கர்நாடக மாநிலம் என்றதும், உடனே நம் நினைவுக்கு வருவது உடுப்பி திருத்தலமும், அங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீகிருஷ்ணரும்தான்! இங்கே, பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பிரதிஷ்டை செய்து, ஆராதித்தவர் ஸ்ரீமத்வாச்சார்யர்.
ஸ்ரீகிருஷ்ணருக்கு உரிய பூஜைகளைக் குறையறச் செய்வதற்காக எட்டு மடங்களை நிறுவினார்; அந்த மடங்களின் அதிபதியாக, சிறுவர் களை நியமித்தார். ஒரு மடாதிபதி இரண்டு மாத கால பூஜைகள் செய்வது என வகுத்துத் தந்தார்.
ஸ்ரீபலிமாரு மடம், ஸ்ரீஅடமாரு மடம், ஸ்ரீகிருஷ்ணபுர மடம், ஸ்ரீபுட்டிகே மடம், ஸ்ரீஷிரூர் மடம், ஸ்ரீசோதி வதிராஜ மடம், ஸ்ரீகணியூர் மடம் மற்றும் ஸ்ரீபெஜவார மடம் ஆகிய எட்டு மடங்கள் உள்ளன. இவற்றில், ஸ்ரீசோதி மடத்தின் 20-வது மடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீவதிராஜர். இவர், உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரை பூஜிக்கும் காலம் 2 மாதம் என்பதை இரண்டு வருடங்களாக மாற்றியமைத்தார். அதன்படி, தலா இரண்டு வருடங்கள் என முறைபோட்டு, பூஜைகள் இன்றளவும் நடந்து வருகின்றன.
ஸ்ரீஷிரூர் மடாதிபதியான ஸ்ரீஸ்ரீலட்சுமிவர தீர்த்தருக்கு, தற்போது பூஜை செய்யும் முறை! தினமும் 14 விதமான பூஜைகளைத் தவறாமல் அனுஷ்டிப்பவர், இவர்.
துவாபர யுகத்தின் இறுதிக் காலம். ஸ்ரீகிருஷ்ணர் சிறு வயதில் விளையாடியதையெல்லாம் தற்போது காண விரும்பினாள், தாயார் தேவகி. அதேபோல், கணவரின் பால்ய பருவத்துக் குறும்புகளைக் காண ஆவல் கொண்டாள், ஸ்ரீருக்மிணி. அத்துடன், தாம் வணங்குவதற்கு பால கிருஷ்ண விக்கிரகத் திருமேனியும் கேட்டாள். உடனே விஸ்வகர்மாவை அழைத்த ஸ்ரீகிருஷ்ணர், கையில் வெண்ணெய் வைத்திருக்கும் பால்ய தோற்றத்தை விக்கிரகமாக வடித்துத் தரும்படி பணித்தார். அப்படியே அழகிய விக்கிரகத் திருமேனியைச் செய்து கொடுத்தார் விஸ்வகர்மா. இதனை, அனுதினமும் வழிபட்டு, ஆராதனை செய்து, முக்தி அடைந்தாள் ஸ்ரீருக்மிணி. அதன்பிறகு, ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம், ஸ்ரீருக்மிணியின் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில், விக்கிரகத்தின் மீது சந்தனம் முழுவதும் படிந்து, விக்கிரகமே வெளித் தெரியாமல் போனது!
பல்லாயிரம் வருடங்கள் கழிந்த நிலையில், வியாபாரி ஒருவர் அங்கே குவிந்திருந்த சந்தனத்தை விலைக்கு வாங்கினார்; அதனை அப்படியே கப்பலில் ஏற்றிக் கொண்டார். அந்தச் சந்தனக் குவியலுக்குள், ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது, வியாபாரிக்குத் தெரியவில்லை. அப்போது, திடீரெனப் புயல் தாக்கியது. சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்ட கப்பல், கிட்டத்தட்ட சின்னா பின்னமாகும் வேளையில், என்ன செய்வது எனத் தெரியாமல், தவித்து மருகினார் வியாபாரி. அங்கே... கடற்கரையில், துறவி ஒருவர் தவம் செய்துகொண்டி ருப்பதைக் கண்டார். உடனே அவரை நோக்கி, 'என்னையும் கப்பலையும் புயல் சீற்றத்தில் இருந்து, காத்தருளுங்கள் சுவாமி’ என வேண்டினார். வியாபாரியின் பிரார்த்தனையைக் கேட்ட துறவி, தன் தோளில் இருந்த காவி வஸ்திரத்தை எடுத்து, வானத்தை நோக்கி வீசினார்.
என்ன ஆச்சரியம்... சட்டென்று அடங்கியது புயல்! இதில் மகிழ்ந்த வியாபாரி கரைக்கு வந்து, தன்னுயிரைக் காப்பாற்றியதற்கு நன்றியாக கப்பலையே தர முன்வந்தார். ஆனால் துறவியோ, 'எனக்குக் கப்பல் வேண்டாம்; கப்பலுக்குள் குவித்து வைக்கப்பட்டுள்ள சந்தன கட்டைகளில் ஒன்றை மட்டும் கொடுத்தால் போதும்’ என்றார். அவர் வேறு யாருமல்ல... த்வைத சித்தாந்தத்தை உருவாக்கிய ஸ்ரீமத்வாச்சார்யர்!
அது சந்தனக் கட்டை அல்ல; கோபிச்சந்தனத்தால் மூடப் பட்டிருக்கும் கண்ணனின் விக்கிரகம் என்பதை, தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஸ்ரீமத்வர், பெரும்புதையல் கிடைத்தது போன்று மகிழ்ந்தார். விக்கிரகத்தை நீராட்டி, பூஜைகள் செய்து, உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மடத்தில் நிறுவினார்.
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர், சாளக்கிராம மூர்த்தம்; கொள்ளை அழகு. இங்கே ஸ்ரீஜெயதீர்த்தர், ஸ்ரீவியாஸ ராஜர், ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பூஜித்துள்ளனர். அதேபோல், ஸ்ரீஹரிதாஸர், ஸ்ரீபுரந்தரதாசர், ஸ்ரீகனகதாஸர் ஆகியோர் ஸ்ரீகிருஷ்ண பக்தியில் திளைத்து, பாடல்கள் பாடி ஆராதித்துள்ளனர். பால்யத்தில், வெண்ணெய் திருடித் தின்ற பாலகிருஷ்ணனின் மறு உருவமே உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர். பசியுடன் வருவோருக்கு உணவு தருவதில்
அப்படியரு ஆனந்தமாம், இவருக்கு! இதனால், 'அன்னப் பிரம்மா’ என ஸ்ரீகிருஷ்ணரைப் போற்றுகிறார் ஸ்ரீமத்வர். ஸ்ரீகிருஷ்ண
விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மற்றும் கரண்டி ஆகியவற்றை வழங்கினாராம் ஆச்சார்யர். அன்று முதல், ஸ்ரீகிருஷ் ணருக்குத் தரப்படுகிற காணிக்கைகள் யாவும், அங்கே தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பசியைப் போக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், ஸ்ரீகிருஷ்ணருக்குப் பூஜை செய்யும் மடாதிபதிகள், கூடவே அட்சய பாத்திரத்துக்கும் கரண்டிக்கும் பூஜைகள் செய்கின்றனர். இரண்டு வருடங்கள் கழித்து, வேறொரு மடாதிபதி பூஜைக்கு வரும்போது, அட்சய பாத்திரம், கரண்டி மற்றும் ஸ்ரீகிருஷ்ண மடத்தின் சாவிகள் ஆகியவற்றை வழங்கும் வைபவம், மிகப்பெரிய திருவிழா போல் நடைபெறும். இதனைத் துவக்கி வைத்தவர், ஸ்ரீவதிராஜ யதி எனும் மடாதிபதி.
உடுப்பி தலத்தின் போஜன சாலை யில் சாப்பிடுகிற பக்தர்களுக்கு, ஸ்ரீகிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைப்பதாக ஐதீகம்! மகாபாரத பீமன், இங்கே ஸ்ரீகிருஷ்ணருக்கான நைவேத்தியத்தைச் சமைத்து வழங்கு வதாக நம்பிக்கை. கடந்த 800 வருடங் களாக, அன்னதானம் சிறப்புற நடைபெறுகிறது. தினமும் சுமார் 15,000 பக்தர்கள், சாப்பிடுகின்றனர். விசேஷங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றின்போது சுமார் 50,000 பக்தர்களுக்கும் மேல் அன்னதானம் நடைபெறுமாம்! இந்தியாவின் பல ஊர்களில் உள்ள பக்தர்களும், இந்த அன்னதானத்துக்குப் பொருளுதவி செய்து, ஸ்ரீகிருஷ்ணரின் பேரருளைப் பெறுகின்றனர்.
'பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால், இறைவன் இரண்டு பங்கு அருளை வழங்குகிறான்’ என்கிறது வேதம். ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து, அவனுக்கு நைவேத்தியம் செய்த உணவைச் சாப்பிட்டு, அவனருளைப் பெற... உடனே புறப்படுவோம், உடுப்பிக்கு!
Comments
Post a Comment