கடலங்குடி ஸ்ரீநாத வரதராஜபெருமாள் ஆலயம்!


கடலங்குடி ஸ்ரீநாத வரதராஜபெருமாள் ஆலயம்!

பரிதாப நிலையில்...
பிரமாண்டமான பெருமாள் கோயில்



'மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை - இந்த மூன்று ஆசைகளில் மிகவும் கொடியது பெண்ணாசை. மூவுலகிலும்... பெண்ணாசை இல்லாதவர் ஒருவரேனும் உண்டா?' - இந்தக் கேள்வியை மகாவிஷ்ணு நம்மிடம் கேட்காமல் இருந்திருக்கலாம். அப்படியே அவர் கேட்டாலும், 'ஆமாம்... அடியேனுக்கு பெண்ணாசையே இல்லையே...' என்று பொய் சொல்லாமலேனும் இருந்திருக்கலாம்! - நாரதர் தன்னைத் தானே நொந்து கொண்டார். 'நாம் சொன்ன ஒரேயரு பொய், நம்மை என்ன பாடுபடுத்துகிறது' என்று வெட்கமும் துக்கமும் பொங்க, சோகத்தில் ஆழ்ந்தார்.

பின்னே... பொய் சொல்வதே குற்றம். அதிலும், இறைவனிடமே பொய் சொல்லலாமா?

''பெண்ணாசை இல்லாதவர் எவரும் உண்டா?'' என்று பெருமாள் கேட்டதற்கு, 'இருக்கிறார்கள்' என்றோ 'இல்லை' என்றோ பதில் சொல்லியிருக்கலாம். 'எனக்குத் தெரியவில்லை' என்றுகூட ஒதுங்கியிருக்கலாம். 'பெண் மீது ஆசையில்லாதவன் நான் ஒருவன் இருக்கும் போது, இதென்ன கேள்வி?' எனும் தொனியில் நாரதர் பதில் சொல்லி விட்டுக் கிளம்ப, அவரை சோதித்துப் பார்க்க்க எண்ணினார் பெருமாள்.



நாரதர் செல்லும் பாதையை அப்படியே நந்தவனமாக்கினார் இறைவன். தென்றலும் தென்றலில் கலந்த பூக்களின் நறுமணமும் நாரதரின் நாசியைத் தொட்டு, அவரது மூச்சுக் காற்றில் கலந்து உள்ளே மணம் பரப்பியது. எதிரே, எந்த லோகத்திலும் இல்லாத பேரழகி ஒருத்தி நின்றிருந்தாள். நறுமணமும் நங்கையின் அழகும் அவருக்குள் சலனத்தை உண்டு பண்ணின.

'இந்த இடம் வெறும் வனம்தானே? நந்தவன மாக எப்படி மாறியது? இங்கே எப்படி இத்தனை அழகுடன் பெண்ணொருத்தி நிற்கிறாள்?' என்பதையெல்லாம் சிந்திக்க மறந்து, அவளுக்கு அருகில் சென்றார் நாரதர். வந்திருப்பது பேரழகி அல்ல... பேரழகன். ஆமாம்... சாட்ஷாத் பெருமாளே, மோகினிப் பெண்ணாக வந்து நின்றதை, பாவம்... நாரதர் அறியவில்லை!

''நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா?'' - நாரதர் கேட்க, மோகினியாளோ சட்டென்று சொன்னாள்: ''சங்கு -சக்கரம் ஏந்தியபடி இருப்பவரே எனக்கு மணாளனாகும் தகுதியுள்ளவர்!''

இதைக் கேட்டதும் நாரதரின் முகம் வாடியது. எதிரே நின்ற பெண்ணால் ஆசை மேலிட்டது. அவளது சொல்லால் இவரின் இயலாமை வெளிப்பட்டது. ஆசையும் கோபமும் பொங்க, விறுவிறுவென பெருமாளிடம் சென்று, சங்கு மற்றும் சக்கரத்தைப் பெற்றுக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக நந்தவனத்துக்கு வந்தார் நாரதர். அங்கே... நந்தவனமே இல்லை; பிறகு மோகினியாள் மட்டும் இருப்பாளா என்ன?



அதிர்ச்சியும் குழப்பமுமாக நின்ற நாரதரின் முன்பு வரதராஜபெருமாளாக திருக்காட்சி கொடுத்தார் இறைவன். நடந்த நாடகத்தை நிகழ்த்தியது பெருமாள் என உணர்ந்தவர், ''இறைவா, என்னை மன்னியுங்கள்'' என்று சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் நாரதர்... சங்கு சக்கரங்களைத் திருப்பிக் கொடுத்தபடி!

பொய் சொன்ன பாவத்துக்காக நாரதருக்கு மகா விஷ்ணு சாபமிட... அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக வகுளாரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்தார் நாரதர். மகிழ மரங்கள் நிறைந்த வனப்பகுதியில், மனதில் ஸ்ரீமந் நாராயணரை நினைத்தபடி, கடும் தவம் மேற்கொண்டார்; சாப விமோசனம் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம்!

அந்த வகுளாரண்ய க்ஷேத்திரத்தின் இன்றைய பெயர் கடலங்குடி. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மிக அழகிய கிராமம். இந்த ஊரில்தான் புராணச் சிறப்பு மிக்க ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஆமாம்... ஸ்ரீநாரத வரதராஜபெருமாள் திருக்கோயில்!

இந்த ஆலயம், 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கொண்டம நாயக்கரின் பிரதிநிதி ஓமலேச நாயக்கர் என்பவரால் கட்டப் பட்டதாகத் தெரிவிக்கிறது கல்வெட்டு ஒன்று! இதையடுத்து ஸ்ரீரங்கப்ப நாயக்கர் மற்றும் வரங்கொண்டப்ப நாயக்கரால் திருப்பணிகள் பலவும் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லும் கல்வெட்டுகளும் உண்டு.

கருங்கல் மற்றும் செங்கல் திருப்பணியாக கலந்து கட்டி, பிரமாண்டமாக அமைந்துள்ள ஆலயம், இன்றைக்கு சிதிலமாகிக் கிடப்பதுதான் வேதனை. மனசின் கலக்கத்தைத் துடைத்தெறிந்த பெருமாளின் திருக்கோயில், மனவருத்தப்படும்படி உள்ளது என்பதுதான் கொடுமை!

சுமார் 64 அடி உயரத்துடன் ஐந்து நிலை ராஜகோபுரம், கம்பீரமாக ஆனால் களையிழந்து காணப்படுகிறது. கோபுரத்தின் சிற்ப பொம்மைகள் பலவும் சின்னாபின்னமாகி, காண்பவர்களை கண்கசியச் செய்கின்றன. கோபுரத்தின் பல பகுதிகளில் குடை விரித்தது போல், மரங்கள் வளர்ந்து கிடக்க... வருத்தம் தோய்ந்த மனத்துடன் மெள்ள உள்ளே நுழைந்தோம்.

பலி பீடம் உண்டு; கொடிமரம் இல்லை. அடுத்து வசந்த மண்டபம்... இன்றைக்கு வெறும் கட்டடமாக, செங்கல் குவியலாக மாறிப் போய், தன் வசந்தம் மொத்தத்தையும் இழந்து நிற்கிறது! மணிமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என விஸ்தாரமாக இருந்தும், எந்த நேரத்தில் எந்த மண்டபம் என்னாகுமோ... என்று பதைபதைக்கிறது மனம். புண்ணிய கோடி விமானம் கொண்ட கருவறை; உள்ளே ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக நின்ற கோலத்தில், கையில்- பிரயோகச் சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார் ஸ்ரீநாரத வரதராஜபெருமாள். உற்ஸவர் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி, ஸ்ரீருக்மிணி- ஸ்ரீசத்யபாமா சமேதராக அழகு ததும்ப காட்சி தருகிறார். கோயிலில், நாரதரின் கதையை விளக்கும் அழகிய ஓவியங்கள், ஆங்காங்கே அழிந்தும் கலைந்தும் உள்ளன. புராணப் பெருமைக்குச் சாட்சியாக ஸ்ரீநாரதரும் இங்கே அருள்புரிகிறார். இவரின் மனக்கலக்கத்தைப் போக்கிய பெருமாள், நமது துயரங்களையும் துக்கங்களையும் போக்குவதற்கு தயாராக இருக்கிறார். ஸ்ரீவரதராஜரின் திருக்கரத்தில் உள்ளது போலவே, மணிமண்டபத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீநரசிம்மரும் கையில் பிரயோகச் சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

இத்தகு சிறப்புமிக்க ஆலயம், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாமல் உள்ளது என்பது கவலைக்கு உரிய விஷயம்! ஸ்வாமிக்கு நைவேத்தியம் தயாரிப்பதற்கான மடப்பள்ளி கட்டடமும் உருக்குலைந்து கிடக்கிறது. கோயிலின் பட்டாச்சார்யர், தனது இல்லத்தில் இருந்து தினமும் பெருமாளுக்கு நைவேத்தியம் எடுத்து வருகிறாராம்! தலவிருட்சம் - மகிழமரம். மணவாளமாமுனி தீர்த்தம்(மணக்குளம்), திருக்குளம், ஆஞ்சநேய தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உண்டு. ஆனால் எதிலும் தண்ணீர் இல்லை!

இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை தரிசித்தவர் ஆதலால் திருமங்கையாழ்வாருக்கு மட்டும் தனிச்சந்நிதி உண்டு. ஆனால், திருமங்கையாழ்வார் இந்த இறைவனைக் குறித்து பாசுரங்கள் எதுவும் அருளவில்லை. இறைவனின் திருநாமத்துடன் 'ராஜா' என சேர்ந்திருந்தால், அந்த இறைவனைப் பாட மாட்டாராம் திருமங்கையாழ்வார்!

கிருமிகண்ட சோழ மன்னனால் பார்வையை இழந்த பெரியநம்பிகள் (ஸ்ரீராமானுஜரின் குரு), இந்தத் தலத்துக்கு வந்து, இங்கேயே தங்கி தியானித்து, ஸ்ரீநாரத வரதராஜபெருமாளின் பேரருளால் பரமபதம் அடைந்ததாகச் சொல்வர்!

கடந்த 2003-ஆம் ஆண்டு ஆலயத்தில் பாலாலயம் செய்ததுடன் சரி... அடுத்தடுத்து திருப்பணிகள் செய்வதற்கு நிதி வசதியின்றி தவிக்கின்றனர் திருப்பணிக் குழுவினர்.

ஒருகாலத்தில் பிரம்மோத்ஸவம், பத்து நாள் திருவிழா, கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி, திருக்குளத்தில் தெப்போத்ஸவம் என கோலாகலமாக விழாக்களைக் கண்ட ஆலயம், இன்றைக்கு வெறிச்சோடிக் கிடக்கிறது; குதூகலங்கள் எதுவுமின்றித் திகழ்கிறது.

பக்தர்களாகிய நம்முடைய மனதை செம்மைப்படுத்தி, அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீமந் நாராயணனின் ஆலயம் சீரும் சிறப்புமாகத் திகழ வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை!

எங்கே இருக்கிறது?

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் கடலங்குடியில் உள்ளது ஸ்ரீநாரத வரதராஜ பெருமாள் ஆலயம். மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்து மூலம் கடலங்குடியை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கடலங்குடி. இதேபோல், கும்பகோணத்தில் இருந்து பந்தநல்லூர், மணல்மேடு வழியாக வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் செல்லும் பேருந்து மூலம் கடலங்குடியை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவு!

தொடர்புக்கு:

கி. சடகோபாலன்
ஸ்ரீநாரத வரதராஜபெருமாள் அறக்கட்டளை
1/169, ஸ்ரீமாரியம்மன் குளத்தெரு,
கடலங்குடி - 609 204,
திருமேனியார்கோவில் அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
போன்: 04364 - 203604

Comments