அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில்









மூலவர் : மிளகு பிள்ளையார்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சேரன்மகாதேவி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு


திருவிழா:

விநாயகர் சதுர்த்தி

தல சிறப்பு:

மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும்.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில் சேரன்மகாதேவி - 627414 திருநெல்வேலி மாவட்டம்



பொது தகவல்:


"காஞ்சிப்பெரியவர்" தன் (தெய்வத்தின் குரல்) நூலில், "ப்ராசீன லேகமாலா என்ற பழைய சிலாசனம், தாமிர சாசனம் முதலானவைகளைத் தொகுத்து மும்பையிலுள்ள நிர்ணயஸாகர் அச்சுக்கூடத்தார் தங்களுடைய "காவ்யமாலா' என்ற தொகுப்பில் இந்த கால்வாய் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர்" என சொல்லி உள்ளார்.

1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ளது. அளவில் மிகச்சிறிய, இந்தக் கோயிலை அரசு கையகப்படுத்தி திருப்பணிகளை மேற்கொண்டால், புகழ் மிக்க தேச ஒற்றுமை கோயில் காப்பாற்றப்படும்.




பிரார்த்தனை


சேரன்மகாதேவி பகுதி விவசாய சங்கத்தினர், மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்து வழிபாடு செய்கின்றனர்.



நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

தலபெருமை:


காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் ஒரு மாநிலத்தவர். முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் இன்னொரு மாநிலத்தவர். ஒரே தேசத்துக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே "கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய "மிளகு பிள்ளையார்' கோயில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது.



தல வரலாறு:


கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில், "மன்னா! நீ உன் உயரத்துக்கு ஒரு எள் பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம்பருப்பு அளவுள்ள மாணிக்கக் கற்களைக் கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாகக் கொடுத்து விடு. அதன்பிறகு, வியாதி அந்த பிராமணனைச் சேர்ந்து விடும்," என ஏதோ ஒரு தெய்வத்தின் குரலைக் கேட்டார் மன்னர். அதன்படியே பொம்மை செய்தார். ஆனால், எந்த பிராமணரும் அதை வாங்க முன்வரவில்லை. இதை கர்நாடகாவிலுள்ள பிரம்மச்சாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டு வந்து, வாங்கிக் கொண்டான்.

பொம்மை பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் அது உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மச்சாரி செய்திருந்த காயத்ரியின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி கொடுத்து விட்டால், வியாதி உன்னை அண்டாது என சொன்னது. பிரம்மச்சாரியும் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனது கஷ்டப்பட்டது.

வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி, தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்து விட்டோமே என கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க மணிகளை பொதுநலன் கருதி செலவழிக்க முடிவெடுத்தான். என்ன நன்மை செய்யலாம் என முடிவெடுக்க முடியவில்லை. எனவே, அவன் பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான்.

அதற்கு முன்னதாக பொம்மையை அம்பாசமுத்திரம் என்ற ஊரில் வசித்த ஒரு நம்பிக்கையுள்ள அந்தணரிடம் கொடுத்து, தான் அகத்தியரை சந்தித்து விட்டு திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி விட்டான்.

தன்னைச் சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான் என்பதை உணர்ந்த அகத்தியர், அவனுக்கு பல சோதனைகளையும், தடைகளையும் கொடுத்தார். அத்தனையையும் மீறி, அவன் அகத்தியரை அடைந்து விட்டான். கடும் பிரயத்தனம் செய்து தன்னைச் சந்தித்த அந்த பிரம்மச்சாரியிடம், அவன் கேட்டதைத் தருவதாகச் சொன்னார் அகத்தியர்.

கன்னடன் விஷயத்தைச் சொன்னான்.

அகத்தியர் அவனிடம், "மகனே! நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். (அதனால் தான் அவர் காவிரியையும், தாமிரபரணியையும் நமக்கு தந்தார் போலும்) நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் குறித்துக் கொள். அப்படியே கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு (மடை) அமை. அது கோமியம் (சிறுநீர்) பெய்யும் இடங்களில் மறுகால் அமை. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு," என்றார்.

பின்னர், தன் பொம்மையைப் பெற இளைஞன் அந்தணரிடம் வந்த போது, அவர் மணிகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாக துவரம்பருப்பை உள்ளே போட்டு கொடுத்து விட்டார். தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கன்னடன், ராஜாவிடம் ஓடினான். தன்னைக் குணப்படுத்திய இளைஞனின் உயர்ந்த நோக்கத்தை அறிந்த ராஜா, அந்தணரை ஒரு சிவாலயத்தில் சத்தியம் செய்யச் சொன்னார். அவர் பொய் சத்தியம் செய்ததால், எரிந்து போனார்.

பின்னர், தன் மாணிக்கங்களை மீட்ட இளைஞன், பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. அப்போது சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகள் கேரளத்தில் இருந்தன. அகத்தியரே அந்தப் பசுவாக மாறி வந்து நின்றதாகவும் கருத்துண்டு. அது சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும், கடல் போல பரந்து கிடக்கிறது இந்த ஏரி. மக்களுக்காக நல்லது செய்பவர்கள் தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை தெரியவில்லை. எனவே அவனது மொழியின் பெயரால் "கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்து விட்டனர். அந்த இளைஞன் கால்வாயை வெட்டியதும், அதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே மூன்றாண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் காய்ந்து விட்டது. உடனே, அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான். மழை கொட்டித் தீர்த்தது. இப்போதும், சேரன்மகாதேவி பகுதி விவசாய சங்கத்தினர், மழை இல்லாத காலங்களில், இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.

இருப்பிடம் :
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் ரோட்டில் 16 கி.மீ., தூரத்தில் சேரன்மகாதேவி உள்ளது. பஸ்ஸ்டாண்டை ஒட்டி ஓடும் கன்னடியன் கால்வாய் கரையில் இந்தக் கோயில் உள்ளது. தற்போது பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :சேரன்மகாதேவி,திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம்,

தங்கும் வசதி :திருநெல்வேலி

ஓட்டல் ஆர்யாஸ்:போன்:+914622339002

ஓட்டல் ஜானகிராம்:போன்: +914622331941

ஓட்டல் பரணி போன்: +914622333235

ஓட்டல் நயினார் போன்; +914622339312

Comments