சித்தர் வழியில்…., சிவசாமி சித்தர்

சித்தர் வழியில்…., சிவசாமி சித்தர்

சுடரெழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சமும் கண்ட கண்டறிந்தேன் ஞானியே
சித்தர்களின் கண்டுபிடிப்பில் மிகவும் அற்புதமானது காயகல்பம். மனித உடல் மூப்படையாமல், என்றும் மாறாத இளமையோடு வாழ்திட சித்தர்கள் கண்டறிந்து வழங்கிய காயகல்பம் மிகவும் பயனுள்ளது.காயகல்ப தேகம் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் பெற்றுவிட முடியாது.இதற்காக கடுமையான முயற்சிகள் செய்ய வேண்டும். அந்த காயகல்ப தேகம் என்பதைப் பற்றி உரோமரிஷி முனி கூறுவதைப் பார்ப்போம்.

“ தேகம் என்பது இருள் தேகம்,
மருள் தேகம், சுத்த தேகம்,
பிரணவ தேகம், ஞான தேகம்”
--என ஐந்து வகைப்படும்.

இதில், தூல தேகத்தில் மலக்குற்றம், நாவில் குற்றம், கண்டத்தில் கபக் குற்றம், மேல் மூலத்தில் திரைக் குற்றம், மனதில் ஆணவ குற்றம் இவற்றோடு நான் என்கிற அகம்பாவத்தோடு இருப்பது இருள் தேகம்.

மாயை சுழற்சியில் தனக்கு இன்னது விளையும் அறியாமல் அகந்தையோடிருப்பது மருள் தேகம்.காணுகின்ற எல்லாப் பொருட்களையும் அருள் வடிவமாக, தூய்மையாகப் பார்ப்பதுதான் அருள் தேகமாகும். ஒருவர் அருள் தேகம் கொண்டவராக இருந்தால் அவர் மனதில் கரணங்கள் ஓய்ந்து அறிவு விளக்கமாகி இருக்கும். நிழலற்ற தேகம்தான் பிரணவ தேகம். இத்தேகம் பெறும் நிலைக்கு ஒருவர் வந்துவிட்டால் இவரா மனதில் தோன்றுகிற உருவத்தைப் பெற்றிட முடியம்.

ஞானதேகம் என்பது கண்ணுக்குப் புலப்படாத மாயத் தேகமாகும். இந்தத் தேகம் அறிவுக்கு
மட்டுமே அகப்படும்.

சித்து நிலையில் உச்சமான இந்த ஞான தேகத்தைப் பெற்றிட கடுமையான பயிற்சியும் பல காய கல்பங்களையும் சாப்பிட்டு வரவேண்டும் என்கிறார் உரோமரிஷி. அதற்காக அவர் சொல்லும் கற்ப முறையைப் பார்ப்போம்.

‘’ஏரழிஞ்சி என்றொரு மூலிகை மரம் இருக்கிறது. அதன் கிளைகள் மஞ்சணத்தி விதைகள்
தேத்தான் கொட்டையைப் போலிருக்கும்.அந்த விதைகளைக் கொண்டு நல்லெண்ணெயில்
ஊற வைத்து குளித் தைலம் இறக்க வேண்டும். பிறகு அதனை ஒரு அகண்டத்தில் விட்டு
தாமரைத் தண்டின் நூலால் திரிபோட்டு தீபமேற்ற வேண்டும். அப்போது அந்த அகண்டத்தில்
மை படியும்.அந்த மையை எடுத்து நெற்றிக்கண்ணில் திலகமாக இட்டு கொண்டால் தொலை
தூரப் பொருட்களும், பிறர் கண்ணுக்கு தெரியாதபடி மறைத்து உலவ முடியும் என்கிறார்
உரோமரிஷி சித்தர்.

இப்படி கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும், அற்புதங்களும் நிகழ்த்திய சற்குரு சிவசாமி சித்தர். இவர் சம காலத்து சித்தர் என்பதால் காஞ்புரத்தில் நிகழ்ந்த அற்புதங்களை காஞ்சி மக்கள் பலர் அறிவர். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலும் காஞ்சிபுரம் தெருக்களிலும், ஒரு பிச்சைக்காரரைப் போலும், பித்தனைப் போலும் சுற்றித் திரிந்தார் சிவசாமி சித்தர்.

கருத்த தேகமும் வெள்ளைத் தாடியும், தீட்சணய பார்வையுமாக இருந்த சித்தர், உடலில் ஒரு
அழுக்கான கந்தல் ஆடையைச் சுற்றியிருப்பார். கைகளிலும், இடுப்பிலும் குப்பை கூளங்கள்
எப்போதும் இருக்கும், வாயிலிருந்து உமிழ்நீர் சுரந்துகொண்டிருக்கும். அது அவரது உடலில் இறங்கி வழிந்து கொண்டேயிருக்கும். சித்தரின் இந்தக்கோலம் அவரை சாதாரண மனிதர்கள் யாரும் நெருங்கிட -கூடாது என்பதற்காகத்தான் என்கிறார் அவரது சீடர்களில் ஒருவரான இராமலிங்கம்.

சிவசாமி சித்தர் எப்போது காஞ்சிபுரம் வந்தார்,அவரோட சொந்த ஊர் எதுவென யாருக்கும் தெரியாது. என்னுடைய 19 வயதில் நான் அவரை முதன் முதலாக உணர்ந்தேன். அப்ப அவருடைய அழுக்கு உடையோடு உடம்பு முழுவதும் குப்பை கூளங்களும், எச்சிலுமாக சுற்றிக்கொண்டு இருப்பார். நிறையப்பேர் அவரைப் பைத்தியம் என்று நினைந்து விரட்டுவார்கள். அப்ப நான் பெரியார் கட்சியான தி.க. கட்சியில் இருந்ததால் சாமி, சித்தர் என்று ஏமாற்று ஆசாமி, பிராடு பண்ணுகிறவர்கள் என்று திட்டுவேன்

அந்த மாதிரியான நேரத்துல ஒருநாள் என் எதிர்ல சித்தர் வந்துக்கிட்டு இருக்கும்போது
‘’ இவனெல்லாம் ஒரு சித்தனா! இவனைக் கல்லால் அடிச்சி துரத்துனும்னு நினைச்சிக்கிட்டே நடந்து போனேன்.அப்ப என் எதிரே வந்து “ என்ன இராமலிங்கம் இவனெல்லாம் ஒரு சித்தனா.. இவன கல்லால அடிச்சித் துரத்தணும்னு நினைக்கறியா? நீ என்னை அடிக்கமாட்டே என்னோட சிஷ்யனாகப் போறேன் ‘’ என்றார். எப்படி இவர் நம் மனதில் நினைத்ததை சொல்கிறார் என்று எண்ணியபோது, அன்று காலையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி…, “ நீ எங்கே போறே… என்ன பண்ற என்ன நினைக்கிறேன்னு எல்லாமும் எனக்கு தெரியும்…” னு சொல்லி என்னைப் பார்த்துச் சிரிச்சாரு.

இப்படி கூறியர் பெரிய காஞ்சிபுரம் சேர்ந்த இராமலிங்கம் என்பார்

Comments

Post a Comment