உண்மையான சந்தோஷம் எது?

ஆன்மிகத்தால் ஏற்படுவதுதான் ஒரு மனிதனின் வாழ்க்கை முன்னேற்றம். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் முதலாவதாக ஒரு மனிதன் தனக்குள் தோன்றும் பொறாமையை முற்றிலுமாக அகற்ற முழு முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் இந்த ஒரு குணம்தான் நம்மை பல்வேறு மோசமான விஷயங்களுக்கு விரைவாக அழைத்துப்போகிறது. பொறாமையில்தான் கோபம் உண்டாகிறது; பொய்கூறுதல் ஏற்படுகிறது; களவு போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன.

ஒப்பிட்டுப் பார்த்தல்தான் பொறாமையின் ஆரம்பம். தன்னுடைய சுக சௌகரியங்களோடு மற்றவருடைய சுக சௌகரியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்
போதுதான் பொறாமை ஏற்படுகிறது. என்னுடைய யோக்கியதைக்கு ஏற்ப எனக்கு கிடைத்திருக்கிறது என்ற எண்ணம் பலருக்கு வருவதில்லை. என்னுடைய யோக்கியதை அதிகம் என்ற நினைப்பு பலருக்கு இருக்கிறது.

‘‘அவரு கார் வாங்கிட்டாரா... நம்ம கூட
சுத்திகிட்டிருந்த ஆளுப்பா.’’
அந்த கார் வாங்கிய நபருக்கு இருக்கின்ற உழைப்பு, அவர் பட்ட அவஸ்தைகள், இழப்புகள் எதுவும் இவருக்கு ஞாபகம் வருவதேயில்லை. கார் மட்டுமே பளபளப்பாய் கண்ணில் தெரிகிறது.

‘‘அந்த நடிகருக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா? எங்கள் ஊரில் ஐந்து ரூபாய் காசுக்கு கடன்பட்டு ஓடி ஒளிந்து கொண்டிருந்தான். இன்றைக்கு நூறு பெண்களோடு டான்ஸ் ஆடுகிறான்” என்று பொருமுவதில் எந்த லாபமுமில்லை. கொட்டகையில் உட்கார்ந்து பார்ப்பவருக்குத்தான் அந்த ஆட்டமும், பெண்களும் பரவசமாய் தெரியும். விளக்கு வெளிச்சத்தில் ஜிகினா கழுத்தறுக்க, கிரீடம் தலையழுத்த, பாடிக்கொண்டே நடனமாடுவது மிகப்பெரிய வேதனை. அந்தப் சிரிப்பு பொய். நூறு பெண்களில் எவர் முகமும் மனதில் தங்காது. எவரோடும் மனம் ஈடுபடாது. அருகே எவர் வந்தாலும் வியர்வை நாற்றம்தான் முகத்தைத் தாக்கும். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் அந்த நடிகர்கள் ஆடவும் பாடவும் சிரிக்கவும் செய்கிறார்கள். சினிமா என்ற மாய உலகில் வெற்றிபெற மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பல சுகங்களை கட்டாயமாக இழக்க வேண்டியிருக்கிறது. சம்பாதித்த காரில் அந்த நடிகர் சுகப்பட்டது மிகவும் குறைவு. ஜெயித்தால் பாராட்டுவார்கள். தோற்றுவிட்டால் மிகக் கேவலமாக பேசுவார்கள். அந்தக் கேவலம் தாங்காமல்தான் அந்த நடிகர் பயந்து பயந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

விளையாட்டு வீரர்களைப் பற்றியும் இப்படியொரு ஆற்றாமை இருக்கிறது. முப்பது செகண்ட்டுக்கு ஆறுகோடி ரூபா வாங்கியிருக்கிறான். இடுப்புல கைய வச்சுகினு விளம்பரத்ல நாலு வார்த்தை பேசறான். அதுக்கு நாலு கோடி ரூபா... மட்டைப் பந்து முதுகில் பட்ட அடி. அந்த வலி யாருக்குத் தெரியும்? பட்டை உரியும் வெயிலில் மட்டை பிடித்து நிற்கின்ற வெப்பம் எப்படிப் புரியும்? ஜெயித்தால் கட்டிப் பிடித்துக் கொண்டாடுவார்கள். தோளில் வைத்துக் கூத்தாடுவார்கள். தோற்றுப்போனால் ‘‘பொம்பளை பின்னாடி சுத்தறாண்டா. இவனால இந்தியாவுக்கே அவமானம்” என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருக்கும்போது வயிற்றில் ஏற்படும் கலவரத்தை யாரால் புரிந்துகொள்ள முடியும்? இப்படி அணு அணுவாக அனுபவித்து தாண்டி வெற்றி வாகை சூடியதற்குத்தான் அந்த சம்பளம். அந்தப் புகழ். எல்லா பத்திரிகையிலும் வெளியாகும் அந்தப் புகைப்படம்.
ஆனால், சாதாரண மனிதரின் சந்தோஷம் மிக உண்மையானது. ‘‘என்ன திடீர்னு எனக்குப் புடவை” &மனைவி பல் தெரிய சிரிப்பாள்.

‘‘மூணு புடவை பார்த்தேன். அதுல இது ரொம்ப நல்லாயிருந்தது. இன்னொன்னும் நல்லாயிருந்தது. ஆனா ரெண்டு எப்படி வாங்கறதுன்னு விட்டுட்டு
வந்துட்டேன்”.‘‘அது என்ன கலர்?”விட்டுப்போன புடவையை மனைவி கேட்க, ‘‘இதான் இந்த கலர்தான்” என்று இன்னொரு புடவை எடுத்துக்கொடுக்க, ‘‘ரெண்டு புடவையா... ரெண்டும் எனக்கா!” என்று மனைவி வாய் பிளப்பாள்.

அறுநூறும் அறுநூறும், ஆயிரத்து இருநூறு. அந்த காசுக்கு மனைவி என்ற உலகத்தையே வாங்கலாம். அவர் வழங்கிய அன்பில் உலகத்தையே மறந்து உறங்கலாம். பத்துக்கு பன்னிரெண்டு ஹாலில் சாதாரண பிரம்பு நாற்காலியில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொள்ளலாம். அன்பு என்பது காசு அல்ல. மக்கள் கூட்டமல்ல. உயர்ந்த மேடையல்ல. பளபளப்பான வாகனங்கள் அல்ல. அன்பு என்பது உண்மையாய் வெளிப்படுத்துவது. தென்றல் காற்றுபோல உரசி விட்டுப்போவது. பூவின் மணம்போல மூக்கை நெருடுவது.

சந்திரன் உதயம்போல குளுமையானது. அன்பை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கிறபோது எதற்காக மற்றவரோடு ஒப்பிட்டுக் கொண்டு பொறாமை படவேண்டும்? பொறாமை உடனடியாக மனோநிலையை தாக்குகிறது. மனோநிலையை தாக்கியதால் உடம்பு சிதிலப்படுகிறது. இதனால் மேலும் மனோநிலை தாழ்வடைகிறது.

பொறமையை தடுக்க என்ன செய்யலாம்? இதற்கும் மந்திர ஜபம் உதவி செய்கிறது. சந்திரனுடைய காயத்ரியை சொல்கிறபோது மனம் குளுமை அடையும். புதனுடைய காயத்ரியை சொல்கிறபோது மனம் தெளிவடையும். குரு காயத்ரியை சொல்கிறபோது நல்ல வழி பிறக்கும் என்று விதவிதமாக காயத்ரி ஜபங்களும், மூல மந்திர ஜபங்களும் இந்து மதம் என்று அழைக்கப்படும் சநாதன தர்மத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

உடம்பினுடைய நாடியின் சப்தத்தை உள்வாங்கி அதை பீஜாட்சரமாக மந்திர வரியில் சொருகி
வைத்திருக்கிறார்கள்.சௌஹு என்கிற சப்தம் இதயத்தோடு சம்பந்தமானது. ஹும் என்ற சப்தம் தொண்டைக் குழிக்கு சம்பந்தமானது. ரும் என்ற சப்தம் மூளைக்கு சம்பந்தமானது. ‘ஐம் க்லீம் சௌஹு சௌஹு க்லீம் ஐம் ஐம் க்லீம் சௌஹு’ என்று ஒரு மூலமந்திரம் இருக்கிறது. இதற்கு பாலா திரிபுரசுந்தரி என்று பெயர். இதைச் சொல்லும்போது மனம் நிச்சயம் அமைதியை அடையும். படபடப்பு குறையும். ரத்த அழுத்தம் லகுவாகும். நாடி சுத்தமாகும். இது ஆரம்பகால மந்திரம். இதைச் சொல்லிச் சொல்லி மனம் பக்குவப்பட்ட பிறகு பல்வேறு நாடிகளை தேர்ந்தெடுத்துப் போகலாம். பல்வேறு அவஸ்தைகளை வேறோடு களையலாம்.

மந்திர ஜபத்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு காசு கொட்டுமா? கொட்டும். கொட்ட வேண்டும். கொட்டினால்தான் அது மந்திரஜபம். கொட்டிய
சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு.சங்கரன் என்கின்ற பதிமூன்று வயது பிள்ளையால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்ய முடியாதா? நிச்சயம் முடியும். நீங்கள் மந்திரம் சொன்னால் உங்கள் வீட்டு கூரையை பிய்த்துக்கொண்டு தங்கக் காசுகள் கொட்டும். ஆனால், அந்த சங்கரன் என்கிற சந்நியாசக் குழந்தை ஏன் தனக்கென்று ஒரு மூட்டை காசுகளை மந்திரம் சொல்லி வாங்கிக் கொள்ளவில்லை?மந்திர பலம் போதும். மற்ற எவையும் தேவையில்லை என்று அந்தக் குழந்தை தெளிவாக இருந்தது. மந்திரஜபம் கிடைத்து விட்டால் வேறு எதுவும் தேவையிருக்காது.

தேவையில்லாதபோது அடுத்தவைப் பற்றி ஒப்பீடு பண்ணத் தோன்றாது. ஒப்பீடு இல்லாதபோது பொறாமை வராது. பொறாமை இல்லாதபோது பொய், கோள் சொல்லல், கோபப்படுதல் எதுவுமிருக்காது. மனம் அமைதியாக இருக்கும்.‘‘எனக்கு இன்னிக்கு லாட்டரியில் ஒருகோடி ரூபா விழுந்தது” என்றால், ‘‘அப்படியா வாழ்க... வாழ்க... நல்லா செலவு பண்ணு. நிறைய தானம் பண்ணு. எல்லாருக்கும் கொடு” என்று ஆசிர்வதிக்கத் தோன்றும்.

என் கையிலே வில் இருக்கிறது. அம்புறாத் துணி முழுவதும் அஸ்திரங்கள் இருக்கின்றன. வழியிலே என்ன பயம்? மந்திர ஜபங்கள் நிறைய கற்றவருக்கு, அதை எப்படி வளைத்துச் சொல்ல வேண்டும் என்று தெரிந்தவருக்கு, வாழ்க்கை என்னும் தனிப்பாதையில் எந்த பயமும் இல்லை. அவர் துள்ளலோடு சந்தோஷமாக பயணப்படுவார். மற்றவருக்கு உதவி செய்வார். உதவி செய்வதிலேயே நிறைவு காண்பார். உதவி செய்தேன் என்றுகூட சொல்லிக்கொள்ளாமல் அடுத்தடுத்து உதவி செய்துவிட்டு நகர்ந்து கொண்டே போவார். அவரைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட முடியுமா? முடியாது. மாறாய் வியப்பார்கள்.

Comments

  1. அருமையான பதிவு.
    உங்கள் பதிவிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment