ஞானச் செல்வமே நிரந்தர ஐஸ்வர்யம்

பிரேமை பக்தியை புஷ்டியாக்குகிறது. பிரிவினால் ஏற்பட்ட விரகதாபம் பிரேமையை பொங்கச் செய்கிறது. கிருஷ்ணர் கோபிகைகளுக்கு நூறு வருடத்து விரகதாபத்தை அளித்தார். பிருந்தாவனத்தை விட்டு வந்தபிறகு கோபிகைகளுக்கு முக சேவை கூட இல்லை. பொங்கப் பொங்க நுரை ததும்ப பிரேமை எனும் வெண்ணையை அவர்கள் சுமந்து கொண்டு குரு க்ஷேத்திரத்தின் எல்லையில் நின்றனர். அந்தக் குவளையிலிருந்து கசிந்த பக்தி வாசம் கிருஷ்ணனை துளைத்தெடுத்தது. அவ்வப்போது தொலைதூரத்தே பார்த்தபடி நின்றார்.
அதேசமயம், எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். கிருஷ்ணரை காண்போமா எனும் ஏக்கத்தோடேயே கோபியர்கள் திசை புரியாது அலைந்த வண்ணம் இருந்தனர். கோபியர்களும், கோபிகைகளும் தலையில் வெண்ணெய் குடத்தையும், நெய் குடுவையையும் சுமந்திருந்தனர். அவர்களின் உள்ளம் போல வெண்ணெயும், நெய்யும் தளும்பின. சிலரின் முகத்தில் நெய் வடிந்தது. அதை இன்னொரு கோபியர் துடைத்தபடி இருந்தார். எப்படியாவது ஒரு வாய் வெண்ணெயை கிருஷ்ணனுக்கு கொடுத்துவிட வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர்.


ஆங்காங்கு பேரரசர்கள் மேடையேறி கூடாரத்திற்குள் செல்வது தெரிந்தது. துரியோதனன் நகர்ந்தபோது மக்கள் ஆரவாரித்தனர். ‘‘அதோ... அவர்தான் துரியோதனன், அவருக்குப் பின்னாலேயே கர்ணமகாராஜா செல்கிறார் பார்’’ என்று ஜனங்கள் குதித்தனர். பீஷ்மரை கண்டதும் மக்கள் கைகளை சிரசின் மீது உயர்த்தி வணங்கினர். ‘‘ஆசார்யரே... ஆசார்யரே...’’ என்று மரியாதை பொங்க கண்களை மூடிக் கொண்டனர். பீஷ்மாச்சார்யார் ஆசியளித்தார். பாண்டவர்களை பார்க்கும்போது ஜெயகோஷம் போட்டனர்.
ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருக்கும் அரசர்கள் கூட கிருஷ்ண சபையில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமர்ந்திருந்தனர். ஒருபுறம் அரசர்கள், மந்திரிகள், தலைசிறந்த வீரர்கள்; வேறொரு பக்கம் ஞானத் தபோதனர்களான ரிஷிகளும் குழுமியிருந்தனர். வசிஷ்டர், மார்க்கண்டேயர், அத்ரி, வாமதேவர் என்று தலைசிறந்த மகரிஷிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். கிருஷ்ணர் அந்த ரிஷிகளை நோக்கி நமஸ்கரித்தார். அதுவரை அமர்ந்திருந்த பேரரசர்களும் எழுந்து நின்று வணங்கினார்கள்.


கிருஷ்ணர், தன் தந்தை வசுதேவரின் கைகளை பிடித்துக் கொண்டே மேடையேறினார். ரிஷிகளைப் பார்த்து, ‘‘உண்மையிலேயே தெய்வங்கள் நீங்கள்தான். கோயிலிலுள்ள மூர்த்தங்களுக்கு சக்தி இருக்கிறதெனில் அது உங்களால்தான்; நீங்கள் பிரதிஷ்டை செய்ததால்தான். உங்களைப் போன்ற சாதுக்கள் எழுதுவதே சாஸ்திரங்கள். அவையே காலம் கடந்து நிற்கும். ஏனெனில், சாஸ்திரங்கள் கடல் நீர் போன்றது. உப்பும், நீரும் கலந்திருக்கும். அதை மேகம் போன்ற ரிஷிகளாகிய நீங்கள் உப்பை விலக்கி நீரை மட்டும் ஈர்த்துக் கொடுக்கிறீர்கள். கொட்டிக் கிடக்கும் தர்மங்களை அழகாக பிரித்துக் கொடுக்கிறீர்கள்’’ என்றெல்லாம் கூறி ரிஷிகளை கிருஷ்ணர் வரவேற்றார். சகல ரிஷிகளுக்கும் பாத பூஜை செய்தார்.

ரிஷிகளோ கிருஷ்ணரை கண்டு ஆச்சரியமுற்றனர். மகா மண்டபத்தில் நின்றிருந்த அரசர்கள் கிருஷ்ணருடைய கம்பீரத்தையும், பணிவையும், ஐஸ்வர்யத்தையும் கண்டு தங்களை தரித்திரர்களாக உணர்ந்தனர். நமக்கு ஏன் இப்படி தோன்றவில்லை என்று வெட்கமுற்றனர். கிருஷ்ணரோ ரிஷிகளிடம் ஞானச் செல்வம் என்னும் நிரந்தர ஐஸ்வர்யத்தை கண்டார்.
வசுதேவர் இத்தனை மகான்கள் இருக்கும்போதே அவர்களிடம் ஏதேனும் கேட்டுப் பெறலாமே என்று கைகுவித்தார். அதிலும் பிரதானமாக அமர்ந்திருந்த நாரதரை பார்த்துப் பேசினார். ‘‘அடியேன் கடைத்தேறுவதற்கு வழி சொல்ல வேண்டும். சரீர யாத்திரை முடித்து ஞானமடையும் மார்க்கத்தை உரைக்க வேண்டும்’’ என்று வேண்ட, ரிஷிகள் பிரமித்தனர். ஆனால், நாரதருக்கு சிரிப்பு வந்தது. ஏனெனில், இத்தனை ரிஷிகளும் இங்கு வந்ததே கிருஷ்ணரை தரிசிக்கத்தானே. அவர் திருவாயால் ஏதேனும் உபதேசம் கிடைக்காதா என்றுதானே. இந்த வசுதேவன் வீட்டிலல்லவா அந்த பரப்பிரம்மம் உட்கார்ந்திருக்கிறது! யோகிகளின் இருதயத்திலோ, வைகுண்டத்திலோ, திருப்பாற்கடலிலோ கூட இப்போது இல்லை. இங்கு வசுதேவனின் மகனாக அமர்ந்திருக்கிறது. இந்த ரிஷிகளெல்லாம், ‘அட கிருஷ்ணனை தரிசிப்போமோ இல்லையோ அந்த வசுதேவரை தரிசித்தாலே போதும், மோட்சமடையலாமே’ என்றுதானே வந்திருக்கிறார்கள். அந்த ரிஷிகளைப் பார்த்து நான் கடைத்தேற என்ன வழி என்று கேட்கிறாரே, எத்தனை விநயம் என்று ரிஷிகள் வியந்தார்கள்.
ஆனாலும், வசுதேவர் கேட்டதாலேயே பதில் சொல்லத் தொடங்கினார்கள்: ‘‘வசுதேவரே, பிறந்த உடனேயே ஜீவனுக்கு தேவ கடன், பித்ரு கடன், ரிஷிக் கடன், பிராணிகளுக்கு உண்டான கடன், மனுஷ்யக் கடன் என்றெல்லாம் வந்து விடுகின்றன. சத்புத்திரனை பெற்றதாலேயே பித்ரு கடன் அடைந்து விடும். இதிகாச, புராணங்களை கேட்கும்போதே ரிஷிக் கடன் தீர்ந்து விடும். பசு மற்றும் பட்சிகளுக்கு அன்னம் வைக்கும்போதே பிராணிகளுக்குண்டான கடனும் மறைந்து விடும். காலத்தினால் மானிடர்களுக்கு உதவும்போதே மானிடக் கடனும் நேராகிறது. இதில் யாகத்தால் மட்டுமே தேவக் கடன் எனும் தெய்வக் கடனை சரி செய்ய முடியும். இப்படி ஒவ்வொன்றாக தீரும்போது ஜீவனின் சித்தம் சுத்தமாகிறது. சித்த சுத்தம் தியானத்திற்கு எளிதாக அழைத்துச் செல்லும். திடப்பட்ட தியானம் ஜீவனை ஆத்ம விசாரத்தில் கொண்டு போய் சேர்க்கும். விசாரம் தீவிரமானால் மோட்சம் எளிதாகும்’’ என்று சகல தர்மத்தின் சாரத்தையும் ரத்ன சுருக்கமாகப் பேசினார்கள்.


இத்தனை கூட்டத்திற்கும் ஆரவாரத்திற்கும் நடுவே நடுக்கடல் நிச்சலனம் போல கோபியர்கள் தனித்திருந்தனர். கிருஷ்ண நாமத்தை பஜித்தபடி இருந்தனர். மக்கள் வெள்ளம் சூழ்ந்தாலும் மனம் கிருஷ்ணத் தீவிலேயே லயித்துக் கிடந்தது. நூறு வருடங்களின் விரகதாபம் அவர்களை உருக்கியிருந்தது. வெகு தொலைவிலிருந்து வரும் ஆறு, கடலோடு கலக்கும் தீவிரத்தோடு அவர்கள் நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இந்த பிருந்தாவனவாசிகளுக்கு நந்தகோபர்தான் தலைமை தாங்கி வந்தார். தலையில் முண்டாசோடும், கையில் கோலோடும், சிறு சிறு பசுக்களோடும் வந்திருந்தனர். ‘துவாரகாதீசன் கிருஷ்ணர் எங்கிருக்கிறார்?’ என்று ஒருவரிடம் கேட்டனர்.

‘‘அதோ கருடக்கொடி பறக்கிறதே அந்த பெரிய கூடாரத்திற்குள் இருக்கிறார்’’ என்றதும் நந்தகோபர் துள்ளிக் குதித்தார். ‘‘அடேய், நம் கிருஷ்ணன் அந்த கூடாரத்தில் இருக்கிறான். ஓடி வாருங்கள்’’ என்று உரக்கக் கூவினார். அந்த கர்ஜனையான குரல் ஒருபக்கம் ராஜாதி ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான, ரிஷிகளுக்கெல்லாம் ரிஷியான மகாயோகியான கிருஷ்ணரின் காதில் ஒலித்தது. தான் பகவான், வைகுண்டபதி, நரநாராயணன், பேரரசன், துவாரகாதீசன் என்பதையெல்லாம் மறந்து தொலைவேயிருந்த நந்தகோபனை பார்த்துவிட்டு கிருஷ்ணர் ஓடினார். ‘‘அப்பா...’’ என்று அடிக்குரலில் பிளிறினார். அன்றைய பாலகிருஷ்ணனைப்போல குழந்தையைப்போல ஓடினார். நந்தகோபரும், யசோதையும் ‘‘ஹே... என் கண்ணையா... கிருஷ்ணா...’’ என அணைத்துக் கொண்டனர். யசோதை தவித்தாள். கிருஷ்ணனை மடியில் சாய்த்துக் கொண்டாள். முகம் முழுவதையும் சேலையினால் துடைத்து விட்டாள். அவசர அவசரமாக சிறு பானையின் மீது மூடிவைத்திருந்த துணியை கிழித்தாள். உள்ளேயிருந்த வெண்ணெயை அள்ளி கிருஷ்ணனுக்கு ஊட்டினாள்.

ஆனந்தக் கண்ணீருடன் கோபிகைகளும், ஆய்ச்சியர்களும் சூழ்ந்தனர். பகவான் பிருந்தாவன பாலகன் ஆனார். பெருங்கடலில் சங்கமிக்கும் சிற்றாறுகள் போல ஒவ்வொருவரும் கிருஷ்ணரை நெருங்கினார்கள். கோபிகைகளின் கூட்டத்தை மெல்ல முட்டி தள்ளிக்கொண்டு பசுக்கன்றுகள் கிருஷ்ணரை நெருங்குவதைப் பார்த்து பிறர் கண்ணீர் சொரிந்தனர். நாம்கூட கிருஷ்ணரை இத்தனை தூரம் நேசித்திருப்போமா என்று அவர்கள் வெட்கப்பட்டனர்.

Comments