திருப்பனந்தாள் காசி மடம்

காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத் தவிர இந்தக் காசி மடம். கங்கையின் கரையிலேயே அனேகக் கோவில்கள். அதற்கு என்று உள்ள மடங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இந்தக் காசி மடம் ஸ்தாபித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? "ஸ்ரீகுமரகுருபரஸ்வாமிகள்" தான் 17-வது நூற்றாண்டில் இதை ஸ்தாபித்தார். 1625-ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவின் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர். திருச்செந்தூரிலேயே தங்கி முருகனை வழிபட்டு வந்த குமரகுருபரர் தல யாத்திரை கிளம்பும் சமயம், அசரீரியாக இறைவன், "நீ யாத்திரை செல்லும் சமயம் எந்த இடத்தில் உன் வாக்குத் தடை பெறுகிறதோ, அவரே உன் குரு. ஞான உபதேசம் அவரிடம் பெற்றுக்கொள்" என உத்தரவு வர மகிழ்ந்து தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் வந்து "கைலைக்கலம்பகம்" என்னும் நூலை இயற்றினார். இதன் ஒரு பகுதிதான் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.



பின் மதுரை வந்தார்,. திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம் அது. குமரகுருபரர் திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்க நாயக்கர் கனவில் மீனாட்சி அம்மை வந்து, "திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்கும் குமரகுருபரர் பெரிய மகான். புலமை மிகுந்தவரும் கூட.அவரை உரிய மரியாதையுடன் அழைத்து வந்து என் சந்நிதியில் அமர்த்தி என் பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்வாயாக." என்று கூறி மறைந்தாள். அம்மன் வாக்குப் படியே திருமலை மன்னர் குமரகுருபரரை அழைத்து வந்து சந்நிதியில் அமர்த்தி அரங்கேற்றம் நிகழச் செய்தார். அர்ச்சகரின் சிறு பெண் குழந்தை வடிவில் வந்த அன்னை மீனாட்சி மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்தாள். மதுரையில் இருந்து புறப்பட்ட குமரகுருபரர் திருவாரூரை அடைந்து தருமபுர ஆதீன மாசிலாமணி தேசிக ஸ்வாமிகளைச் சந்தித்தார். ஆதீனத்தின் ஆதி முதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளுபதேசம் பெற்ற இந்த ஊரில் மாசிலாமணி தேசிகர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி வரும்போது திடீரென குமரகுருபரர் வாக்கு தடை பெற்றது. "இவரே தன் குரு" எனத் தெளிந்த குமரகுருபரர் அவரிடம் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்படைத்தார்.இப்போதும் தருமபுர ஆதீனத்துடன் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்கிறார்கள்.



மாசிலாமணி தேசிக ஸ்வாமிகள் குமரகுருபரரைக் காசி சென்று வருமாறு பணிக்க,முதலில் கொஞ்சம் தயங்கிய குமரகுருபரர், பின் குருவே துணை என்று நம்பிக் கிளம்பச் சம்மதித்தார். காடு, மலைகளையும், சிங்கம், புலி போன்ற மிருகங்களையும் எதிர்கொண்டு காசிக்குச் சென்று வரக் கிளம்பினார். வழியில் திருவேங்கட மலைவாழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த சிங்கத்தைத் தன் தவ வலிமையால் அடக்கி அதன் மீது அமர்ந்தார். ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் படம் பலர் வீட்டில் இருக்கும். பார்த்திருப்பீர்கள். காசி நகரை குமரகுருபரர் அடைந்த சமயம் டெல்லியை ஆண்டு வந்த பாதுஷா இவரின் ஆற்றலை உணர்ந்து காசியில் கருடன் வட்டமிடும் இடங்களை இவரின் சமயப்பணிக்குத் தருவதாய் ஒப்புக் கொண்டார். காசியில் தான் தனக்கு இந்துஸ்தானியில் புலமை வேண்டி ஸ்ரீகுமரகுருபரர் "சகலகலாவல்லி மாலை" பாடி இந்துஸ்தானியில் பேசும் திறன் பெற்றார்.



காசியில் "பூ மணக்காது, பிணம் எரியும்போது நாறாது, கருடன் வட்டமிடாது, பசுமாடு முட்டாது," என்பார்கள். இந்நிலையில் கருடன் எப்படிப் பறந்து இவருக்கு இடத்தைக் காட்டுவது என எல்லாரும் திகைக்க, முனிவரின் தவ வலிமையால் கருடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டது. பாதுஷா தன் வாக்குறுதியை நிறைவேற்ற குமரகுருபரர் "ஸ்ரீகுமாரசாமி மடம்" என்ற பெயரில் ஒரு மடத்தை அங்கே நிறுவி ஆன்மீகப் பணி ஆற்றத் தொடங்கினார். கங்கைக் கரையில் பழுதடைந்திருந்த கேதாரீஸ்வரர் கோவிலைத் தென்னிந்திய முறைப்படிச் செப்பனிட்டுக் கும்பாபிஷேஹம் செய்வித்தார். இன்றைக்கும் "கேதார் காட்" டில் உள்ள கேதாரீஸ்வரர் கோவில் திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணலாம். பூஜை செய்பவர்களும் தமிழர்கள் தாம்.



குருநாதரைப் பார்க்க வேண்டி பொன், பொருளோடு வந்த குமரகுருபரரை மாசிலாமணி தேசிகர் காசியிலேயே அவற்றை அறப்பணிகளுக்குச் செலவிடுமாறு சொல்லித் திரும்ப அனுப்பினார். 1688-ம் ஆண்டு தன் சீடர்களுள் ஒருவரான சொக்க நாதரைத் தன் வாரிசாக நியமித்து விட்டுப் பூரணத்தில் இணைந்தார். முதல் 5 பரம்பரையில் வந்தவர்கள் காசியிலேயே தங்கி இருந்தார்கள். 6-வது குரு பரம்பரையில் தான் திருப்பனந்தாளிலும் காசிமடம் ஸ்தாபிக்கப்பட்டது. காரணம் சரபோஜி மஹாராஜா. இவர் அன்னம் பாலிக்கக் கொடுத்த பல கிராமங்களின் நிர்வாகத்தைக் கவனிக்கத் திருப்பனந்தாளிலும் காசி மடம் ஏற்பட்டது.



இதன் 20-வது மஹாசந்நிதானமாக இருந்த ஸ்ரீ அருள்நம்பித் தம்பிரான் காலத்தில் மடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள காசித் திருமடங்களின் அறப்பணிகள் இவர் காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டது. 21-வது பொறுப்பில் இப்போது இருப்பவர் காசிவாசி முத்துக்குமாரஸ்வாமித் தம்பிரான். ஸ்ரீகுமரகுருபரர் காலத்தில் இருந்து எல்லாப் பணிகளும் இன்றைக்கும் குறைவின்றி நடந்து வருகிறது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது காசிமடம். திருப்பனந்தாளிலேயே நிறையப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்க ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கிறார்கள். தமிழ் இலக்கிய நூல்களும் தரமாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் படுகிறது. "ஸ்ரீகுமரகுருபரர் "பெயரில் ஒரு மாதப் பத்திரிகையும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் மாபெரும் சேவை செய்து வருகிறது. கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேஹத்திற்குத் தேவையான "அஷ்டபந்தன மருந்து" இங்குக் குறைந்த அளவு தொகை செலுத்திப் பெறலாம். மருந்து தயாரிக்கும் செலவு அதிகம் என்றாலும் ஆலயப் பணிகளும் ஆன்மீகமும் சிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு சேவையாகச் செய்து வருகிறார்கள். கங்கைக் கரையில் கேதார்காட் போய்க் காசி மடம், கேதார் நாத் கோவில், அங்கு சாயங்காலம் சூரியன் மறையும் சமயம் கங்கைக்கும், கேதாரீஸ்வரருக்கும் ஒரே சமயம் காட்டப்படும் ஆரத்தி எல்லாம் தரிசனம் செய்யலாம்.

Comments