திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெற்றோர் கவலையடைந்தனர். கவிராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய், சிவகாமி நமது பிள்ளை குருபரன், முருகன் கொடுத்த வரம். அவனால் தான் குழந்தைக்கு பேசும் ஆற்றலை தர முடியும். நாம் திருச்செந்தூர் சென்று அவனிடம் முறையிட்டு விரதம் இருப்போம். அவன் பார்த்து எது செய்தாலும் சரி என்றார். அதன்படி அவர்கள் குழந்தையுடன் திருச்செந்தூர் சென்றனர். கடலலைகள் கோயில் மதிற்சுவரில் அடித்து விளையாடியதை குருபரன் பார்த்து கொண்டிருந்தான். கடலுக்குள் இறங்கி அலைகளுடன் விளையாடினான். அந்த அலைகள் கரைகளில் மோதிய சப்தத்தில் ஓம், ஓம் என்ற மந்திர ஒலி கேட்டது. கவிராயரும், அவரது மனைவியும் அங்கேயே தங்கி விரதம் மேற்கொண்டனர். காலையில் கடலில் குளித்து, நாழிக்கிணற்றில் நீராடி முருகனை வழிபட்டு, ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். ஆனால், குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர், குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர்.
45வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். குழந்தை ஏக்கத்துடன் பெற்றோரை பார்த்தது. இதைக்கண்ட தகப்பனின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்ட, முருகா! என் தெய்வமே! இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிப்பாய். நீ கருணைக்கடல் ஆயிற்றே! இந்த குழந்தைக்கு மட்டும் கருணை காட்டாதது ஏன்? என மனமுறுகி பிரார்த்தித்தார். அவரது மனைவியும், சண்முகா! குழந்தை இல்லாமல் இருப்பது கொடுமைதான். அதைவிட கொடுமையானது ஊமைக்குழந்தையை வைத்திருப்பது இல்லையா? நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை கொடு. இந்தக்குழந்தை என்ன தவறு செய்தது? அதை ஏன் தண்டிக்கிறாய்? எங்கள் குழந்தையை காப்பாற்று, என கதறினாள். இந்த நிலையில் குருபரன் வாய்திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க, தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் அந்த பாலகன், கார்மேகம் கடும் மழை பொழிவது போல கவி மழை பொழியலானான். முருகனைப்பற்றிய பாடல்கள் அவன் வாயிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஒலித்தது. குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். தேனினும் இனிய குரலில் அவன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக விட்டார் குருபரர்.
குமரா! முருகா! உனது கருணையால் ஊமையும் பேசுவது மட்டுமில்லாமல், பெரும் கவிஞனும் ஆவான் என்பதை நிரூபித்துவிட்டாய். உனது கருணையே கருணை என உள்ளம் நெகிழ்ந்தனர் பெற்றோர். பெரும்கவியாக திகழ்ந்த குருபரர் பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை. அவர்களது ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை குமரகுருபர சுவாமிகள் என அழைத்தனர். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்றிருந்த போது, மடை திறந்த வெள்ளம் போல், மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலை பாடினார். அன்னையை சிறு குழந்தையாக பாவித்து, அவளது அழகு, அருள், ஆற்றல், திருவிளையாடல்கள் அனைத்தையும் பாடி நூலாக வடித்தார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார். இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது. முருகனின் திருக்கல்யாணம் நடக்கும் இந்த இனிய நாளில், அவரது திருப்பாதம் பணிந்துருகி நமக்கு வேண்டியதைக் கேட்போம். குமரகுருபரருக்கு அருளியதைப் போல நமக்கும் அருள்வான் அந்த ஆறுமுகன்.
Comments
Post a Comment