வாரியாரின் வாழ்க்கைப்பாதையில்...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு
திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப்
பெரியவருக்கு வாரியார் மீது தனிப்பட்ட கருணை ஏற்பட்டது. அங்கு ராமாயண
விரிவுரையும் செய்தார். அதன் நிறைவு விழாவன்று, சுவாமி நானூறு ரூபாய்
மதிப்புள்ள சாதராவை அனுப்பி ஆசியளித்தார். ஒருமுறை பெரியவர் சென்னை
சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தார். வாரியார் அவரைக் காண விரும்பினார்.
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ராஜகோபுரத் திருப்பணிக்காக இருமுறை தொடர்
விரிவுரை செய்து உதவியதால், அக்கோயிலின் அறங்காவலர் துரைசாமி ஐயங்கார்,
வாரியாருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். அவரிடம் பெரியவரை
எப்போது தரிசிக்க முடியும் என்று அறிந்து வருமாறு ஆள்அனுப்பினார்
வாரியார். அவர் போய், மறுநாள் மாலை மூன்று மணிக்கு பெரியவரைத் தரிசிக்க
நேரம் கிடைத்துள்ளதாக தகவல் கேட்டு வந்தார்.

மறுநாள் மாலை மூன்று மணிக்குச் சமஸ்கிருத கல்லூரிக்குச் சென்றார் வாரியார். அங்கிருந்த மடத்து காரியஸ்தர்,"" நீங்கள் வந்திருக்கின்றீர்களா என்று பெரியவாள், இரண்டு
மூன்று முறை கேட்டுவிட்டார்கள். சீக்கிரமாகப் போங்கள்,'' என்றார்.வாரியார் விரைந்து சென்றார். அங்கே காஞ்சிபெரியவர் மணல் கேணி (சுவாமிகள் குளிப்பதற்கான கிணறு)அருகே அமர்ந்திருந்தார்.""நீங்கள் விழுந்து வணங்கக் கூடாதாம். இது சுவாமிகளின் கட்டளை!'' என்று மடத்துக் காரியஸ்தர் வாரியாரிடம் ஏற்கனவே கூறியிருந்தார்.


ஆனால்,வாரியார் பெரியவரைக் கண்டதும், அடியற்ற மரம் போல வீழ்ந்து நமஸ்காரம்
செய்தார். பெரியவர் வாரியாரிடம்,""நீ மார்பில் சிவலிங்கம் தரித்துக் கொண்டிருக்கிற சைவன். விழுந்து வணங்கினால் சிவலிங்கமும் கீழே விழும். அதனால், விழுந்து வணங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே? அவர்கள் சொல்லவில்லையா?'' என்று கேட்டார். வாரியார் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றார். பெரியவர் வாரியாரிடம், ""உன் தம்பி திருமாமணாளன் சவுக்கியமா?'' என்று கேட்டார். இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார் வாரியார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மின்னல் என்னும் ஊரில்,
வாரியாரின் தம்பி திருமாமணாளன், மாணவர்களுக்கு தேவாரம், திருப்புகழ் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, பெரியவர் அந்த ஊரில் தங்கியிருந்தார். அவருடைய பூஜையில் திருமாமணாளன் தேவாரம், திருப்புகழ் பாடினார். அங்கிருந்தவர்கள், ""இவர் வாரியார் தம்பி திருமாமணாளன்'' என்று பெரியவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த ஒருமுறை தான் காஞ்சிப்பெரியவர்வாரியாரின் தம்பியைச் சந்திருந்தார். அதன்பிறகு
சந்திக்கவே இல்லை. அவரது பெயரும் பத்திரிகையில் வரக்கூடிய அளவுக்கு பிரபலமானது அல்ல. அவரிடம் பழகியவர்கள் கூட "திரு' என்ற சொல்லை அடைமொழி என்று எண்ணிக் கொண்டு "மாமணவாளன்' என்று தான் சொல்வார்கள். ஆனால், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வாரியாரிடம் ""தம்பி திருமாமணாளன் சுகமா?'' என்று கேட்ட பெரியவரின் நினைவாற்றலை எண்ணி வியப்படைந்தார். இந்த சமயத்தில், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அங்கு வந்தார். பெரியவரிடம், ""இவர் வயலூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணி செய்தார்,'' என்று சொல்ல ஆரம்பித்ததுமே, பெரியவர் சிரித்துக் கொண்டே, ""அதெல்லாம் சரி. உங்கள் ஊரில் செய்த திருப்பணியைச் சொல்லவில்லையே?'' என்று கேட்டு அவரை மடக்கினார். அவருடைய ஊர் மோகனூர். அங்குஅருணகிரிநாதருக்கு அறச்சாலைத் திருப்பணி செய்திருந்தார் வாரியார். அவ்வழியாகச் சென்ற பெரியவர் ஒருமுறை அங்கு தங்கி பூஜை செய்தார். அதைத் தான் அப்படி குறிப்பிட்டு,
""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' என்று சொல்லாமல்
சொன்னார்.

Comments