அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்
























மூலவர் : திருஆவினன்குடி மூலவர்-குழந்தை வேலாயுதர்.
மலைக்கோயில் மூலவர் - தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி
தல விருட்சம் : நெல்லி மரம்
தீர்த்தம் : சண்முக நதி
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஆவினன்குடி
ஊர் : பழநி
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்

திருப்புகழ்



திமிர வுததி யனைய நரகசெனன மதனில் விடுவாயேல் -

செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு மணுகாதே;

அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் -

அருள தருளி யெனையு மனதொடடிமை கொளவும் வரவேணும்;

சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருள மிகவேநீள் -

சலதி யலற நெடிய பதலைதகர அயிலை விடுவோனே;

வெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன் மருகோனே -

மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் பெருமாளே.

-அருணகிரிநாதர்


திருவிழா:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

திறக்கும் நேரம்:


திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்

போன்:

+91-4545 - 242 293, 242 236, 242 493.

பொது தகவல்:


திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு



பிரார்த்தனை

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்


நேர்த்திக்கடன்:

முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன்

தலபெருமை:



தண்டாயுதபாணி சிறப்பு: விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடஅடைக்கலமாவார்கள்.இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்."தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.

சித்தர் போகர் : இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர்.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.

முருகன் கையில் அருணகிரியார்!:மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.

தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., துõரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், "திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம்.இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டுமும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்: பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

முதல் வணக்கம் இடும்பனுக்கே...!: தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.

இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி துõக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தைப்பூச விழா சிறப்பு: தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.

தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.

பங்குதாரராக முருகப்பெருமான் : மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர்.தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம்.

அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார்

தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம்.

அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம்.

தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது.

பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது.

மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.

தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான்.

பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது.

1300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன.புராண காலத்தலும்,சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம். செலுத்துகின்றனர்.



தல வரலாறு:


நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், "குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், "பழம் நீ' (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், "பழநி' என மருவியது.






சிறப்பம்சம்:



விஞ்ஞானம் அடிப்படையில்: நவபாஷாண மூர்த்தி : மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் எனும் மூலிகை கலவையால் ஆனது. சிலை உயிர்ப்புள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.சுவாமியின் மீது பூசி எடுக்கப்படும் ராக்கால சந்தனமும், கவுபீக தீர்த்தமும் மிகவும் அபூர்வ மருத்துவ குணம் கொண்டவை. இவர் கையில் உள்ள தண்டம் மிக்க அருள் வாய்ந்தது.






இருப்பிடம் :
திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ., மதுரையிலிருந்து 120 கி.மீ., கோவையிலி ருந்து 115 கி.மீ. துõரத்தில் பழநி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
பழநி, திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை,கோயம்புத்தூர்

தங்கும் வசதி :
பழநி
பழநி தேவஸ்தானம் தண்டபாணி நிலையம்
+914545 242 325 பழநி சுபம்
+914545 241 672 நியூ திருப்பூர் லாட்ஜ்
+914545 242 303 ஹோட்டல் வேல் கோர்ட்
+914545 247 770 சண்முகானந்த பவன்
+914545 242 267 ஹோட்டல் கண்பத்
+914545 242 294 ஹோட்டல் ராஜலட்சுமி
+914545 243 313





போகர் சித்தர் கோயில் மேல்தோற்றம்


குழந்தை வேலாயுதர் குறவடிவேலர்


மலைக்கோயில் முருகன் ராஜஅலங்காரம்
பழநி மலைக்கோயில்


புராண சிற்ப ஓவியம் சர்ப்பவிநாயர்


உற்சவர் முருகன்


அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில்


அருள்மிகு இடும்பன் திருக்கோயில்


அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்


அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்


அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில்

இருப்பிடம் :
திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ., மதுரையிலிருந்து 120 கி.மீ., கோவையிலி ருந்து 115 கி.மீ. துõரத்தில் பழநி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
பழநி, திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை,கோயம்புத்தூர்

தங்கும் வசதி :
பழநி

பழநி தேவஸ்தானம் தண்டபாணி நிலையம்
+914545 242 325

பழநி சுபம்
+914545 241 672

நியூ திருப்பூர் லாட்ஜ்
+914545 242 303

ஹோட்டல் வேல் கோர்ட்
+914545 247 770

சண்முகானந்த பவன்
+914545 242 267

ஹோட்டல் கண்பத்
+914545 242 294

ஹோட்டல் ராஜலட்சுமி
+914545 243 313

Comments