அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோவில்

மூலவர் : அரவிந்த லோசனர்

உற்சவர் : செந்தாமரைக் கண்ணன்

அம்மன்/தாயார் : கருந்தடங்கண்ணி
-

தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருத்தொலைவில்லி மங்கலம்

ஊர் : திருதொலைவிலிமங்கலம்

மாவட்டம் : தூத்துக்குடி

மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

மங்களாசாஸனம்


நம்மாழ்வார்


திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
திருந்து வாழ்பொருநல் வடகரை வண் துலைவில்லி மங்கலம்
கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொழும்
இருந்திருந்தரவிந்த லோசன வென்றன்றே நைந்து இரங்குமே.


-நம்மாழ்வார்


தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதிகளில் இது 9வது திருப்பதி, இரட்டைத் திருப்பதியில் இது 2வது திருப்பதி. நவகிரங்களில் இது கேது தலம்.

இங்கு பெருமாள் குப்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

தலபெருமை:

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.


இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.


நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி


1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்


2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)


3. செவ்வாய் : திருக்கோளுர்


4. புதன் : திருப்புளியங்குடி


5. குரு : ஆழ்வார்திருநகரி


6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை


7. சனி : பெருங்குளம்


8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)


9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

தல வரலாறு:

தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.


திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

ஆன்மீகச் சிந்தனை :


நானாகிய ஆன்மாவை எவ்வாறு அறிவது? - ரமணர்


ரமணர்: நான் என்பதன் யதார்த்தப் பொருளாம் அகண்ட உணர்வு நிர்விகாரமாய் என்றும் உளது. அதை விஷயீகரித்துத் (எதிரிட்டு ஓர் விஷயமாய்) தெரிந்துகொள்ள முடியாது, புதிதாய்த் தோன்றும் ஓர் உணர்வுமல்ல அது. புதிதாய்த் தோன்றுவதாயின் மறைந்தும் போகும். எப்போதும் எங்கும் இருப்பது இதுவே எனினும், 'தெரியவில்லையே' என்கிறோம். ஆதலால், நீங்காத இருப்பாம் அதை மறைக்கும் தடை எதோ தோன்றுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. அஞ்ஞானமே அத்தடை. 'தெரியவில்லை' என்று நினைக்கும் அந்த அஞ்ஞான விருத்திக்கு இடம் கொடாதிருந்தால் தானாம் ஆன்மா தானே விளங்கும். அறிவும் அறியாமையும் ஆன்மாவுக்கு அல்ல. செயற்கைத் தோற்றமாம் அவற்றை அவற்றைக் களைந்தால் இயல்பாம் ஆன்மா என்றென்றும் விளங்கும். அவ்வளவேதான்.

Comments