வேளுக்குடி ஸ்ரீருத்ரகோடீஸ்வரர்














தாங்கிக்கொள்ளவே முடியவில்லை வசிஷ்டரால்! 'அடடா... எத்தனைப் பெரிய தவறு செய்துவிட்டோம்!’ என்று கண்கலங்கினார். 'ஸ்ரீராமரின் திருமணத்துக்கு மிகக் கவனமாகப் பார்த்துத்தானே முகூர்த்தத் தேதி குறித்துக் கொடுத்தோம். ஆனாலும், இப்படி ஆகிவிட்டதே..!’ என்று தவித்து மருகினார்.
முனிவர் பெருமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ''இது உங்களின் தவறல்ல. நீங்கள் சரியாகத்தான் தேதியும் நேரமும் குறித்துக் கொடுத்தீர்கள். ஆனால், எந்நேரமும் தர்ப்பைப் புல்லை வாயில் வைத்திருக்கிற சக்ரவாகப் பறவை, தாங்கள் அருளிய அட்சரத்தைப் பிழையாக உச்சரித்ததால் வந்த குழப்பம் இது. ஆகவே, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? சக்ரவாகப் பறவை செய்த தவற்றுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?'' எனச் சொல்லி, ஆறுதல்படுத்தினர்.

ஆனால் அவரது மனம், சமாதானம் ஆகவே இல்லை. 'பறவையே செய்திருந்தாலும், என் மீதுதான் தவறு. என்னுடைய தவத்தில்தான் ஏதோ கோளாறு!’ என்று சஞ்சலப்பட்ட வசிஷ்டர், அப்படியே க்ஷேத்திராடனம் புறப்பட்டார்.

வழியெங்கும் வனங்கள்; அழகிய தலங்கள். ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே சில காலம் தங்கியிருந்து, இறைவனை நினைத்து, தவத்தில் ஈடுபட்டார். இப்படியாக வந்த வசிஷ்டர், நெல்லி வனம் சூழ்ந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கிளம்ப யத்தனிக்கும்போது, 'இன்றைக்குச் சனிக்கிழமை. பிரதோஷமும்கூட! சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம். ஆகவே, இங்கு இந்த வனத்தில் ருத்ர ஜபம் செய்து, பிரதோஷ பூஜை செய்வாயாக!’ என அசரீரி ஒலித்தது. ஆடிப் போனார் வசிஷ்டர். 'என்ன பாக்கியம்... என்ன பாக்கியம்!’ என்று கண்கள் மூடி, சிவனாரைத் தொழுதார்.



அந்த நெல்லி வனத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதில் நீராடினார். கரைக்கு வந்தவர், கோடி முறை ருத்ர ஜபம் செய்வது எனத் தீர்மானித்து, ஜபத்தில் இறங்கினார். வேள்வியில் ஈடுபட்டார். சனிக்கிழமையும் பிரதோஷமும் கூடிய வேளையில், மனமுருக சிவனாரைப் பிரார்த்தனை செய்ததன் பலனாக, மனதில் இருந்த சஞ்சலங்கள் யாவும் மறைந்தன. மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வேள்வியையும், கோடி முறை ருத்ர ஜபத்தையும் சொல்லி நிறைவு செய்த வசிஷ்டருக்கு, அங்கே திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான் என்கிறது ஸ்தல புராணம்.

பின்னாளில், இந்தத் தலத்தைப் பற்றியும், கோடி முறை ருத்ர ஜபம் செய்து வசிஷ்டர் இங்கே வழிபட்டார் என்பதையும் அறிந்த மன்னன், இங்கே கோயில் எழுப்பினான். கோடி முறை ருத்ர ஜபம் செய்த தலம் என்பதால், இங்கே குடிகொண்டிருக்கிற சிவனாருக்கு, ஸ்ரீருத்ரகோடீஸ் வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. அதேபோல், வசிஷ்டர் வேள்வி செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு 'வேள்விக்குடி’ எனும் பெயர் வந்தது என்கிறது ஸ்தல புராணம்.

அதுமட்டுமா? கோயிலையும் அமைத்து, ஊரையும் உருவாக்கிக் கொடுத்த மன்னன், 'இந்த ஊரில் சதாசர்வ காலமும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும்; வேள்விகளும் யாகங்களும் அடிக்கடி நடக்கட்டும்’ எனும் நோக்கத்தில், சோழ தேசத்தின் அந்தணர்கள் சிலருக்கு இந்த ஊரை எழுதிக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வழங்கினான் என்கிறது ஸ்தல வரலாறு.

வேதங்களுக்கும் யாகங்களுக்கும் பெயர் பெற்று விளங்கிய வேள்விக்குடி, காலப்போக்கில் வேளுக்குடி என மருவியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த வேளுக்குடி கிராமத்தில், இன்றைக்கும் அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீருத்ரகோடீஸ்வரர்.



வேளுக்குடி ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலயத்தின் மகிமையை அறிந்து சென்றால், அங்கே அடுத்தடுத்து ஆச்சரியங்கள்; அற்புதங்கள்! இந்த ஆலயத்தின் பிரதோஷ வழிபாட்டில் மனம் லயித்த சாண்டில்ய முனிவர், பிறகு உலக மக்களுக்கு பிரதோஷ மகிமையை எடுத்துரைத்தார் என்கிறது ஸ்தல புராணம்.

இந்தக் கோயிலுக்கு ஏராளமான நிலங்களையும், ஆடு-மாடுகளையும் அள்ளித் தந்திருக்கின்றனர், மன்னர் பெருமக்கள். இரண்டாம் குலோத்துங்க சோழன், நெடுங்காலமாகத் தொழு நோயால் தவித்து வந்தான். 'வேள்விக்குடிக்குச் சென்று, தீர்த்தக் குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்; குணம் பெறுவாய்!’ என அசரீரி முழங்க... அதன்படி, இங்கு வந்து, குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்ய... தொழு நோய் நீங்கப் பெற்றான் என்கிறது கல்வெட்டு ஒன்று. பிறகென்ன... அந்த மன்னனும் இங்கு திருப்பணிகள் செய்துள்ளான்.

இத்தனை பெருமைகளை ஒருங்கே கொண்டிருக்கிற ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் கோயிலைத் தரிசிக்கச் சென்றால், பிரமாண்டத்தைத் தொலைத்துவிட்டு, இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்தபடி நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக் கிறார் ஸ்ரீருத்ரகோடீஸ்வரர். கோபுரத்தைக் காணோம்; மதிலின் பல பகுதிகளில் தென்படுகின்றன விரிசல்கள். சந்நிதிகள் உடைந்தும் விழுந்தும் இருக்க... சர்வ பாபங்களையும் நீக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தரும் பிரதோஷ மகிமை மிக்க ஆலயம், பரிதாபமாகக் காட்சி தருகிற கொடுமையை என்னவென்று சொல்வது?

மேற்குப் பார்த்த கோயில் விசேஷம் என்பார்கள். தமிழகத்தில் வைத்தீஸ்வரன்கோவில், திருக்கண்டியூர், திருப் பனந்தாள், லால்குடி, திருக்கடவூர், திருவானைக்காவல் எனப் புராதன- புராணப் பெருமைகள் கொண்ட ஆலயங் களைப்போல், வேளுக்குடி ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் கோயிலும் மேற்குப் பார்த்த திருக்கோயில்தான்! ஸ்வாமி, மேற்கு நோக்கிய நிலையில், மயானத்தைப் பார்த்தபடி காட்சி தருவதால், இங்கு வந்து ஐந்து பிரதோஷங்களில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; தீராத கடனும் தீரும்; குடும்பத்தில் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். யக்ஞபுரி, யாகபுரி, வேள்வி நகரம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தத் தலத்தில், வேள்வி நடப்பதும் ருத்ர ஜபம் சொல்லி வழிபடுவதும் அத்திப்பூத்தாற்போல் எப்போதாவதுதான் நிகழ்கிறதாம்! கும்பாபிஷேகம் நடைபெற்றுச் சுமார் 60 வருடங்களாகிவிட்டன என்கின்றனர் திருப்பணிக் கமிட்டியினர்.



அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீகோமளாம்பிகை. கருணையும் கனிவும் கொண்டு, திரிசூலம் ஏந்தி, தெற்குப் பார்த்தபடி காட்சி தரும் அழகே அழகு! ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகிய அனைவரும் அற்புதத் திருமேனியராக அருள்பாலிக்கும் தலம் இது. ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்கள்தானே அமர்ந்திருப்பார்கள்?! இங்கே, இந்தத் தலத்தில் சாண்டில்ய முனிவர் அமர்ந்திருக்கிறார் என்பது வேறெங்கும் காணக் கிடைக்காத ஒன்று.

வசிஷ்டரின் மனச் சஞ்சலத்தைப் போக்கிய திருத்தலம், வளமுடனும் அழகுடனும் திகழவேண்டாமா? சாண்டில்ய முனிவருக்குப் பிரதோஷ மகிமையை உணர்த்திய ஆலயத்தில், மீண்டும் பிரதோஷ பூஜை களைகட்ட வேண்டாமா? கோடி முறை ருத்ர ஜபம் செய்த இடத்தில், ருத்ர ஜபங்களின் அட்சரங்கள் எதிரொலிக்க வேண்டாமா?

இரண்டாம் குலோத்துங்க சோழனின் நோயைத் தீர்த்து வைத்த சிவாலயத்தின் அவலங்கள் என்றைக்குத் தீருமோ? நந்திதேவர் ஐந்து பிரதோஷங்கள் வழிபட்டுப் பலன் பெற்றது போல், இனி வழிபடப்போகிற வர்களும், பலன் அடையப்போகிறவர்களும் எவரோ? சதாசர்வ காலமும் வேத கோஷங்கள் கேட்ட, வேள்விப் புகைகளால் கிராமத்தில் நல்ல அதிர்வுகள் ஏற்பட்ட நிலை, என்றைக்கு வருமோ?

சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம்! அதேபோல், பிரதோஷ மகிமையை எடுத்துரைத்த இந்தக் கோயிலின் திருப்பணியில் ஈடுபட்டாலும், சர்வ பாபமும் விலகிப்போவது நிச்சயம்!

Comments