பக்தி என்ற மனோநிலை

ஆன்மிக ரீதியான சில சந்தேகங்கள், மரபுவழி வந்த பழக்க வழக்கங்கள், ஆசார அனுஷ்டானங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருப்பது போன்ற ஒரு தோற்றம் கிடைக்கிறது. எல்லா ஆசாரங்களும் அகந்தை கொண்டவை; அகந்தையை வளர்க்க வழி வகுப்பவை. ‘மேல படாத, நான் மடி’ என்று ஆரம்பித்து ‘என் பூஜையை யாரும் பார்க்கக்கூடாது. அது ரகசியமானது’ என்று கதவு சார்த்திக் கொள்வது வரை அகந்தையின் விஸ்வரூபம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லாம் அறிந்த ஞானிகள் இப்படி வாழ்ந்ததேயில்லை. சுத்தம், தனிமை, மௌனம் என்ற பக்திக்கான விஷயத்தை உரக்க முழங்கும் கூச்சலாக மாற்றிவிட்டார்கள். பக்தி காணாமல் போய், ஆசார அலட்டல் மட்டுமே நிற்கிறது. அகந்தை
மட்டுமே தலைவிரித்தாடுகிறது.கொய்த மலர் குடுமியில், அபிஷேக நீர் வாயில், புத்தம் புதிய மாமிசம் கையில், உடம்பெல்லாம் புழுதி, வியர்வை & திண்ணன் என்கிற வேடன் மலையேறி வந்து வாய்நீரை உமிழ்ந்து மாமிசத்தை படைத்து, தான் சூடியுள்ள பூக்களை எடுத்து சிவலிங்கத்தின் மீது சுற்றி, ‘உண்ணுக ஐயனே, உண்ணுக. பசியாகவும், தனியாகவும் இருந்து களைத்திருக்கிறீர்கள். நானிருக்கிறேன், உண்ணுக’ என்று வேண்டுகிறான்.இறைவன் உண்ணவில்லை. மாறாக கண்ணிலிருந்து ரத்தம் வருகிறது. இந்தப் புல், அந்த இலை என்று ஏதேதோ பிழிந்து வைத்தியம் செய்து பார்க்கிறான். நிற்கவில்லை. என்னமோ உள்ளே தோன்றுகிறது. கண்ணுக்குக் கண்! தன் கண்ணை எடுத்து அப்பினால் ரத்தம் நிற்குமென்று தோன்றுகிறது. தோன்றியவுடனேயே கூரிய அம்பை எடுத்து தன் கண்ணில் பதித்து கண்ணைத் தோண்டி எடுத்து குருதி பெருகிய இறைவன் கண்ணில் வைத்து விடுகிறான். ரத்தம் நின்று விடுகிறது. ஆனால், அடுத்தக் கண்ணில் ரத்தம் வருகிறது. ‘அதனாலென்ன, எனக்குதான் இன்னொரு கண் இருக்கிறதே’ என்று மறுபடியும் அம்பை எடுத்து, அடுத்தக் கண்ணை அறிவதற்காக செருப்பணிந்த காலை அந்த இடத்தில் அடையாளத்துக்காக வைத்துக்கொண்டு இன்னொரு கண்ணையும் தோண்ட முயற்சிக்க, சிவலிங்கத்திலிருந்து ஒரு கை வெளிப்பட்டு ‘நில்லு கண்ணப்ப’ என்று கைப்பிடித்துத் தடுக்கிறது.
வேடர் திண்ணனை இறைவன் தொட்டு தடுத்து கண்ணப்ப என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில், கண்ணப்பர் ஓர் அற்புதம். அந்த கண்ணப்பருக்கு எந்த ஆசாரமும் தெரியாது. அந்த வேடரின் பக்திக்கு முன்பு ஆசார அனுஷ்டானம் திகைத்துப்போய் நிற்கிறது. என்னால் தன் கண்ணை குத்தி இப்படி அப்ப முடியுமா என்று பயந்துபோய் நிற்கிறது. பக்தி என்கிற இடத்திற்கு அழைத்துப் போகத்தான் ஆசார அனுஷ்டானங்கள் உதவி செய்ய வேண்டும். மாறாய் அது தனக்கும் பக்தியில்லாமல், அடுத்தவர் மீதும் அன்பில்லாமல் ஒரு குரூரமான தோற்றமாக மாறிவிடுகிறது.
வேடன் படைத்த மாமிசத்தை அருவறுப்போடு அப்புறப்படுத்திவிட்டு, வில்வத்தால் அந்தணர் பூஜிக்கிறார். அந்தணர் பூஜை செய்த வில்வத்தையெல்லாம், ‘இதென்ன குப்பை, யார் போட்டது’ என்று கடிந்துகொண்டு அப்புறப்படுத்திவிட்டு திண்ணன் மறுபடியும் மாமிசம் படைக்கிறான். இப்படி மாறி மாறி பலநாள் கூத்து நடக்கிறது. எது சரி என்று இறைவனே தீர்ப்பு வழங்குகிறான். அவனே கை நீட்டி திண்ணன் என்ற வேடனை தடுத்து, ‘கண்ணப்ப’ என்று கூப்பிடுகிறான். பக்தியே முழு முதல் விஷயம். பக்தியில்தான் தன் கண்ணை தானே குத்தி தானம் செய்ய முடியும். பக்தியில்தான் ‘தன்னை’ப் பிடுங்கி எடுத்து இறைவன் முன்பு நிவேதனம் செய்ய முடியும். தான் என்ற அகங்காரத்தை ஆசாரங்கள் வளர்க்க, பக்தி ‘தன்னை’ அழிக்கின்ற விஷயத்தை சொல்லித்
தருகிறது. பக்தி என்பது ஒரு பயிற்சி அல்ல. செய்
முறைகளின் குவியல் அல்ல. இடது, வலது, மேல், கீழ் என்ற வாழ்க்கை முறை அல்ல. அதுவொரு மனோ நிலை. தானற்ற இடம். நானே அது என்று ஒன்றான சுகம். இறைவனுடைய கண், தன்னுடைய கண்; தன்னுடைய கண், இறைவனுடைய கண் என்று தானும் இறைவனும் ஒன்றான இடம். அந்த மனோநிலையை யோசிக்க யோசிக்க உடம்பு நடுங்குகிறது. ஆனால் அந்த மனோநிலைக்கு வரவிடாமல் ஆசார அகந்தை தடுக்கிறது.
பூஜை சம்பிரதாயங்களைப் பற்றி ஜனங்கள் கேள்வி கேட்பதும் அதற்கு பலர் பல பத்திரிகையில் பலவிதமான பதில் சொல்வதும் இறுதியில் குழப்பம்தான் ஏற்படுகிறது. பக்தி என்பது சத்தியத்தின் வாசல். பக்தி என்பது குழைந்து, கனிந்து, பரமானந்தமாக நிற்கின்ற நிலை. அப்படிப்பட்ட நிலையில்தான் இறை தரிசனம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. வாடிய மலர்களை, வாயில் தேக்கி வைத்த நீரை, கடவுளுக்கென்று அந்த வேடன் கொடுத்ததை படிக்கும்போது குளிர்சாதனப் பெட்டிப் பூகூட அல்ல. வெறும் குப்பைகளை பூ என்று நினைத்துப் போட்டாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்றுதான் தோன்றுகிறது. கொடுக்கின்ற பொருள் முக்கியமல்ல. கொடுக்கின்ற மனோநிலை முக்கியம். பூ முக்கியமல்ல. அந்த மனம் முக்கியம்.
ஆசாரங்கள் காலத்திற்குக் காலம் மாறுபடுபவை. குடுமி வைத்துக் கொண்டவருக்குத்தான் முதல் பந்தி என்று சொன்ன காலம் இப்போது இல்லை.
குடுமியைவிட கிராப்பு சௌகரியம். வேட்டியைவிட பேண்ட் சௌகரியம். ஆந்திராவுக்கு அந்தப்பக்கம் போனால் குளிர்காலத்தில் யார் பூசகரோ, அவர் அரைக்கால் சட்டை, ஸ்வெட்டர், மேலே சால்வை, தலையில் குல்லா போட்டுக்கொண்டு கருவறையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை காணலாம். ‘வந்து சிவலிங்கத்தை கட்டிக்கொள்’ என்று கூப்பிட்டு தட்சிணை கேட்பார்கள். நெற்றியில் குங்குமம் வைப்பார்கள். தென்னிந்தியாவில் இவை அனைத்துமே தவறு. காரணம், இது வெயில் தேசம். மார்கழியிலும் இங்கு இடுப்பு வேட்டியும், மேல் துண்டுமாகவும் நிற்க முடியும். இமயமலை அடிவாரத்தில் ஒரு பூசகரை இப்படி நிற்க சொன்னால் அவர் உடனே சிவலோகப் பதவி
அடைவார். எனவே, இங்கு ஆசாரம் மாறுகிறது.
‘சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு கேள்வி கேட்கற. சாஸ்திரம் இதைத்தான் சொல்றது. மத்தபடிக்கு நீ என்னவோ பண்ணித் தொலை’ என்று பதில் சொல்வதற்கு பதில் அகங்காரத்தை சொல்லாது இருக்கலாம். உண்மையை விளக்காது இருப்பதற்குப் பதில் பொய் பேசாதிருக்கலாம். ஆசார, அனுஷ்டானங்களை தெரிந்து கொள்வதே தவறா? அனுஷ்டிப்பது குற்றமா? இல்லை. ஒருபொழுதும் இல்லை. என்ன செய்கிறோம் என்று உணர்ந்து செய்யுங்கள். எந்த பூஜை செய்தாலும் எப்படிச் செய்தாலும் மனம் ஒன்றி செய்யுங்கள்.
‘‘ஒரு அமாவாசை தர்ப்பணம் விடறதுல்ல. எங்க இருந்தாலும் செய்துடறது’’ என்பது வெறும் கர்வம். இது அடுத்தவருக்கு சொல்லிக் கொள்வதற்காக செய்வதல்ல. நம் முன்னோர்களை நினைத்து உருகி உருகி செய்வது. நான் இன்று வளர்ந்து நிற்பதற்கு நீதானே காரணம் என்று நன்றியில் நனைவது. சிராத்தம் என்பது சிரத்தையாகச் செய்வது. தர்ப்பைப் புல்லைப் போட்டு ‘இதமாசனம்’ என்று சொல்கிறபோது அங்கே இறந்துபோன முன்னோர்கள் அமர்வதை மனக்கண்ணில் காண வேண்டும்.
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனிதே வருக...
&என்று பாடுகிறபோது முருகன் வருகின்ற அடியோசை, சிலம்பொலி காதில் கேட்க வேண்டும்.
நான் நாற்பது தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கிறேன். கடையிலும் பூக்கள் வாங்குகிறேன். எவை எந்தப்பூ என்று பார்ப்பதில்லை. மனம் ஒருமைப்படுத்தவே பூக்களை உபயோகிக்கிறேன்.பூர்வஜென்ம புண்ணியமிது உன்னைக் கண்டது; இது போன ஜென்ம வாசனையில் அருகில் வந்தது...&என்று பாடுகிறபோது என் குருவின் நினைப்பில் கண்ணில் நீர் கட்டுகிறது. நல்ல மனைவி, நல்ல தாய் தகப்பன், நல்ல பிள்ளைகளோடு நல்ல குரு எவ்வளவு பெரிய நிம்மதி என்று மனம் உணருகிறது. நாம் எது செய்தாலும் உண்மையை நோக்கி அடிவைக்க அது உதவி செய்ய வேண்டும். இதுவே முக்கியம்.

Comments