காஞ்சி மகா பெரியவரை தரிசித்த மகிழ்ச்சியில்பால்பிரண்டன்

'தேஜோமயமான தெய்வீக நிலை கொண்ட மகா பெரியவாளின் அழகிய உருவத்தை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது!'
காஞ்சி மகா பெரியவரை தரிசித்த மகிழ்ச்சியில், அவரது அருட்கடாட்சத்தை அனுபவித்த பூரிப்பில்... பால்பிரண்டன் எனும் ஐரோப்பியர் தமது நூலில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது.

நம் முனிவர்கள், யோகிகள் மற்றும் மகான்களைச் சந்தித்து, ஆசி பெற்று, அவர்களுடனான தனது அனுபவங்களை எழுத இந்தியாவுக்கு வந்தார் பால் பிரண்டன். செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி மகா பெரியவரை வேங்கடரமணி என்பவர் உதவியுடன் தரிசித்தார். அப்போது, தான் அடைந்த பரமானந்தம்... தொடர்ந்து அன்றிரவே தமக்கு வாய்த்த அற்புத அனுபவம் குறித்து தமது புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார் பால் பிரண்டன்:

''மகா பெரியவாளை சந்தித்தது, எனது வாழ் நாளில் எனக்குக் கிடைத்த- என்றும் மறக்க முடி யாத தெய்வீக அனுபவம். குழந்தைப் பருவத்தில் இருந்தே கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள காஞ்சிப் பெரியவரை விட்டுப் பிரிய எனக்கு மனமே வரவில்லை.

அனைத்தையும் துறந்தவர்; மிகப் பெரிய பீடாதிபதியாக இருந்தும் அகங்காரம் இன்றி, அமைதியாகவே இருந்தார். தமக்கு வழங்கப்படும் பொருட்களைப் பங்கிட்டு, தகுதியானவர்களுக்கு அவரே அளித்து விடுகிறார். அவரைச் சந்தித்த பிறகு, அன்று மாலை வரை செங்கல்பட்டையே சுற்றிச் சுற்றி வந்தேன். மீண்டும் ஒரு முறை மகா பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அங்குள்ள கோயில் ஒன்றில், பக்தர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் பெரியவாள். அங்கு சென்றேன். அப்போது, பெரியவாளது பிரகாசமான திருமேனியைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.

அவர் பேசியது எனக்குப் புரியவில்லை என்றாலும், ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே நிலையில் அவர் உபதேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் கூட்டத் தில் இருந்தவர்களுக்கு வாழ்க்கை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் நம்பிக்கையு டன் இருந்தனர். அவர்களைப் பார்த்துப் பொறா மைப்பட்டேன். 'கடவுள் இருக்கிறார்' என்ற எண்ணம் அவர்களுக்கு திடமாக இருந்தது. மேடு- பள்ளம் நிறைந்த உலக வாழ்க்கையைப் பற்றியோ, பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பூமியின் அழிவைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவே இல்லை.


பிறகு, நானும் நண்பர் வேங்கடரமணியும் சென்னைக் குத் திரும்பினோம். அப்போது வேங்கடரமணி, 'நீங்கள்தான் உண்மை யான அதிர்ஷ்டசாலி. ஏனெனில், ஐரோப்பிய எழுத்தாளர் ஒருவருக்கு ஸ்வாமிகள் பேட்டியளித்தது இதுவே முதல் முறை. எனவே, தங்களுக்கு ஸ்வாமிகளின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாகக் கிடைத்துவிட்டது!' என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.

அன்று இரவு, தூக்கத்தில்... செங்கல் பட்டில் கண்ட அதே உருவத்தை மிகத் தெளிவாக மீண்டும் காணும் பாக்கியம் கிடைத்தது. என்னிடம் கருணையையும் அன்பையும் காட்டுவதற்காகவே அந்த உருவம் வந்ததாக அறிந்தேன். காஷாயம் (காவிஉடை) தரித்த அந்த உருவம், 'பணிவுடன் இரு. அனைத்தையும் அடைவாய்' என்பது போல் என் காதில் ஒலித்தது. பிறகு, அந்த உருவம் மறைந்தது. இதையடுத்து எனக்குள் ஓர் அமைதி; பெருமிதம்; மகிழ்ச்சி! தென்னிந்திய மக்களால் கடவுள் அவதாரமாக மதிக்கப்படும் காஞ்சி மகா பெரியவாளை சந்தித்த அனுபவத்தை அன்று இரவு முழுவதும் சிந்தித்தபடியே இருந்தேன்.''

பால் பிரண்டனுக்குக் கிடைத்த இந்த அனுபவம் நமக்கும் கிடைக்க காஞ்சி மகானை பிரார்த்திப்போம்!

Comments