உலகின் நல்லது கெட்டதை அறிந்துகொள்ளும் பக்குவம் மனதுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், கெட்ட விஷயங்களிலிருந்து விலகி, நல்ல விஷயங்களில் இன்னும் கூடுதலாக நம்மைப் பொருத்திக்கொள்ள முடியும். அதற்குத் தெளிவான மனசு தேவை. சந்திர பலம் இருந்தால், சந்திரனின் ஆதிக்கம் இருந்துவிட்டால், மனதில் எந்த ஒரு குழப்பத்துக்கும் இடமில்லை; எந்தப் பிரச்னையும் உள்ளே அண்டாது!
அதேபோல்தான் சூரியனும்! சூரியனிலிருந்து புறப்படுகிற கதிர்வீச்சுகளில், நல்லனவும் உண்டு; கெட்டனவும் உண்டு. நல்ல கதிர்வீச்சுகள் நம்மை நெருங்கும்போது, மனம் குழப்பமும் தவிப்புமாக இருந்தால், துர்விஷயங்களையே செயல்படுத்துவோம்; அப்படி துர்க் குணங்களுடன் திகழ்கிற எவருக்கும் குருவருளும் கிடைக்காது; திருவருளும் வாய்க்காது! மனதுள் ஏகப்பட்ட குழப்ப மூட்டைகளைச் சுமப்பவர்களுக்குக் குறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்; நல்ல விஷயங்கள் என்பதே நடக்காமல் போய்விடும்.
'பகவானே! இந்த அதிகாலைப் பொழுது, மிக ரம்மிய மாக விடிந்துள்ளது. உன்னுடைய ஆசீர்வாதம் வேண்டி, உன்னை நமஸ்கரிக்கிற என்னையும், என் வம்சத்தையும் உனது நல்ல கதிர்வீச்சுகளால் அடைக்கலம் கொடுப்பாயாக!’ என்று சூரிய நமஸ்காரம் செய்வதும் அதற்காகத்தான்.
ஆக, சூரிய பகவானை வணங்கினால், வளமுடன் வாழலாம்; சந்திர பகவானைப் பிரார்த்தித்தால், சகல குழப்பங்களும் தீரும் என்பது ஐதீகம்! அதனால்தான், சந்திரனும் சூரியனும், ஜாதகத்தில் எந்தக் கட்டத்தில், லக்னத்தில் இருக்கின்றனர் என ஆராய்ந்து, பலன் சொல்கின்றனர் ஜோதிடர்கள்.
எனவே, வாழ்க்கையில் நிதானத்துடனும் தெளிவாகவும் இருப்பதற்கு, எடுத்த காரியத்தில் வெற்றி அடைவதற்கு சந்திர- சூரியர்களின் கடாட்சம் மிக அவசியம். தன்னுடைய அடியார்களுக்குச் சந்திர-
சூரிய பலம் கிடைக்க வேண்டும்; அவர்கள் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவே, சந்திரனையும் அவனுடைய குளுமையையும், சூரியனையும் அவனுடைய கதிர்வீச்சுகளையும் தன்னகத்தே கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீசந்திரசேகரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
தில்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீசந்திரசேகர். இதனால் அந்த ஊருக்குச் சந்திரசேகரபுரம் என்றே பெயர் அமைந்ததாம். தில்லை ஸ்ரீநடராஜரை வணங்கி வழிபடுவதற்காக வருகிற எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் சந்திரசேகரபுரத்துக்கு வந்து, அங்கேயுள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திரரை மனதாரப் பிரார்த் தித்துச் செல்வார்களாம். இங்கேயுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், சந்திர- சூரிய தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் பிறக்கும் என்பது தில்லையம்பதியைச் சுற்றியுள்ள பக்தர் களின் நம்பிக்கையாகத் திகழ்ந்தது.
காலப்போக்கில், வனங்கள் ஊர்களாயின; ஊர்கள், இன்னும் விரிவாக வளரத் துவங்கின. அப்போது கௌர வர்கள் இங்கு வந்து சில காலம் தங்கியிருந்தனர். இதனால், சந்திரசேகரபுரம் எனும் ஊர், கௌரவப்பட்டு என்றானது. அது பின்னாளில் மருவி, கவரப்பட்டு என்றானதாகச் சொல்கின்றனர், பக்தர்கள்.
தில்லைவாழ் அந்தணர்களும், தில்லையம்பதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம், நல்ல நாள்- பெரிய நாள் என வருகிற வேளைகளில் எல்லாம், ஸ்ரீநடராஜ பெருமானை வணங்கிவிட்டு, அப்படியே கவரப்பட்டு ஸ்ரீசந்திரசேகரரைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அந்தத் தலம் இன்றைக்கும் இருக்கிறது. கடலூர் மாவட் டம் சிதம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கவரப்பட்டு. இங்கே... அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீசந்திரசேகரர். அம்பாள் - ஸ்ரீகாமாட்சியம்மன். ஆனால், கும்பாபிஷேகம் கண்டு பலகாலமாகிவிட்ட இந்தக் கோயிலுக்குக் கும்பிட வருகிறவர்களின் எண்ணிக்கை குறைவாகிவிட்டதுதான் கொடுமை!
ஒருகாலத்தில், கங்கைகொண்டசோழபுரத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கும் போது, இங்கேயும் அன்னாபிஷேகம் அமர்க்களப்படுமாம்! சிதம்பரம் கோயிலில் திருவாதிரைத் திருவிழா நடைபெறும் நாளில், இந்தக் கோயிலிலும் திருவாதிரை விழா விமரிசையாக நடந்தேறுமாம். சக்தி வாய்ந்த ஸ்ரீசந்திரசேகரர் திருக் கோயில், இன்றைக்கு விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் ஏங்கித் தவிக் கிறது என வருத்தத்துடன் தெரிவிக்கின் றனர் திருப்பணிக் கமிட்டியினர்.
இந்தத் தலத்தின் நாயகி ஸ்ரீகாமாட்சி யம்மன், கருணையே உருவானவள்; கல்யாண வரம் தருபவள். தீர்த்தக் குளத் தில் நீராடி, சிவனாரையும் ஸ்ரீகாமாட்சி அம்பாளையும் வஸ்திரங்கள் சார்த்தி, வில்வார்ச்சனை செய்து, வழிபட்டால் திருமணத் தடைகள் யாவும் நீங்கும்; விரைவில் பெண்களின் கழுத்தில் தாலி குடியேறும் என்பது நம்பிக்கை! அழகும் அருளும் ததும்பக் காட்சி தரும் காமாட்சி அம்பாள் சந்நிதிக்கு முன்னே வந்து நின்று, அவளை ஒரு முறை தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். ஆனால், அத்தகைய கருணைத் தெய்வம் காமாட்சியைத் தரிசிக்க வருகிறவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனதுதான் சோகம்!
ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகியோரின் திருவிக்கிரத் திருமேனிகள் அனைத்தும் கொள்ளை அழகு!
கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, அரசமரப் பிள்ளையாரை வணங்கி, ஸ்ரீஅருணா சலேஸ்வரரை தரிசித்தால், கடன் தொல்லை முதலான தீராத பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிடும்; ஸ்ரீகாசி விஸ்வநாதரைப் பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்; ஸ்ரீசந்திரசேகரரைக் கண்ணாரத் தரிசித்தால், சகல தோஷங்களும் தொலைந்து நிம்மதியுடன் வாழலாம் என்று சிலிர்ப்புடன் தெரிவிக் கின்றனர் கவரப்பட்டு வாழ் மக்கள். இங்கே... ஸ்ரீலட்சுமிநாராயண பெருமாளும் ஸ்ரீஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.
''இந்த ஆலயத்தின் தொன்மையையும் அதில் குடியிருக்கும் ஆண்டவனின் பேரருளை யும் அறியாத பக்தர்கள், சிதம்பரம் தலத்துக்கு வந்து தரிசித்துவிட்டு, அப்படியே திரும்பிச் சென்றுவிடுகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அனைத்து வரங்களையும் அள்ளித் தருவதற்கு சிவனாரும் அம்பிகையும் தயாராகத்தான் இருக்கின்றனர். ஆனால், இந்தக் கோயிலைப் பற்றி பக்தர்கள்தான் அறிந்து கொள்ளவில்லை'' என்கின்றனர் திருப்பணிக் கமிட்டியினர்.
இதோ... கவரப்பட்டு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகரர் ஆலயத்தைப் பற்றி எழுதிவிட்டோம்; அவர்களின் பேரருளைப் பெற்று, பெருவாழ்வு வாழ்வதற்கு, நீங்கள் அந்தத் தலம் நோக்கிக் கிளம்பிவிட்டீர்கள்தானே?
கவரப்பட்டு திருத்தலம் உங்களை நிச்சயம் கவரும்; அந்தத் தலத்துக்குச் சென்று, கவரப்பட்டுக்கு கௌரவம் சேருங்கள்; உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும்; மனதுள் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும்!
தம்பதி சமேதராக நவக்கிரகங்கள்!
புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீசந்திரசேகரர் ஆலயத்தின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது, தம்பதி சமேதராகக் காட்சி தரும் நவக்கிரகங்கள். இவர்களை உரிய முறையில் வலம் வந்து வணங்கி வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்; வியாபாரம் வளரும்; உத்தியோக உயர்வு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
எங்கே இருக்கிறது?
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கவரப்பட்டு. பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு. ஊருக்கு நடுவில் தீர்த்தக் குளமும் அழகிய ஆலயமும் கொண்டு, ஸ்ரீகாமாட்சி அம்பாளும் ஸ்ரீசந்திரசேகரரும் மிக அற்புதமாக கோலோச்சுகிற தலம் இது!
Comments
Post a Comment