அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்





மூலவர் : திருவேங்கடமுடையான்
உற்சவர் : ஸ்ரீ நிவாஸன்
அம்மன்/தாயார் : அலமேலு
தல விருட்சம் : நெல்லி
தீர்த்தம் : ஸ்ரீநிவாச தீர்த்தம்
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாங்கோயில்
ஊர் : மேலத்திருவேங்கடநாதபுரம் .
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு



திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமை, பாரிவேட்டை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை- ஊஞ்சல் உற்சவம், பங்குனியில் கருடஉற்சவம்.

தல சிறப்பு:

திருப்பதியைப் போல அமைப்பில் ஒத்திருப்பதால் இத்தலம் "தென்திருப்பதி' என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. வெண்கற்களாலான குன்றின் மேல் ஸ்ரீநிவாஸன் அருள்பாலிக்கிறார். திருப்பதியில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாக ஓடுவது போல, இங்கே தாமிரபரணி நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாக ஓடுகிறது. இங்கு வீற்றிருக்கும் கருடாழ்வார் தனது கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் - 627 006, திருநெல்வேலி மாவட்டம் .

போன்: +91- 462 - 2341292, 2340075 97918 66946

பொது தகவல்:

மன்னர் கால கட்டடக்கலையை விளக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள இத்தலத்தில் பல கல்வெட்டுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.இங்கு பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.



பிரார்த்தனை

திருமணத்தடை, பிணிகள், பாவங்கள், நாகதோஷம் நீங்க, குழந்தைவரம் கிட்ட, நினைத்த செயல்கள் ஈடேற, வியாபாரம் செழிக்க, குடும்ப ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்தம்பத்திற்கு பூச்சட்டை சாற்றுதல், கருடசேவை, திருவோண நட்சத்திரத்தில் பாயாச நைவேத்யம் படைத்தல், முடிகாணிக்கை, துலாபாரம் மற்றும் திருவாபரணங்கள் செலுத்துதல்.

தலபெருமை:

பெருமாள் பூமிதேவியைக் காக்க போரிடச்செல்லும் போது, உலகையும், மக்களையும் காக்க தான் வைத்திருந்த ஆயுதங்களான சங்கு, சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு அவர் வரும்வரையில் உலகைக் காக்கும்படி பணித்துச் சென்றார். அதன்படி, சங்கு, சக்கரத்தைப் பெற்றுக்கொண்ட கருடாழ்வார் பெருமாள் திரும்பி வரும்வரையில் அவரது ஆயுதங்களுடன் உலகைக் காத்தார். இவ்வாறு, பெருமாள் தனது ஆயுதங்களைக் கொடுத்துச் சென்றதால் இங்கு வீற்றிருக்கும் கருடாழ்வார் தனது கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.திருப்பதியைப் போல அமைப்பில் ஒத்திருப்பதால் இத்தலம் "தென்திருப்பதி' என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. வடக்கே வெண்கற்களால் ஆன ஏழு மலைகளுடன், காளஹஸ்தி, கீழ் திருப்பதி உடன் திருப்பதி வெங்கடாஜலபதியாக ஸ்ரீநிவாஸன் குடிகொண்டிருப்பதைப்போல, இவ்விடத்திலும் தென்காளஹஸ்தி எனப்படும் சங்காணி கைலாசநாதர் கோயில், ஏழு மலைகளுக்கு ஒப்பான மலைகளுடன் திகழ்கிறது . வெண்கற்களாலான குன்றின் மேல் ஸ்ரீநிவாஸன் அருள்பாலிக்கிறார்.திருப்பதியில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியாக விழந்து ஆறாக ஓடுவது போல, இங்கே தாமிரபரணி நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாக ஓடுகிறது. திருப்பதியில் பல தீர்த்தங்களுடன் புண்ணிய தீர்த்தமாக புஷ்கரணி இருப்பது போல இங்கும் பல தீர்த்தங்களுடன் சீனிவாசக்கட்டம் என்னும் தீர்த்தம் உள்ளது.

குழந்தை வரம் : பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த வெங்கடப்பநாயக்க மன்னருக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. பல தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கியும் குழந்தை பாக்கியம் கிடைக்காத அவர், இத்தலத்திற்கு வந்தார். தாமிரபரணியில் நீராடி, சீனிவாச தீர்த்தக்கட்டத்தில் மூழ்கி எழுந்த போது கோயிலில் ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு படைத்து அவர்களின் பசியைப்போக்கினால் குழந்தைப்பேறு கிட்டும், என்று அசரீரிகேட்கப்பெற்றார். அதன்படி மன்னர் குழந்தைகளுக்கு உணவு படைத்து, ஸ்ரீநிவாஸன் என்ற அழகிய ஆண்குழந்தையைப் பெற்றார். குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்ற மன்னர் இக்கோயிலை பெரிய அளவில் கட்டி, காட்டை அழித்து, குடிநிலமாக மாற்றி தøது பெயரையே இவ்வூருக்கு சூட்டினார். அதனால் இவ்வூர் "திருவேங்கடநாதபுரம்' ஆனது.

தாமிரபரணியின் வட கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றுள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு 12 ஆழ்வார்களும் திருப்படிகளாக இருக்க விரும்பினார்களாம். கருவறைக்குச் செல்லும் திருப்படிகளாக அவர்கள் அமைந்துள்ளதாக ஐதீகம்.வரம் தரும்படியான கோலத்தில் சங்கு, சக்கரங்களுடன் அற்புதமான கோலத்தில் ஸ்ரீனிவாசன் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு முன்இடப்புறம் ஆஞ்சநேயர் காலை மடித்து இரண்டு கைகளை மேலே நோக்கியபடி வாகன கோலத்தில் காட்சிதருகிறார். இத்தலம், அமைப்பில் ஒத்திருப்பதால், அங்கு சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்தில் வந்து நிறைவேற்றுகின்றனர்.



தல வரலாறு:

பலநூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி "வைப்ராஜ்ஜியம்' என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான பைலர், ஸ்ரீநிவாஸப்பெருமாளை நினைத்து தவம் செய்தார். அங்கு பெருமாளின் திருவுருவமோ, சிலையோ ஏதுமில்லாததால் தன் மனதில் திருமாலை எண்ணிக்கொண்டே, கோடி மலர்களைத் தூவி வணங்கினார்.ஏழாம் நாளில் பெருமாளை எண்ணி அவர் அர்ச்சனை செய்த மலர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து மிகப்பெரும் ஜோதியாக வானில் உயரே எழுந்தன. ஜோதியின் நடுவே, காலடியில் தாமிரபரணி நதி தாய் வீற்றிருக்க, ஸ்ரீநிவாஸப்பெருமாள் எழுந்தருளி பைலருக்கு அருட்காட்சிதந்தார்.அவரது அருள்வடிவமான திருக்கோலத்தைக் கண்டு தரிசனம் செய்து ஆனந்தக் கூத்தாடிய பைலர் வடக்கே திருப்பதி வெங்கடாஜலபதியாக குடிகொண்டு அருள்வது போல இவ்விடத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு திருவருள் புரிய வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஸ்ரீநிவாஸர் ஏற்றுக்கொண்டார்.ஸ்ரீதேவி, பூதேவி, அலர்மேலுமங்கை சமேதராக ஸ்ரீ நிவாஸப் பெருமாள் இங்கேயே தங்கினார்.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு வீற்றிருக்கும் கருடாழ்வார் தனது கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.


இருப்பிடம் :

திருநெல்வேலி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து (ஜங்ஷன்) இருந்து 9 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :நெல்லை

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம்



தங்கும் வசதி :திருநெல்வேலி

ஹோட்டல் ஆர்யாஸ் போன்: +91--462-2339002

ஹோட்டல் ஜானகிராம் போன்: +91--462-2331941

ஹோட்டல் பரணி போன்: +91--462-2333235

ஹோட்டல் நயினார் போன்: +91--462-2339312

Comments

  1. வெங்கடேசப் பெருமாளுக்கு 12 ஆழ்வார்களும் திருப்படிகளாக இருக்க விரும்பினார்களாம். கருவறைக்குச் செல்லும் திருப்படிகளாக அவர்கள் அமைந்துள்ளதாக ஐதீகம்//
    அருமையான பகிர்வு .பாரட்டுக்கள்.

    ReplyDelete
  2. நானும் திரு நெல் வேலிதான் இந்தவிஷயம் எனக்கு புதிது. நன்றி.

    ReplyDelete

Post a Comment