அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்







மூலவர் : இம்மையிலும் நன்மை தருவார்

உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : மத்தியபுரி நாயகி
தல விருட்சம் : தசதள வில்வம்
தீர்த்தம் : ஸ்ரீபுஷ்கரிணி
ஆகமம்/பூஜை : காரணாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : மதுரையம்பதி
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி. மதுரை -625 001. மதுரை மாவட்டம்.

போன்:

+91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311

பொது தகவல்:
இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

பைரவருக்கு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள். இத்தல விநாயகரின் திருநாமம் சித்தி விநாயகர்.


பிரார்த்தனை

செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கவும், தலைமைப் பொறுப்புள்ள பதவி, கவுரவமான வேலை கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

தலபெருமை:
அதிசய சிவலிங்கம்: எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு.

மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

கல் ஸ்ரீசக்ரம்: அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.

பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

வருடத்திற்கு 54 அபிஷேகம்!: இக்கோயிலில் பூஜையின்போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.
இங்கு சிவனுக்கு காலை 7.30 மணிக்கு விளாபூஜையின்போது தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.

மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

"சித்தர்' சிவன்: மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ரா பவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

காரமான புளியோதரை: கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் தரிசிக்கலாம. உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று இவர்களுக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்: பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.

முருகனுக்கு பூக்குழி: அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

"பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.

இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சிவன், அம்பிகைக்கு ஊர் பெயர் அடிப்படையில் "மதுரநாயகர்', "மதுரநாயகி' என்றும் பெயருண்டு.

பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.

குரு தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:
மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்த கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.

இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.


சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.
இருப்பிடம் :
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள மேலமாசிவீதியில் இக்கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
மதுரை

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை

தங்கும் வசதி :
மதுரை

பாண்டியன் ஹோட்டல்
+91 - 452 - 435 6789

ஹோட்டல் சங்கம்
+91 - 452 - 253 7531, 424 4555

ஹோட்டல் தமிழ்நாடு
+91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)

ஹோட்டல் சுப்ரீம்
+91 - 452 - 234 3151, 301 2222

ஹோட்டல் பிரேம்நிவாஸ்
+91 - 452 - 234 2532 - 3, 437 8787

ஹோட்டல் பார்க் பிளாசா
+91 - 452 - 301 1111, 234 2112

ஹோட்டல் நார்த்கேட்
+91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)

ஹோட்டல் கீர்த்தி
+91 - 452 - 437 7788, 437 8899

ஹோட்டல் கோல்டன் பார்க்
+91 - 452 - 235 0863

ஹோட்டல் ரத்னா ரெசிடன்சி
+91 - 452 - 437 0441 - 2, 437 4444

Comments