கொங்கு நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 7ல் திருப்புக்கொளியூர் என்ற அவிநாசியும் ஒன்று. காசி விஸ்வேஸ்வரரிடமிருந்து ஒரு வேர் கிளைத்து ஓடி அவிநாசியப்பராய் முளைத்தது என தலபுராணம் கூறுகிறது. கோபுர வாயிலின் நடுவில் உச்சிப்பிள்ளையார் ஓரடி உயரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவ்விநாயகருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தால் விரைவில் பெருமழை பெய்யும் என்பது நம்பிக்கை. கோபுர வாயிலின் உட்புறம் இறைவனை நோக்கியவாறு இடப்பக்கம் சுந்தரரும் வலப்பக்கம் வாதவூராரும் உள்ளனர்.
முன்மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ நடராஜர், ஆலங்காட்டுக் காளியம்மை இருவரும் 6 அடி உயர சிற்பங்களாக அமைந்துள்ளனர். உட்பிராகாரத்தில் செய்குன்று போன்ற மேடை மீது குமரக்கடவுள் நின்ற திருக்கோலம் காட்டுகிறார். இவரை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
கருவறையில் மூலவர் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளார். அவிநாசியப்பரை பிரம்மன் வழிபட்டதால் இவருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் பெயர். வெளிப்பிராகார கருவறையில் அன்னையின் மூன்றரை அடி உயர நின்ற கோலம் அழகு மிகுந்தது. நயனங்களில் கருணை பொங்கி வழிகிறது. அம்பிகைக்கு பெருங்கருணையம்மை, கருணராயச் செல்வி, கருணையாத்தா என்றெல்லாம் சிறப்பு பெயர்கள் உண்டு.
உட்பிராகாரத்தில் இறைவன் அருகிலே ஈசானிய திசையை நோக்கி நாற்கரங்களுடன் காலபைரவர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொண்டு காரியம் கைகூடியவர்கள், அதற்கு நன்றிக் காணிக்கையாக அவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர்.
தலமரம், மாமரம். அம்பிகை தவக்கோலத்துடன் இங்கு பாதிரி மரத்தின் கீழ் உள்ளாள். இத்தலத்திற்கு வில்வ வனம் என்றும் பெயர் உண்டு.
அடியார்களின் துன்பம் போக்கி தூய்மையாக்கிட இவ்வாலயத்தில் 6 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே காசி கங்கை, வெளியே தெப்பக்குளம், நாக கன்னிகை தீர்த்தம், திருநள்ளாறு தீர்த்தம், ஐராவதத்துறை. அத்துடன் அதிசயம் நிகழ்ந்த தாமரைக்குளமும் உள்ளன.
எம்பெருமான் ஊழிக்காலத்தில் சங்கரா தாண்டவம் செய்தபோது பிரம்மன், திருமால், இந்திரன், மும்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு ஓடிவந்து ஒளிந்தனர். அதனால் இத்தலத்திற்கு திருப்புக்கொளியூர் என்று பெயர். (புக்க&ஒளிந்த).
சுந்தரர் இத்தலத்தில் நிகழ்த்திய அற்புதம் ஒன்று உண்டு. அவர் இவ்வூர் வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது எதிர் எதிரான இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் கேட்டன. மங்கல ஒலி வீட்டுச் சிறுவனுக்கு பூணூலணி விழா என்றும், எதிர் வீட்டு சிறுவனை மூன்றாண்டுகளுக்கு முன் முதலை விழுங்கியதால் அவர்கள் தங்கள் மகனுக்கு பூணூலணி விழா நடத்த முடியவில்லையே என அழுகின்றனர் என்றும் தெரிந்தது.
துக்க வீட்டினருக்கு திருவருள் புரிய எண்ணம் கொண்டார் சுந்தரர். அவர்களை குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். பின்னால் ஊரே திரண்டு வந்தது.
குளத்தின் முன் நின்று சுந்தரர் ‘எற்றான் மறக்கேன் உருமைக்கும் எம்பிரானை அன்றே..’ எனும் தேவாரத் திருப்பதிகத்தை பாடத் துவங்கினார். முதல் பாட்டு முடிவுற்றதும் மழை பெய்து குளம் நிரம்பி தாமரை பூத்தது. இரண்டாவது பாட்டு முடிந்தபோது முதலை வந்து வாயை அகலத் திறந்தது. மூன்றாவது பாட்டு துவங்கியதும் மும்மூர்த்திகள் எமனுடன் வந்தனர். 4வது பாட்டு பாடும்போது ருத்ரன் தாகலையும், பிரம்மன் உருவத்தையும், திருமால் மூன்றாண்டு வளர்ச்சியையும், யமன் உயிரையும் தர, முதலை 8 வயது பாலகனை உமிழ்ந்தது. இரு சிறுவர்களுக்கும் உபநயனம் நடத்தினார் சுந்தரர். இந்த அதிசயம் நடந்த தலம்தான் அவிநாசி. அக்குளக்கரையில் சுந்தரர் சந்நதியும் முதலை சிறுவனை கக்கும் சிலையும் உள்ளன.அவிநாசி, கோவையிலிருந்து 20 மைல் தூரத்தில் அமைந்துள்ளது
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.