நம்மில் பலருக்கும் கைகளிலும் கால்களி லும் ஐந்து விரல்கள்தான் இருக்கும். ஆனால், எவருக்காவது கையிலோ, காலிலோ ஆறு விரல்கள் இருந்தால், அவரை அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்று கூறுகிறோம். எனவே, ஒருவருக்கு ஆறாவது விரல் இருந்தாலே அது அதிர்ஷ்டம் என்றாகி விடுகிறது. அதுவும், ஒரு தெய்வத் திருவுருவ மேனியின் காலில் ஆறு விரல்கள் இருக்கும் அதிசயத் தகவலை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இல்லைதானே! இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இந்த பூவுலகில் வசிப்பவர்களுக்கெல்லாம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி அருளும் மகாலட்சுமித் தாயார் மூலவர் விக்கிரகத்தின் வலக் காலில் ஆறு விரல்கள் இருக்கின்றன.
ஆம்! அரசர்கோயில் என்கிற சிறிய கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வரும் அன்னை மகாலட்சுமியின் வலது திருவடியில் ஆறு விரல்கள்! கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரை இயல்பாகக் காணப்படும் ஐந்து விரல்களை அடுத்து, இன்னொரு சின்ன விரல். கற்பூர ஆரத்தியை அன்னையின் திருமேனிக்குக் காண்பித்து முடித்ததும் ஆலய அர்ச்சகரான வரதராஜ பட்டாச்சார்யர், வலது திருவடியை நாம் தரிசிக்கும் வண்ணம் கற்பூர ஆரத்தியை அன்னையின் திருப்பாதப் பகுதியில் காண்பிக்கிறார். வரிசையாக ஆறு விரல்கள்! அழகு ததும்பும் அன்னையின் திருமேனியை உளமார தரிசிக்கிறோம்.
புராதனமான இந்த ஆலயத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் தரிசிக்க வேண்டாமா? வாருங்கள், அருள் வழங்கும் அந்த நாயகியின் இருப்பிடம் தேடிச் செல்வோம். புண்ணியம் பெருக்கும் பாலாற்றின் கரை ஓரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
எங்கே இருக்கிறது அரசர்கோயில்?
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் செங்கல்பட்டுக்கும் மதுராந்தகத் துக்கும் இடையில் வரும் இடம்- படாளம் கூட்டு ரோடு. இங்கிருந்து இடப் பக்கம் செல்லும் சாலையில்- அதாவது கிழக்குத் திசையில் சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித்தால், படாளம் ரயில்வே ஸ்டேஷன் லெவல் கிராஸிங்கைத் தாண்டி வரும் கிராமம்- அரசர்கோயில். மதுராந்தகத்தில் இருந்து சக்கிலிப்பேட்டை, பூதூர் வழியாக வந்தால் சுமார் 12 கி.மீ.! திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ.! படாளம் கூட் ரோட்டில் இருந்து ஷேர் ஆட்டோவிலும் வரலாம். தலைக்குப் பத்து ரூபாய். தனி ஆட்டோவில் பயணித்தால் ஐம்பது ரூபாய்.
சக்தி விகடன் இதழில் 'ஆலயம் தேடுவோம்' பகுதியில் புலிப்புரக்கோவில் என்கிற ஊரில் உள்ள வியாக்ரபுரீஸ்வரர் பற்றி 22.09.06 இதழில் கட்டுரை எழுதி இருந்தோம். அந்த ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இந்த வைணவ ஆலயம் அமைந்துள்ளது. ஒரே பகுதியில் காணப்படும் இந்த இரு ஆலயமுமே சிறப்பித்துச் சொல்லப் படுபவை.
'அரசர் கோயில்' என்கிற ஊர்ப் பெயருக்கான காரணத்தைப் பார்ப்போம். இதற்கான தல புராணத்தைக் கதையாக நம்மிடம் சொன்னார் வரதராஜ பட்டாச்சார்யர். அவர் சொன்ன கதையின் சாராம்சம் பின்வருமாறு:
'அரசன்' என்றால் தெரியும். 'கோ' என்றால் கோவிந்தன்; பெருமாள். 'இல்' என்றால் இருப்பிடம். அரசனும் பெருமாளும் இருக்குமிடம் என்பதே இந்த ஊரின் பொருள். அதாவது ஜனக மகாராஜாவும், பெருமாளும் இந்த ஊரில் ஒரு முறை சேர்ந்தே இருக்க நேரிட்டது. இதனால், 'அரசர்கோயில்' ஆயிற்றாம்.
பிரம்மதேவனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டு விட்டது. தனக்கான விமோசனத்தை விசாரித்தபோது 'மண்ணாளும் அரசரும், மாதவனான பெருமாளும் இணைந்து எந்த ஊரில் காட்சி தருகிறார்களோ, அங்கே உனக்கு சாப விமோசனம் கிடைக்கும். புறப்படு, பூலோகத்துக்கு!' என்று அவருக்கு பதில் வந்தது.
எனவே, சாப விமோசனம் வேண்டி பூலோகத்துக்கு வந்தார் பிரம்மன். அதுவரை இந்த அரசர்கோயிலில் வைண வத் திருத்தலம் கிடையாது.
இந்த ஊரில், தாம் எழுந்தருள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த திருமால், இங்கே எழுந்தருளினார். அதே நேரத்தில் க்ஷேத்திராடனம் செய்து கொண்டிருந்த ஜனக மகாராஜாவும், பெருமாள் எழுந்தருளிய செய்தி அறிந்து, இந்தக் கிராமத்துக்குத் தன் மெய்க்காவலர்களுடன் விஜயம் செய்தார். தான் தவம் செய்ய வேண்டிய
திருத்தலத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த பிரம்மதேவனுக்கு, பெருமாளும் ஜனக மகாராஜாவும் இந்தக் கிராமத்தில் ஒன்று சேர்ந்திருக்கும் விஷயம் தெரிய வந்தது. பெரிதும் மகிழ்ந்தான்.
பிரம்மனுக்கு இதுதானே தேவை? சாப விமோ சனம் கிடைக்க வேண்டுமே! இருவரையும் சேர்ந்து தரிசித்தால் சாப விமோசனம் கிடைத்து விடும் என்பதுதானே வாக்கு?! இந்த திருத்தலத்துக்கு வந்தார். கையில் கமண்டலத்துடன் தவத்தைத் தொடங்கினார். மாலவனை மனம் குளிர தரிசித்தார். மாதவனின் மகத்தான ஆசியைப் பெற்றார். அரசரான ஜனக மகாராஜாவுடன் பெருமாளை வைத்து தரிசித்து மனம் பூரித்தார் பிரம்மன். அதுவரை அவருக்கு விதிக்கப்பட்ட சாபம் அந்தக் கணத்திலேயே ஓடிப் போனது!
'இங்கேயே தங்கி தவம் புரிந்தால் தலம் செழிப் பாகும்' என்பதால், பிரம்மதேவன் சில காலம் இங்கே தங்கி பெருமாளை ஆராதித்தாராம்.
இந்தக் கிராமத்தில், தான் தங்கி இருந்த காலத்தில் நித்ய கர்மாக்களை மிகுந்த சிரத்தையாக பெருமாள் இருக்கும் இடத்துக்கே வந்து செய்து விட்டுப் போவாராம் ஜனகர். ஒரு நாள் ஜனகர் வந்து சேரவில்லை. 'ஜனக மகாராஜா ஏன் இன்னும் வரவில்லை?' என்கிற கேள்வியுடன் ஜகத் ரட்சக னான அந்தப் பெருமாளே, ஜனகர் இருக்கும் இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றாராம்.
பெருமாள் சென்ற வேளையில் ஜனகர் அங்கே இல்லை. எனவே, ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் தான் கொண்டு சென்ற பவித்திரம், தர்ப்பைக்கட்டு முதலானவற்றை வைத்து விட்டு, 'ஜனகர் அன்று செய்ய வேண்டிய நித்யகர்மா பூர்த்தி ஆகி விட்டதாக' அவரது காவலர்களிடம் தகவல் சொல்லி விட்டுப் புறப்பட்டார்.
வெளியே சென்றிருந்த ஜனகர், சற்று நேரத்தில் தனது இருப்பிடத்துக்குத் திரும்பினார். சிம்மாசனத்தில் பவித்திரம் மற்றும் தர்ப்பைக் கட்டுகள் இருப்பதையும், அவை பிரகாசத்துடன் ஜொலிப்பதையும் பார்த்தார். 'நித்ய கர்மாவை, நிறைவேற்ற தாங்கள் வராததால், பெருமாளே நம் இருப்பிடத்துக்கு வந்து அதைப் பூர்த்தி செய்து விட்டுத் திரும்பினார்' என்று காவலர்கள் தெரிவித்தனர்.
'தினமும் செய்ய வேண்டிய கர்மாவை இன்று செய்யாமல், விட்டு விட்டோமே!' என்று வருந்திய ஜனகர், பெருமாள் இருக்கும் இடம் தேடி ஓடினார். அவரின் திருப்பாதம் பணிந்து, 'இன்றைக்கு உரித்தான நித்ய கர்மாவை உரிய நேரத்தில் என்னால் செய்ய இயலவில்லை. பணிகளின் காரணமாக இந்தத் தவறு நேர்ந்து விட்டது. என்னை மன்னியுங்கள்!' என்று வேண்டினார். பிராயச்சித்தமாக பெருமாளுக்கு அங்கேயே கோயில் எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
அப்போது பெருமாள், 'உன்னால் மட்டும் இங்கு கோயில் கட்ட முடியாது. தேவதச்சனான விஸ்வ கர்மாவால்தான் இங்கே கோயில் கட்ட இயலும். சாஸ்திர சம்பிரதாயங்களை முறையே அறிந்த அவரே இங்கு எமக்கு ஒரு கோயில் எழுப்புவார்' என்றாராம். அதன்படி, விஸ்வகர்மாவால் எழுப்பப் பட்ட கோயில் இது என்கிறார்கள்.
நித்ய கர்மா செய்ய ஜனகர் வராததால், பெரு மாளே அவரது இருப்பிடம் தேடிப் புறப்பட்டுச் சென்றார் அல்லவா? இந்த விஷயத்தில், மகா லட்சுமிக்கு மிகுந்த மன வருத்தம். ஒரு பக்தனைத் தேடி பரந்தாமன் செல்வதா? அந்த அளவுக்கு அந்தப் பக்தன் அப்படி என்ன உசத்தி என்று பெருமாளின் மீது தீராத கோபத்தில் இருந்தார். விளைவு- பெருமாளுக்கு போஜனம் தர மறுத்து விட்டார் பிராட்டியார். பசி, பரமாத்மாவை வாட்டியது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெருமாள், 'மகாலட்சுமியே... இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை கிடைக்கும். அதன் பிறகே அனைவரும் என்னை சேவிப்பார்கள். கேட்ட வரம் அருளும் என் சக்தியை இங்கு உன்னிடம் தருகிறேன். இந்தத் தலத்தில் உன்னைத் தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சம்பத்துகளுடனும் புகழுடனும் விளங்குவார்கள். இப்போது எனக்குப் பசிக்கிறது' என்றார் கெஞ்சலாக.
பெருமாளிடம் இருந்து கூடுதல் சக்தியைப் பெற்றுக் கொண்டதில் மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, 'இந்தாருங்கள், இந்த ஒரு தாமரை மொக்கை வைத்துக் கொள்ளுங்கள். இது, உங்களது பசியைத் தணிக்கும்' என்றார். இந்த நிகழ்வை விளக்கும் விதமாக இந்த ஆலயத்தில் கமல வரத ராஜ பெருமாளின் மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங் களில் பரந்தாமனின் வலது கை இடுக்கில் ஒரு தாமரை மொக்கு (தாமரை மொட்டு) இருப்பதை நாம் தரிசிக்கலாம்.
வாருங்கள், புராணம் புகழும் அரசர்கோயில் கமல வரதராஜ பெருமாளை தரிசிப்போம்.
வர்ணம் பூசப்பட்ட முகப்பு. ராஜகோபுரம் இல்லை. இதைக் கடந்து உள்ளே சென்றால் பலி பீடம். கொடி மரத்துக்கான மேடை இருக்கிறது; கொடிமரம் இல்லை! அடுத்து, கருடாழ்வார் மண்டபம். அப்படியே நேராகச் சென்றால் பெருமாள் சந்நிதி (மேற்கு நோக்கியது). வலப் பக்கம் சென்றால் தாயார் சந்நிதி. இந்த ஆலய சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அதற்கான கதையைச் சொன்னோம். எனவே, முதலில் சுந்தர மகாலட்சுமி தாயாரை தரிசிப்போம்.
கிழக்குப் பார்த்த சந்நிதி. தனிக் கோயில் போல் அழகாகக் காட்சி தருகிறது. சந்நிதிக்குள் நுழைந்து தாயாரை தரிசிக்கும் முன் ஓர் இசை மண்டபம். இங்குள்ள தூண்கள் ஒவ்வொன்றையும், விரலால் சுண்டினால் இசை எழும்புகிறது. மிகுந்த கலை நயத்துடன் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், மறுபக்கம் வெளி வரும்போது குச்சி நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது (நான்கு வேதங்களைக் குறிக்கும் அம்சமாம் இது). தாயார் கருவறை மண்டபத்துக்கு வெளியே நமக்கு வலப் பக்கம் அட்சய கணபதி, தும்பிக்கை ஆழ்வாராக தரிசனம் தருகிறார்.
ஆஞ்சநேயர் ஒரு முறை விநாயகரிடம் அட்சய பாத்திரம் கேட்டாராம். விநாயகரும் உடனே மகாலட்சுமித் தாயாரிடம் சென்று அனுமனின் தேவையைச் சொன்னாராம். 'எதற்கு அனுமன் அட்சயப் பாத்திரத்தைக் கேட்கிறான்?' என்று தாயார் வினவ, 'இந்த (அரசர்கோயில்) ஆலயத் தில் தளிகைப் பணிகளைத் தானே செய்ய விரும்புகிறார். அதனால்தான் கேட்கிறார்' என்று விநாயகர் சொல்ல... அதன்படி அட்சய பாத்திரத் தைப் பெற்று, இந்த ஆலயத்தில் இன்றும் தளிகை செய்பவர் ஆஞ்சநேயமூர்த்திதான் என்று நம்பப் படுகிறது. எனவே, இந்த ஆலயத்தின் பிரசாதம் மிகவும் விசேஷம் என்கிறார் பட்டாச்சார்யர்.
கமல வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு நேர் எதிரில் மெயின் ரோட்டை ஒட்டி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இதன் திருப்பணி வேலைகள் முடியும் தறுவாயில் இருக்கின்றன.
சுந்தர மகாலட்சுமியின் சந்நிதிக்கு வெளியே நமக்கு இடப் பக்கமாக பலாப் பழச் சித்தர் ஒருவரின் உருவம் (புடைப்புச் சிற்பம்) காணப்படு கிறது. தலையில் பலாப் பழம் ஏந்தி இவர் காணப்படுகிறார். மகாலட்சுமி தாயாருக்குப் பலாப் பழம் என்றால் மிகவும் இஷ்டமாம். இப்போதும் அபிஷேக காலங்களில், சில சந்தர்ப்பங்களில் பலாப் பழத்தால் அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக விநியோகிப்பதும் உண்டாம்.
கருவறையைச் சுற்றி யோக நரசிம்மர், குபேரமூர்த்தி, காளிங்க நர்த்தன கிருஷ்ணர், பரமபதநாதர், திரிவிக்கிரமர் ஆகியோரது சிறு சிலா வடிவங்கள் காணப்படுகின்றன. பெருமாள் மூர்த்தங்களே, இங்கு தாயா ருக்குக் காவல். தாயாருக்கு முதல் தரிசனம் என்பதாலும், தாயாரிடம் தாமரை மொக்கை வாங்கி பசி ஆறியதாலும் பெருமாளே இப்படி பல அவதாரங்களில் இங்கு தாயாரது கருவறையைச் சுற்றிக் காணப்படுகிறாராம். ஆலயத் திருப்பணி களின்போது இந்த சிறு மூர்த்தங்களின் வடிவை அப்படியே கோஷ்டப் பகுதியில் நிறுவ இருக்கிறார்கள்.
தாயாரின் திரு முன் நிற்கிறோம். பெயருக்கு ஏற்றாற்போல் அழகான (சுந்தரமான) தாயார். தாமரை மலர் மீது பத்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார். காண்போர் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் அற்புத வடிவம். மேல் இரண்டு கரங்களில் தாமரை மலர்கள். கீழிரண்டு கரங்களில் அபய- வரத ஹஸ்தம். பிரமாண்ட அந்தத் திருமேனிக்கு ஆரத்தி காண்பித்து முடித்ததும், தாயாரின் வலப் பாதத்தை நமக்குக் காண்பித்தார் வரதராஜ பட்டாச்சார்யர். அபூர்வமான ஆறு விரல்கள்! வரும் பக்தர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதற்காக இப்படித் தரிசனம் தருவதாகக் கூறுகிறார்கள். தாயார் சந்நிதியில் காணப்படும் சடாரியின் மேல் பக்கமும் தாயாரின் வலது திருவடியில் ஆறு விரல்கள். இதைச் செய்து கொடுத்திருப்பவர் சென்னையைச் சேர்ந்த பக்தர் முரளீதர வெங்கடேஷ் என்பவர்.
கடந்த வருட ஆடி முதல் வெள்ளியன்று இவர் யதேச்சையாக இந்த ஆலயம் வந்தாராம். அந்த அனுபவம் பற்றி அவரே சொல்கிறார்: ''தாயாரின் சந்நிதிக்கு வந்த நான் அதன் அழகில் மயங்கிப் போனேன். இந்தக் கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அர்ச்சகர், மணியக்காரர் பிச்சைமுத்து உட்பட ஊர்க்காரர்களிடம் பேசினேன். ஏதாவது செய்து விட்டுப் போவதை விட, திருப்பணிகளை எடுத்துக் கொண்டு ஆலயத்தைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். ஊர்க்காரர்களது ஒத்துழைப்புடன் திருப்பணி வேலைகள் தற்போது முறையாகத் துவங்கி உள்ளன. எதற்கோ இந்த சந்நிதிக்கு வந்த நான், இன்று என்னையே இங்கு ஈடுபடுத்திக் கொண்டது அந்தப் பெருமாளின் செயல்தான்!'' என்றார் முரளீதர வெங்கடேஷ் நெகிழ்ச்சியாக.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் தாயாருக்கு விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. அன்றைய தினம் திரவியங்கள், பால், தயிர் என்று அபிஷேகம். இந்தத் தாயாரை தொடர்ந்து வணங்கி வந்தால் கல்வி, வியாபாரம், திருமணம் முதலானவை சிறக்குமாம். வணங்கி வெளியே வருகிறோம்.
அடுத்து, பெரிய முன்மண்டபம் தாண்டி பெரு மாளை தரிசிக்கச் செல்கிறோம். தரைக் கற்கள் பெயர்ந்து, சுற்றுச் சுவர்கள் பலமிழந்து காட்சி தருகின்றன. விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், தேசிகர் ஆகியோரை தரிசித்து நகர்கிறோம். உள்ளே தேவி- பூதேவி தாயார்களுடன் கமல வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகி றார். பசியை ஆற்றுவதற்கு தாயார் அருளிய தாமரை மொக்கு, பெருமாளின் வலக் கரத்தில்.
தேவி- பூதேவி சமேதரான இந்த பெருமாள் விக்கிரகம் சாளக்கிராமத்தில் அமைந்தவை என்கிறார் அர்ச்சகர். இதற்கு உதாரணமாக ஒரு செய்தியையும் சொன்னார். ''பெருமாளுக்கும் தேவி- பூதேவிக்கும், அடிக்கடி திருமஞ்சனம் செய்து வந்தால், இந்த விக்கிரகங்களின் மீது அடை அடையாக பிசுக்குகள் (அழுக்குகள்) சேர்ந்து கொள்ளும். ஆனால், இந்த விக்கிரகங்களின் மேல் எந்த காலத்திலும் அழுக்குகள் எதுவும் சேர்ந்ததே இல்லை. பளபளப்பான இந்தத் திருமேனிகளின் மேல் நாகப் பாம்பு ஒன்று அவ்வப்போது ஊர்வதை நான் பார்த்திருக்கிறேன். இதன் காரணமாகவும் விக்கிரகங்கள் இன்னும் பொலிவாக விளங்குகின்றன'' என்றார்.
பெருமாளுக்கு முன்னால் ஒரு சுரங்கம் இருந்ததாம். தற்போது மூடப்பட்டு விட்டது. மூலவர் விக்கிரகங்களுக்கு முன்னால் உற்சவர் விக்கிரகங்கள். தேவி- பூதேவி சமேத கமல வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் சுந்தர மகாலட்சுமியின் திருமேனிகள். மூலவரைப் போலவே உற்சவர் பெருமாளின் விரல் இடுக்கிலும் ஒரு தாமரை மொக்கு!
தாயாரின் உற்சவ விக்கிரகத்தில் வலது கை, சிறப்பான நயத்துடன் அருள்கிறது. அதாவது சுண்டு விரலின் கீழ் மேட்டில் சக்கரம்; மோதிர விரலுக்குக் கீழ் அதிர்ஷ்ட மேடு; மணிக்கட்டு- உள்ளங்கையில் துவங்கி நடுவிரல் நுனி வரை பயணிக்கும் மூல சக்தி ரேகை. சுட்டு விரலின் கீழ் சக்கரம். கட்டை விரலின் கீழே உள்ள மேட்டில் அருகம்புல். எதிரே சூலம். இத்தனை சக்திகளும் ஒருங்கே இணைய பெற்று இந்தத் தாயார் நமக்கு அருளிக் கொண்டிருக்கிறார்.
பிராகார வலத்தில் சிறந்த வேலைப்பாடுகளுடன் ஆண்டாள் சந்நிதி (ஆண்டாள் விக்கிரகமும் அந்த நாச்சியாரின் கொண்டையும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது என்கிறார் சிற்பி பாண்டி யன். இவரே தற்போது இங்கு, ஸ்தபதி பணியை மேற்கொண்டு வருகிறார்), ஓரிடத்தில் கல்வெட்டு வடிவங்கள், மரம், செடி- கொடிகள், முட்புதர் கள், ஒரு பழைய கிணறு போன்றவைதான் பிராகாரத்தில்!
வருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்தவாரி நடக்குமாம். கருங்கல் மற்றும் செங்கல் கட்டுமானத்துடன் திகழ்கிறது இந்த ஆலயம். பழைமை என்று கேட்டால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
ஆலயத்தின் அனைத்துப் பகுதிகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பது சோகத் துக்குரியது. திருப்பணி வேலைகளின் விரைவும், மெய்யன்பர்களது உதவியும்தான் இந்த ஆலயத்தைப் பழைய பொலிவுக்குக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. அந்த நாள், வெகு தொலைவில் இல்லை என்பதிலும் சந்தேகமில்லை.
தகவல் பலகை
தலம்: அரசர்கோயில்
மூலவர்: கமல வரதராஜ பெருமாள்; சுந்தர மகாலட்சுமி
சிறப்பு: வலக் காலில் ஆறு விரல்களுடன் தாயார். பெருமாளின் அபய ஹஸ்தத்தில் விரல் இடுக்கில் தாமரை மொட்டு. இங்கு முதலில் தரிசிக்க வேண்டியது தாயாரைத்தான்.
எங்கே இருக்கிறது? சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டுக்கும் மதுராந்தகத்துக் கும் இடையில் வரும் இடம்- படாளம் கூட் ரோடு. இங்கிருந்து இடப் பக்கம் செல்லும் சாலையில்- அதாவது கிழக்குத் திசையில் சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித்தால், படாளம் ரயில்வே ஸ்டேஷன் லெவல் கிராஸிங்கைத் தாண்டி வரும் கிராமம்- அரசர்கோயில். மதுராந்தகத்தில் இருந்து சக்கிலிப்பேட்டை, பூதூர் வழியாக வந்தால், சுமார் 12 கி.மீ.! திருக் கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ.!
எப்படிப் போவது?: செங்கல்பட்டில் இருந்தும், மதுராந்தகத்தில் இருந்தும், படாளம் கூட் ரோட்டில் இருந்தும் நகரப் பேருந்து வசதி உண்டு. படாளம் கூட் ரோட்டில் இருந்து ஷேர் ஆட்டோவிலும் பயணித்து வரலாம். தலைக்குப் பத்து ரூபாய். தனி ஆட்டோவில் பயணித்தால் ஐம்பது ரூபாய்.
நடை திறப்பு : அதிகாலை 5 - 10:30; மாலை 5 - 7:00.
தொடர்புக்கு:
கே. முரளீதர வெங்கடேஷ் செயலாளர்,
சுந்தர மகாலட்சுமி சேவா டிரஸ்ட்,
63, திருமலைப்பிள்ளை ரோடு லேன்
தி. நகர், சென்னை - 600 017.
போன்: (044) 2834 3926.
மொபைல்: 98840 23927
நல்ல பதிவு.
ReplyDelete