வைணவத்திலும் பிரதோஷம்

அரக்கன் ஆன இரண்யன் தனக்கு மரணம், மனிதர்களாலோ, தேவர்களாலோ, விலங்குகளாலோ ஏற்படக் கூடாது எனவும், அப்படி ஏற்படும் மரணம், காலை, மாலை, இரவு போன்றநேரங்களிலும் ஏற்படக் கூடாது எனவும், ஆயுதங்களால் மரணம் நேரக் கூடாது எனவும், தான் விண்ணிலோ, மண்ணிலோ ரத்தம் சிந்தக் கூடாது எனவும் வரம் வாங்கி இருந்தான். இத்தகைய வரத்தால் தான் அழியாமல் உயிர் வாழ்வோம் என்ற அகம்பாவம் கொண்டும் வாழ்ந்து வந்தான். ஈரேழு பதிநான்கு உலகிலும், இரண்யனின் நாமத்தையே அனைவரும் முழங்கவேண்டும் எனவும், அனைத்து மரியாதைகளும், வழிபாடுகளும் தனக்கே சேரவேண்டும் எனவும் ஆக்ஞை பிறப்பித்திருந்தான்.

அவன் அருமைக் குமாரன் ஆன பிரஹலாதனோ எந்நேரமும் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ததோடு தன்னுடன் இருக்கும் நண்பர்களையும், தன் ஆசிரியப் பெருமக்களையும் ஹரிநாமத்தையே முழங்கச் செய்தான். பயந்த ஆசிரியர்கள் மன்னனிடம் தெரிவிக்க தகப்பனுக்கும் மகனுக்கும் சொற்போர். மகனைத் தன் நாமம் ஆன "ஓம் நமோ ஹிரண்யகசிபுவாய நமஹ" என்பதைச் சொல்லக் கட்டாயப் படுத்தினான் தந்தை. மகனோ மறுத்து ஹரிநாமத்தைத் தவிர வேறொரு நாமம் சொல்லமாட்டேன் என்று, "ஓம் நமோ நாராயணாய!" என்றே முழங்க, இரண்ய கசிபு மகனிடம் "எங்கே இருக்கிறான் உன் ஹரி?" என்று கேட்டான் கோபத்துடன்.

அவன் இல்லாத இடமே இல்லை என்று பிரஹலாதன் கூற, "எனில் இந்தத் தூணிலும் இருக்கிறானா?" என்று கேட்டவண்ணம், அருகே இருந்த தூண் ஒன்றைக் கால்களால் எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் பிளந்தது, நரஹரி தோன்றினார் . நறநறவெனப்பற்களைக் கோபத்தோடு கடித்த வண்ணம்,ஹிரண்யனைத் தூக்கித் தன் தொடையில் போட்டுக்கொண்டு கை நகங்களால் அவன் குடலைக் கிழித்து ரத்தத்தை உறிஞ்சினார். இந்த ஆளரிநாதன் தோன்றிய நேரம் காலை இல்லை, மாலை இல்லை, இரவும் இல்லை. சந்திவேளை. இரவும் , மாலையும் கூடும் நேரம். இரவு ஆரம்பிக்கும் நேரம், சந்தியா காலத்தில். அதுவே பிரதோஷ வேளையாகும். ஆகவே தீமைகள் தகர்ந்திட அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் மற்ற சந்நிதிகளைத் திரையிட்டு மறைத்துவிட்டு ஆளரிநாதருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து ஆராதிக்கின்றனர். இது பல கோயில்களிலும் கண்டிருக்கிறோம். எல்லாமே ஒன்றான பரம்பொருளாக இறைவன் விளங்கும் நேரமே பிரதோஷ காலம்.

Comments

  1. எல்லாமே ஒன்றான பரம்பொருளாக இறைவன் விளங்கும் நேரமே பிரதோஷ காலம்.
    very important.

    ReplyDelete

Post a Comment