சுனையில் நீராடி.. சுப்ரமணியரை தரிசித்து..!

பழத்துக்காக அம்மையப்பனுடன் சண்டையிட்டு, பழநியில் குடியமர்ந்தார் குமரக்கடவுள் என்பது தெரியும். அப்படிப் பழநியம்பதிக்குச் செல்லும் வழியில், கடும் தாகம் ஏற்பட்டதாம், குமரனுக்கு! தனது வேலால் பூமியைக் குத்த... குபுக்கென்று பொங்கி வந்தது நீர். ஆனால், அது வெந்நீர் போல் சூடாக இருக்க, சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் வேலால் பூமியைக் குத்தினார். அங்கே ஜில்லென்று தண்ணீர் வந்ததாம்! அந்தத் தண்ணீரைக் குடித்ததும், கோபம் மொத்தமும் கரைந்து, குளிர்ந்து போனாராம் குமரன். இல்லையெனில், பழநியம்பதியில் அவர் கடும் உக்கிரமாகக் காட்சி கொடுத்திருப்பார் என்கிறது திருமலைக்கேணியின் ஸ்தல புராணம்.
திண்டுக்கல்- செந்துறை சாலையில் சுமார் 24 கி.மீ. தொலைவில், நத்தத்தில் இருந்து செந்துறை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில், மலை மேல் அமைந்துள்ளது திருமலைக்கேணி திருக்கோயில். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. இங்கே... பாலதண்டாயுதபாணியாக, கையில் தண்டம் ஏந்தியபடி, ஆனால், ராஜ அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து வணங்குவது வழக்கம். அப்படி வழிபட்டால், இனி ராஜயோகம் அமைந்து வாழ்க்கை சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் இரண்டு முருகப்பெருமான்கள்; அதாவது, மூலவர் முருகக் கடவுளின் விக்கிரகத்துக்குக் கீழே, பூமிக்கு அடியில், சுமார் 11 அடி ஆழத்தில் ஸ்ரீஆதிமுருகனின் விக்கிரகமும் உள்ளதாம். மூலவ மூர்த்தத்துக்குச் செய்யப்படும் அபிஷேகம் யாவும் அவரது திருவடிக்கு அருகில் உள்ள துளை வழியே, கீழே இருக்கும் ஆதிமுருகப்பெருமானுக்கும் செல்வதாகச் சொல்கின்றனர், கோயில் ஊழியர்கள். மேலும், இங்கே அருணகிரிநாதருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

கிருபானந்த வாரியார் அடிக்கடி இந்த ஆலயத்துக்கு வந்ததுடன், கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.

இங்கு, ஏராளமான விழாக்கள் விமரிசையாக நடந்தாலும், வைகாசி விசாகம் ரொம்பவே விசேஷம்! அன்றைய தினம், திண்டுக்கல் மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் இங்கு வந்து பாலதண்டாயுதபாணியைத் தரிசித்துச் செல்வார்கள்.

இன்னொரு சிறப்பு... ஸ்ரீவள்ளியும் ஸ்ரீதெய்வானையும் சுனை வடிவமாக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, அவர்களுக்குச் சந்நிதியோ, விக்கிரகங்களோ இல்லை. வெந்நீராக வந்தது, ஸ்ரீவள்ளி சுனை; குளிர்ந்த நீராக வந்தது, ஸ்ரீதெய்வானை சுனை என்கின்றனர். திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம், பிள்ளை பாக்கியம் இல்லை எனக் கலங்குவோர், இந்தச் சுனைகளில் நீராடி, முருகப் பெருமானைத் தரிசித்தால் விரைவில் நல்லது நடக்கும்; கேட்டது கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்!

Comments