புலவர் தலை மலை கண்ட தேவர்

தலை மலை கண்ட தேவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவ்ர் கொள்ளையும் கொலையும் தொழிலாகக் கொண்டவர்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருந்த போதே இச்செயல்களை வெறுத்தார். சிவபெருமானை வணங்கினார். பெற்றோரும், உறவினர்களும் அதைக் கேலி செய்தனர். “உன்னுடைய சிவனே பிள்ளையை வெட்டிக் கறிசமைக்கச் சொன்னவர்தானே!” என எகத்தளமாகப் பேசினர்.

ஒரு நாள் ஒரு முனிவர் காட்டு வழி வந்தார். வழியில் ஒரு சிவ லிங்கத்தைப் பார்த்தவர் அங்கிருந்த வில்வ மரத்தின் இலைகளைப் பறித்து அர்ச்சித்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் தலைமலை கண்டன் முனிவரின் பாதங்களை வணங்கித் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டினான்.

“பார்ப்பதற்கு வேட்டையாடுபவன் போல இருக்கிறான்.; சிப்பிக்குள் முத்தா?” என்று வியந்தார். சிறுவனை வாழ்த்தி பஞ்சாட்சரத்தை உபதேசித்துவிட்டுச் சென்றார். “மலை மாதிரி தலைகளை வெட்டிக் குவித்து, குடும்பப் பெயரைக் காப்பாற்றுவான் என்று நினைத்து தலைமலை கண்டனென்று பெயர் வைத்தேன், இவன் சாமியாராட்டம் இப்படிச் சாப்பிடாமல் ஜபம் பண்ணுகிறானே” என்று தந்தை வருந்த,”கவலைப் படாதே, நல்ல காரியம் தானே செய்யரான். வயசானா புரிஞ்சுக்குவான்” என சமாதானம் சொன்னாள் பாட்டி. ஆனால், தலை மலை கண்டன் போக்கு மாற வில்லை. விபூதிப் பட்டையும் ஐந்தெழுத்து மந்திர ஜபமுமாக நாட்களைக் கழித்தான். பஞ்சாட்சர மந்திரம் ஒரு கோடி ஆனதும் அவ்ன் நாவில் கவிதை பொழியும் சக்தியை தந்தருளினார் ஈசன். தெய்வத்தை வாழ்த்தி படல்களைப் புனைந்து பாடும் சிறுவனைக் கண்ட ஊரார் வியந்து, “புலவர் தலைமலை கண்டர்” என்று குறிப்பிடத் தொடங்கினர்.

’திருமணம் செய்து வைத்தால் ‘நமசிவாய நமசிவாய’ என்று எப்போதும் ஜபம் செய்துவருவதை நிறுத்திவிடுவான்; குடும்பப் பொறுப்பு வரும்’ என்று எண்ணிய பெற்றோர் அழகிலும், அறிவிலும், ஒழுக்கத்திலும், நற்பண்புகளிலும் சிறந்த மரகதம் என்ற மங்கை நல்லாளை மகனுக்கு மணம் முடித்தனர்.

மரகதத்திற்கு ஏழு தமயன்மார். எழுவருக்கும் களவுதான் தொழில். பெற்றோர் காலமான பிறகு, சீதனப் பொருள்களை விற்று சில காலம் வாழ்க்கை நடத்தினார் புலவர். அவையெல்லாம் தீர்ந்ததும் கடன் வாங்க்க் காலம் கழித்தார்.

’கடன் கொடுப்பார் இனியாரும் இல்லை ’ என்ற நிலைமை வந்தது. வீட்டு நிலைமையை உடன் பிறந்தவர்களிடம் கூறினாள் மரகதம். அவர்கள் வந்து, “மச்சான்! வா எங்களோடு, ஊரில் பணத்தைக் குவித்து வைத்து ஒருத்தருக்கும் உதவாமல் வாழ்கிறார்கள். அவர்களிடம் கொள்ளையடித்தால் குற்றமில்லை.” என்று கூறி தங்களோடு வறுமாறு அழைத்தனர்.

“திருமங்கையாழ்வார் களவாடி வாழவில்லையா? மூர்த்தி நாயனார் சூதாடவில்லையா? போர் வீரர்கள் பல உயிரைக் கொல்வதை வீரம் என்று வாயாரப் புகழ்கிறோம். நமக்குக் கடவுள் கொடுத்த பிழைப்பு இது. என் அண்ணன்களுடன் சேர்ந்து, கொலையைத் தவிர்த்து திருட்டை மட்டுமாவது கைக் கொள்ளுங்கள்” என்று மரகதமும் கெஞ்சினாள். ஆனால், புலவர் தலைமலை அவர்கள் பேச்சுக்கு உடன்படவில்லை.

புலவர் கல்லும் கனியும்படி ‘மருதூரந்தாதி’ பாடி இறைவனிடம் “ஞான சம்பந்தருக்கு, திருநாவுக்கரசருக்கு, புகழ்த் துணை நாயனாருக்குப் பொருள் தந்து உதவியது போல் எனக்கும் கருணை காட்டக் கூடாதா?” என இறைஞ்சினார். எதுவும் நடக்கவில்லை.

வேறு வழியின்றி ஒரு அமாவாசையன்று மைத்துனர்களோடு களவுத் தொழிலுக்குப் புறப்பட்டார். அவர்கள் குறி வைத்திருந்தது திருப்புவனத்தில் ஒரு செல்வந்தர் மாளிகை. ‘தன் எதிரில் கொலை செய்யக் கூடாது’ என்ற நிபந்தனையை மைத்துனர்கள் ஏற்றுக் கொண்டனர்.

திருப்புவனம் தனவந்தர் சிவ பக்தி கொண்ட பண்டிதர். தினமும் உறங்கச் செல்லுமுன் ஈசன் மீது ஒரு பாடல் பாடிவிட்டுத் தான் படுப்பார். பன்னீரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கம் தொடர்ந்தது. ஒரு நாள்

“தலையில் இரந்துண்பான் தன்னுடலில் பாதி
மலை மகளுக்கு ஈந்து மகிழ்வான் உடையில்”

என்பது வரை பாடினார். அதன் பிறகு என்ன முயன்றும் அடுத்த இரண்டடி வரவே இல்லை. ‘தன் புலமை இப்படி அரை குறையாக இருக்கிறதே’ என்ற வேதனை அவரை உருக்கியது. நோய்வாய்ப் பட்டு படுக்கையில் விழுந்தார். சதா அவர் வாய் அந்த முடிக்கப் படாத பாதிப் பாடலை முணு முணுத்துக் கொண்டிருக்கும்.

புறக்கடை வழியாக புலவர் தலை மலை கண்டர் தன் மைத்துனர்களோடு செல்வந்தர் இல்லத்தினுள் நுழைந்தனர். அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு மைத்துனர்கள் விலையுயர்ந்த பொருட்களைத் திருடும் போது சில பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டன. சத்தம் கேட்டுக் காவலர்கள் வேல்கம்புகள், தீப்பந்தங்களோடு விரைந்துவர, தப்பித்தால் போதும் என மைத்துனர்கள் தலை தெறிக்க ஓடினர். அவரை நிறுத்தியிருந்த இடம் பணக்காரரின் படுக்கையறை வாயிலோரம். தன் நிலை இப்படிக் கீழ்த்தரமானதே என நொந்துகொண்டே நின்றிருந்தார் புலவர்.

தனவந்தர் வழக்கப் படி அரைப் பாடலைப் பாட புலவர் தலைமலை தன் நிலை மறந்து, “இருப்பு அன மேனியானார் என்றாலோ” என்று தொடர்ந்து பாட, பணக்காரர் துள்ளியெழுந்து “ஆமாம் திருப்புவன ஈசன் திறம்” என்று முடித்தபடி வெளியெ வந்து பார்த்தார். இருட்டில் நின்றிருந்த புலவரைக் கட்டித்தழுவி, “தாங்கள் யார்? சிவ பெருமானே என் வருத்தம் தீர்க்க புலவர் வடிவில் வந்திருக்கிறாரோ? தங்களுக்கு என்ன கொடுத்தாலும் தகும்” என வியப்புடன் சொன்னார்.

புலவர் “முதலில் தீபத்தை ஏற்றுங்கள்” நான் ஈசனல்ல. அவர் அடியார் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியையும் இழந்தவன். வயிற்றுப் பசிக்குத் திருட வந்தவன்” என்றார்.

விளக்கு ஏற்றப்பட்டது. புலவர் அருகே கொள்ளையடித்த பொருள்கள் இறைந்து கிடந்தன. நடந்ததைச் சொன்னார் புலவர். “புலவரே! திருப்புவனத்து இறைவன் என் மன நோய் தீர்க்கத் தங்களை இங்கே அனுப்பியிருக்கிறான். இந்த இல்லத்தில் உள்ளதெல்லாம் உங்களுக்குச் சொந்தம்” என்று அவரை அன்புடன் அழைத்துச் சென்று முதலில் பசியாற்றினார் செல்வந்தர். அதன் பிறகு, புலவர் தலைமலை கண்டர் மனைவியையும், மைத்துனர்களையும் அழைத்துவரச் செய்தார். மைத்துனர்கள் திருந்தி தனவந்தரின் பண்ணையில் பணி புரிந்தனர். தனவந்தரும் புலவரும் போட்டி போட்டுக் கொண்டு சிவ பெருமான் மீது பாமாலை பொழிந்தனர்.

புலவர் தலைமலை கண்டர் பாடிய ‘மருதூர் யமக அந்தாதி’ தமிழ்ப் பண்டிதர்களால் போறப்பட்டு வருகிறது.

அறியாப்பருவத்து அடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப்
புறப்பனிப் பற்று விட்டாங்கு.
-----------------------------------------நாலடியார் 171 வது செய்யுள்

இதன் விளக்கம்: கொளுத்தும் வெயில் பட்டவுடன் புல்லின் மேல் படிந்துள்ள பனி தானாகவே விலகி விடும். இளமையில் தீயவர்களோடு சேர்ந்து செய்யும் பாவச் செயல்கள் நல்லோர்களுடைய சேர்க்கையால் தானாகவே விலகி விடும்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கார்
பேதையின் பேதையார் இல்.
-------------------------------------------------------------- திருக்குறள்- 834 வது செய்யுள்.

இதன் விளக்கம்: நூல்களை ஓதியும், உணர்ந்தும், மற்றவருக்கு எடுத்துச் சொல்லியும் தான் கற்றவாறு அடங்கி நடக்காத பேதைகள் போல் வேறு பேதையர் இருக்க முடியாது.

Comments

Post a Comment