள் சக்தி மகத்தானது; அதேபோல் ஓர் அரசாங்கத்தின் பலமும் அபரிமிதமானது. மக்கள் சக்தியும், அரசாங்கத்தின் பலமும் ஒன்று சேர்ந்தால் போதும்... புதுமைகள் விளையும்!

ஆலயம், இழந்த பொலிவைத் திரும்பப் பெற வேண்டும். பிரார்த்தனைக்கு பலம் அதிகம்; பலனும் அதிகம்தான். பிரார்த்திப்போம்!


தகவல் பலகை

தலம் : அரடாப்பட்டு

மூலவர் : ஸ்ரீஅனவரதாம்பிகை,

ஸ்ரீஅனவரத தாண்டவேஸ்வரர்

எங்கே இருக்கிறது?:

திருவண்ணாமலையில் இருந்து திருக் கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் வருகிற கிராமம்- அரடாப்பட்டு. இங்கிருந்து திருக்கோவிலூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. அதாவது இரு பெரும் ஷேத்திரங்களான திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூருக்கு மத்தியில் இருக்கிறது அரடாப்பட்டு கிராமம்.

எப்படிச் செல்வது?:

திருவண்ணாமலை- திருக்கோவிலூர் பாதையில் செல்லும் பேருந்துகள் அரடாப்பட்டில் நின்று செல்லும். தொலைதூரம் செல்லும் பேருந்துகள் அவ்வளவாக நிற்பதில்லை. விசாரித்துப் பயணிக்கவும். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்குப் பக்கம் செல்கிற நேர் சாலையில் சுமார் ஐந்து நிமிட தூரம் நடந்தால் வந்து விடும் அனவரத தாண்டவேஸ்வரர் திருக்கோயில்.

தொடர்புக்கு:

கோ. மணிகண்டன்,
ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சர்வீஸஸ் டிரஸ்ட்,
19, கிருஷ்ணன் தெரு,
திருவண்ணாமலை- 606 601,
திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு: 98432 76679
94432 24448

Comments